அறப்பளீசுரரை ஒவ்வொரு பாடலிலும் விளித்து முறையிடுவது
போல் பல்வேறு நீதிகளையும், செய்திகளையும் எடுத்துச் சொல்கிறார் ஆசிரியர். குடும்பம்,
ஒற்றுமை, அரசர் முதலானோர் சிறப்பு, கோபம், வறுமை ஆகியவற்றின் கொடுமை என்று
பல செய்திகளைக் குறிப்பிடுவதோடு நில்லாமல் வேறு பல செய்திகளையும் சொல்லக் காணலாம்.சோமுகா சுரனை வதைத்தமரர் துயர் கெடச்
சுருதி தந்தது மச்சமாம்
சுரர் தமக்கு அமுது ஈந்தது ஆமையாம்
என்று தொடங்கித் திருமாலின் பத்து அவதாரங்களையும் குறிப்பிடுகிறது
ஒரு பாடல். (98)
பிறைசூடி உமைநேசன் விடை ஊர்தி நடமிடும்
பெரியன் .......
 |
திருமாலின் அவதாரங்கள் |
என்று தொடங்கி சிவபெருமான் பெருமைகளை விவரிக்கிறது ஒரு பாடல். (99) சித்திரை மாதம் பதின்மூன்று தேதிக்கு மேல்
பரணியிலும், வைகாசியில் பௌர்ணமி கழிந்த நாலாம் நாளிலும், ஆனியில் தேய்பிறை
ஏகாதசியிலும், ஆடியில் ஐந்தாம் நாள் ஆதிவாரத்திலும் (ஞாயிற்றுக்கிழமை), ஆவணி
மூல நாளிலும் மழை பொழிந்தால் நன்மையான விளைவுகள் பெறலாம் என்று மழைநாள் குறிப்பும்
சொல்லப்படுகிறது. (79) பிறந்த நாளோடு வருகிற வார பலமும், மனை கோலுவதற்கு
உரிய மாதமும், புதிய ஆடை உடுக்கும் நாட்களின் பலனும் போன்ற சோதிடக் குறிப்புகளும்
சொல்லப்படுகின்றன. (61, 67, 77) சகுனம் பார்த்தல் அதற்குரிய பலன் பற்றி மூன்று
பாடல்கள் விவரிக்கின்றன. (62, 63, 64) நீதி இலக்கியத்தின் நோக்கமும் பயனும் மக்களை உயர்ந்த
உத்தமர்கள் ஆக்குவதுதானே. எனவே, நிறைவாக, உத்தமராவோர் யார் என்று இச்சதகம்
சொல்லுகிறது என்பதைப் பார்ப்போமா.செய்ந்நன்றி மறவாத பேர்களும் ஒருவர் செய்
தீமையை மறந்த பேரும்
திரவியம் தர வரினும் ஒருவர் மனையாட்டி மேற்
சித்தம் வையாத பேரும்
கைகண்டெடுத்த பொருள் கொண்டு போய்ப் பொருளாளர்
கையிற் கொடுத்த பேரும்
காசினியில் ஒருவர் செய் தருமங் கெடாதபடி
காத்தருள் செய்கின்ற பேரும்
பொய்யொன்று நிதிகோடி வரினும் வழக்கு அழிவு
புகலாத நிலை கொள்பேரும்
புவிமீது தலை போகும் என்னினும் கனவிலும்
பொய்மை உரையாத பேரும் (16) (பேர் = மனிதன்)
என்றிவர்களெல்லாம் உத்தமர்கள் என்கிறார்.
தம்மை ஆதரித்த மதவேள் என்னும் வள்ளலைப் பற்றி ஒவ்வொரு
பாடலிலும் குறிப்பிடுகிறார் ஆசிரியர்.
மதவேள் என்னும் வளோண் செல்வர் எப்படிப்பட்ட கருணை
வள்ளல் என்பதைக் குறிப்பிடும் பாடல் சிறப்பாக அமைந்துள்ளது.பருகாத அமுது ஒருவர் பண்ணாத பூஷணம்
பாரில் மறையாத நிதியம்
பரிதி கண்டு அலராத, நிலவு கண்டு உலராத
பண்புடைய பங்கேருகம்
கருகாத புயல் கலைகள் அருகாத திங்கள் வெங்
கானில் உறையாத சீயம்
கருதரிய இக்குணமனைத்தும் உண்டான பேர்
காசினியில் அருமையாகும் (பூஷணம் = ஆபரணம்; பரிதி = சூரியன்;
பங்கேருகம் = தாமரை; கருகாதபுயல் = கருமை
நிறம் பெறாமலே மழை பொழியும் மேகம்; சீயம் = சிங்கம்; காசினி
= உலகம்)
என்று குறிப்பிட்டுள்ளார் (97).
அத்தகைய அரியவராம் மதவேள் புகழ், கல்வி, சீர் இதயம்,
ஈகை, வதனம் (சிரித்தமுகம்), திடமான வீரம் இவை பெற்றுக் கற்பகத் தருவைப் போன்றவர்
என்று கூறுவதிலிருந்து அவர் சிறப்பும், ஆசிரியருக்கு அவர் மேல் உள்ள ஈடுபாடும்
புலனாகின்றது.
|