4.1 சதக இலக்கியம்

சதகம் என்பதுஅகம், புறம் என்னும் இரண்டு பொருள்களுள் யாதாயினும் ஒன்று பற்றிப் பாடப்படும் நூறு செய்யுட்களை உடைய நூலாகும். இதனை,

விழையுமொரு பொருள்மேல் தழைய உரைத்தல் சதகமென்ப

என்னும் இலக்கண விளக்கச் சூத்திரத்தால் உணரலாம். இது சதகம் என்று வட சொல்லால் குறிக்கப்படும். திருவாசகத்தில் மாணிக்கவாசகர் சிவபெருமானைப்பாடிய ஒரு பகுதி திருச்சதகம் எனப்பெயர் பெறும். பிற்காலத்தில் தெய்வங்களையும், வள்ளல்களையும், சிற்றரசர்களையும் சிறப்பித்துப் பாடப்பட்ட சதகங்கள் பல உண்டு. திண்ணைப் பள்ளிக் கூடங்களில் சதகம் கற்பது கட்டாயமாக இருந்தது. சதகத்தில் நீதிகள் பல நல்ல உவமைகளோடு உணர்த்தப்பட்டன. அனைவரும் கற்பதற்கு உரிய வகையில் சதக இலக்கியங்களின் நடை எளிமையும் ஓட்டமும் உடையதாய் இருந்தது. எதுகை, மோனைகள் மனப்பாடம் செய்வதற்கு உதவியாக அமைந்துள்ளன. தமிழ்ச் செய்யுட்களின் நடை படிப்படியாக எளிமை பெற்று வளர்ந்த வளர்ச்சியை அந்த நூல்களில் காணலாம் என்கிறார் டாக்டர். மு.வ.

திண்ணைப் பள்ளிக் கூடங்கள்

இறைவனைப் போற்றிப் புகழ்வன பக்திச் சதகங்கள், வாழ்க்கையைக் கூறுவன வாழ்வியல் சதகங்கள், வரலாற்றை விளக்குவன வரலாற்றுச் சதகங்கள், உடல் நலம் பற்றி எடுத்து உரைப்பன மருத்துவச் சதகங்கள், காமச் சுவையைத் தருவன அகச் சதகங்கள், தனிப்பட்ட மனிதரின் வாழ்க்கையை எடுத்துரைப்பன. வாழ்க்கை வரலாற்றுச் சதகங்கள் எனச் சதக நூல்களைப் பட்டியலிடுகின்றார் ‘தமிழ்ச் சதக இலக்கியம்’ என்ற தன் நூலில் சு. சிவகாமி அவர்கள்.

சதகப் பாடல்களில் யாப்பு முறை பெரும்பாலும் ஆசிரிய விருத்தம், கலிவிருத்தம், கட்டளைக்கலித்துறையில் அமையும்.

4.1.1 சதக இலக்கிய வரலாறு

தமிழில் தோன்றிய முதல் சதக இலக்கியமாக மாணிக்கவாசகரின் திருச்சதகத்தைக் குறிப்பிடலாம். இச்சதகம் இயற்றப்பட்ட காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு. புலவர் ஒருவர் தாம் வாழ்ந்த நாட்டுப்புறப் பகுதியில் கண்டும் கேட்டும் அறிந்தசெய்திகளைத் தொகுத்து ஒரு சதகம் பாடினார். உடனே வேறு சில புலவர்களும் நாட்டின் மற்றப் பகுதிகளின் நிகழ்ச்சிகளைத் தொகுத்துச் சதகங்கள் பாடினர். அவ்வாறு தோன்றியவை தொண்டை மண்டல சதகம், பாண்டி மண்டல சதகம், சோழ மண்டல சதகம், கொங்கு மண்டல சதகம், ஈழ மண்டல சதகம், நந்தி மண்டல சதகம் ஆகிய சதக இலக்கியங்கள்.

அடியார்களின் வரலாறுகளைத் தொகுத்துக் கூறுவதில் ஆர்வம் கொண்ட ஒருவர் திருத்தொண்டர் சதகம் இயற்றினார். நாட்டில் உள்ள பல பழமொழிகளைத் தொகுத்து, அவற்றை அமைத்துப் பாடிய சதகங்களும் உள்ளன. தண்டலையார் சதகம், கோவிந்த சதகம் என்பவை பழமொழிகளை அமைத்து, தெய்வ வழிபாட்டுடன் சேர்த்து இயற்றப்பட்டவை. ஜெயங்கொண்டார் சதகத்தில் பழமொழிகளும் அவற்றை விளக்கும் கதைகளும் நிகழ்ச்சிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. வாழ்க்கைக்கு உரிய நீதிகளை எடுத்துக் கூறும் சதகங்கள் சில உண்டு. கைலாச நாதர் சதகம் என்பதில் நீதிகள் மட்டும் அல்லாமல், சோதிடம் உடலோம்பல் முதலியன பற்றிய கருத்துகளும் கூறப்பட்டுள்ளன.

