|  
     கி.பி.12ஆம் நூற்றாண்டில் ஒட்டக்கூத்தரால் இரண்டாம் 
      குலோத்துங்க சோழன் மீது பாடப்பட்டுள்ள குலோத்துங்கன் பிள்ளைத் தமிழே. 
      முதல் பிள்ளைத் தமிழ் நூலாகும். இது சோழர்களின் வரலாற்றைக் கூறும் சிறந்த இலக்கியமாகும். 
    கி.பி.17 ஆம் நூற்றாண்டில் குமரகுருபரர் பாடிய 
 மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், முத்துக்குமார சுவாமி 
 பிள்ளைத் தமிழ் ஆகிய இரண்டும் பக்தி இலக்கிய வரலாற்றில் 
 பெரும் புகழ் படைத்தவை. கி.பி.18ஆம் நூற்றாண்டில் பகழிக் 
 கூத்தர் எழுதிய திருச்செந்தூர் பிள்ளைத் தமிழ் சிறப்புடையது. 
 சொற்சுவை, பொருட்சுவை, கற்பனை, அலங்காரம் முதலிய 
 சுவைகள் ஒரு சேர அமையப் பெற்ற நூலாக இந்நூல் உள்ளது. 
    19ஆம் நூற்றாண்டில் அழகிய சொக்கநாதர் பாடிய 
 காந்திமதியம்மைபிள்ளைத் தமிழ், மகாவித்துவான் 
 மீனாட்சிசுந்தரம் பிள்ளை பாடிய சேக்கிழார் பிள்ளைத் தமிழ் 
 ஆகியவை சிறப்பானவை. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் 
 அவர்கள் பத்துப்பிள்ளைத் தமிழ் நூல்களைப் படைத்த 
பெருமைக்குரியவர். 
    சிவஞான சுவாமிகள் எழுதிய அமுதாம்பிகை பிள்ளைத் 
      தமிழ், அருணாசலக் கவிராயர் எழுதிய அனுமார் பிள்ளைத் தமிழ் 
      ஆகியவற்றோடு செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத் தமிழ், 
      திருஞான சம்பந்தர் பிள்ளைத் தமிழ், சுந்தரர் பிள்ளைத் தமிழ், மாணிக்கவாசகர் 
      பிள்ளைத் தமிழ் போன்ற பிள்ளைத் தமிழ் நூல்களும் பிற்காலத்தில் தோன்றியுள்ளன. 
    தற்காலத்தில் பாவேந்தர் பிள்ளைத் தமிழ், மறைமலை 
 அடிகள் பிள்ளைத் தமிழ், காமராசர் பிள்ளைத் தமிழ், 
 பெரியார் பிள்ளைத் தமிழ், கலைஞர் பிள்ளைத் தமிழ், 
 எம்.ஜி.ஆர். பிள்ளைத் தமிழ் போன்றவை தோன்றியுள்ளன. 
 சிற்றிலக்கிய வகைகளில் மிகுதியான இலக்கியங்கள் பிள்ளைத் 
 தமிழிலேயே தோன்றியுள்ளன.	
 
   |