ஆறைக்கிழாரின் கார் மண்டல சதகம் கி.பி. 12ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. படிக்காசுப் புலவரின் தொண்டை மண்டல சதகம், தண்டலையார் சதகம் ஆகியனவும், குணங்குடி மஸ்தான் சாகிபுவின், நந்தீசர் சதகம், முகைதீன் சதகம் ஆகியனவும் கி.பி. 17ஆம் நூற்றாண்டில் தோன்றியவை. அம்பலவாணக் கவிராயரின் அறப்பளீசுர சதகம், சாந்தலிங்க அடிகளாரின் வைராக்கிய சதகம் ஆகியன கி.பி. 18ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டவை. கி.பி. 19ஆம் நூற்றாண்டில் வெளிவந்த இயேசுநாதர் திருச்சதகம் என்பது யாழ்ப்பாணத்தாராகிய சதாசிவப் பிள்ளை இயேசுநாதரைப் போற்றி எழுதிய சதகமாகும்.

திருவண்ணாமலை, திருப்பதி முதலான தலங்களின் தெய்வங்களை வழிபடும் முறையில் அமைந்த சதகங்கள் பல உண்டு. இசுலாமிய மதத்தவர் பாடிய சதகங்கள் அகத்தீசர் சதகம், அரபிச் சதகம் முதலியன. இவ்வாறு பலவகைக் காரணம் பற்றியும், பல தலங்களைப் புகழ்ந்தும் பல வகைப் புலவர்களால் இயற்றப்பட்டவைதாம் சதக இலக்கியங்கள்.
 

4.1.2 அமைப்பும் சிறப்பும்

சதக இலக்கியங்கள் நூறு என்னும் எண்ணிக்கை அடிப்படையில் அமைந்தவை. எண்ணிக்கையால் பெயர் பெற்றவை. நூறு செய்யுட்கள் ஒவ்வொன்றிலும் இறுதியடியோ, அதற்கு முந்திய பகுதியோ ஒரே வகையான தொடரைப் பெற்று விளங்கும். பாடல் தோறும் பயின்று வரும். இவற்றை மகுடம் என்பர். எடுத்துக்காட்டாக, பாண்டி மண்டல சதகத்தின் செய்யுட்கள் பாண்டி மண்டலமே என்று முடியும். அறப்பளீசுர சதகத்தில் அறப்பளீசுர தேவனே என்று ஒவ்வொரு செய்யுளிலும் மகுடம் அமையும். ‘மயிலேறி விளையாடு குகனே புல் வயல் நீடுமலை மேவு குமரேசனே’ என்று குமரேச சதகத்தில் ஒவ்வொரு செய்யுளும் முடிவு பெறும்.

சதகப்பாடல்கள் நீதி இலக்கியத்திலும் சிறப்பிடம் பெறுகின்றன. நீதி கூறும் இலக்கியத்தில், சதகங்கள் மக்கள் செல்வாக்குப் பெற்றவை. கலைக்களஞ்சியம் போன்றவை இல்லாத அக்காலத்தில் கற்பவர்க்குத் தேவையான பல குறிப்புகளையும் இவ் விலக்கியங்களில் புலவர்கள் தந்திருக்கிறார்கள். திருமாலின் அவதாரங்களைக் குறித்தும், புராணங்கள் குறித்தும் அறங்கள் முப்பத்திரண்டு என்னென்ன என்பது பற்றியும் விளக்கம் தரப்படுகிறது. இவ்வாறு பலவற்றைக் கூறுவதற்குச் சதகச் செய்யுட்கள் பயன் பட்டன.

நூறு பழமொழிகளை நூறு செய்யுட்களில் அமைத்து இயற்றப்பட்ட நூல் தண்டலையார் சதகம் ஆகும். குமரேச சதகம், சிலவகை மனிதர்களைப் பேய்கள் என்று குறிப்பிட்டு அவர்களின் குற்றங்களை எடுத்துக் காட்டுகிறது. கடன் தந்தவர் வந்து திருப்பிக் கேட்கும்போது முகம் கடுகடுப்பவர் பேயாம். பெரிய பதவி வந்த போது செருக்கோடு நடப்பவர் பேய். பகைவரின் சொல்லை மதித்து அதில் மயங்கி அகப்படுவோர் பேய். இலஞ்சம் வாங்கும் ஆசையால் பிறர்க்குத் துன்பம் செய்பவர் பேய். மனைவி வீட்டில் இருக்கப் பரத்தையரை நாடிச் செல்வோர் பேய். இவ்வாறு நீதிகள் வெவ்வேறு வகையாக உணர்த்தப்படுதல் காணலாம்.
 

4.1.3 ஆசிரியர்

அறப்பளீசுர சதகத்தின் ஆசிரியர் அம்பலவாணக் கவிராயர் என்பவர். இவர் சோழநாட்டிலே தில்லையாடி என்னும் ஊரிலே வேளாளர் குலத்திலே பிறந்தவர். இவர் தந்தையார் இராம நாடகம், சீர்காழித் தலபுராணம் என்னும் அரிய நூல்களை இயற்றிப் புகழ் பெற்ற அருணாசலக் கவிராயர் ஆவார். அவருடைய மூத்தமகன் இவர். இவர் காலம் ஏறக்குறைய நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முற்பட்டது. இவர் கலைகளையும் நன்கு கற்றவர் என்பது இந்நூலில் வரும் பாடல்களால் தெரிய வருகிறது. இவர் சிவபக்தி நிரம்பியவர் என்பதும் சைவ சமயப்பற்று மிக்கவர் என்பதும் இந்நூலில் வரும் பல பாடல்களால் அறியலாம்.