குடியரசு, விடுதலை, புரட்சி, திராவிட நாடு, குயில்
ஆகிய இதழ்களில் பாவேந்தரின் புரட்சி எண்ணங்கள் கவிதைகளாக வெளிவந்தன.கோட்டை நாற்காலி இன்றுண்டு - நாளை
கொண்டு போய் விடுவான் திராவிடக் காளை
கேட்டை விளைத்துத் திராவிடர் கொள்கையைக்
கிள்ள நினைப்பது மடமையாம் செய்கை
- (பாரதிதாசன், இரண்டாம் தொகுதி, பக்-96) என்பது போன்ற பாடல்களை, திராவிட இயக்க அரசுகள் அமைவதற்கு முன்னரே பாடிய தொலைநோக்குப்
பார்வையினர் பாரதிதாசன். இதனை,கொத்தடிமையாய்ப் பிறரை நத்துமிருள் நாளிலே
குடும்ப விளக்கேற்றி வைத்துச்
சடம்பட்ட போக்குணர்வு சமைக்கப் பிறந்தவன்
சப்பாணி கொட்டியருளே . - (35)
(சடம்பட்ட = அறிவுகெட்ட)
என்று பிள்ளைத் தமிழ் பாடுகிறது.
இப்பாடலில் பாரதிதாசன் பாடிய குடும்ப விளக்கு
என்னும் படைப்பின் சிறப்பு எடுத்துரைக்கப்படுகிறது. குடும்ப விளக்கு என்று
கவிஞர் பாடியதைப் பெயரளவில் எடுத்துக் கொண்டு அது தமிழகத்தின் தன்னாட்சி
பற்றியதாகவே அமைவதாகக் கொள்ள வேண்டும். தமிழர்கள் கொத்தடிமைகளாய்ப் பிறரை
அண்டி வாழும் இருள் சூழ்ந்த நாளில் குடும்ப விளக்கேற்றி வைத்தல் என்ற குறிப்புப்
பொருளில் சுதந்திரமாய் வாழ்தலைக் குறிக்கின்ற நயத்தைக் காணலாம். உறங்கிக்
கிடக்கின்ற சுதந்திர உணர்வை எழுப்புவதே குடும்ப விளக்கின் குறிக்கோள் என்பதை
நயம்பட எடுத்துரைக்கின்றார், பிள்ளைத்தமிழ் பாடிய பாவலர்.
தாலப்பருவத்தின் முதற்பாட்டு மூன்று விளிகளைக் கொண்டு
விளங்குகிறது. ‘கவிதைக் கொற்றவனே’ என்றும் ‘மண்ணில் விளையும் புதுமைக்கோர்
மழையே’என்றும், ‘மாலைப் பொழுதின் இளந்தென்றல் மணமே’என்றும்
விளித்துப் பாடுகின்றார்.
காலங்களில் முழுமையான பகலும், முழுமையான இரவும்
உயிர்களுக்கு முழுமையான இன்பத்தைத் தர இயலாதவை. இந்த இரண்டும் சேரும் மாலைப்
பொழுதில் இரவுண்டு, இருளில்லை, ஒளியுண்டு, வெப்பமில்லை, மெல்லென வீசும் தென்றல்
சேரும். மாலையில் மலரும் முல்லை முதலான மலர்களின் மணத்தை வாரிக் கொண்டுவரும்
தென்றல் இயற்கைக் கூறுகள் இணைந்து இன்பம் செய்வதைப் போல் கவிஞரின் பாக்கள்
கருத்தாலும், கருத்துகளை வழங்கும் பாங்காலும் இன்பம் பயக்கின்றன. ஆகவே மாலைப்
பொழுதின் இளந்தென்றல் மணமே தாலே! தாலேலோ என்று பாடுகிறார்.
மன்னர்கள் புலவர்களுக்குப் பரிசில் தருவது என்பது
நெடுங்காலமாகத் தமிழகத்தில் நடந்துவரும் நடைமுறையாகும். ஆனால் புரட்சிக்
கவிஞர் பாண்டியன் பரிசு என்னும் நூல் எழுதியுள்ளமையால் பாண்டிய மன்னனுக்கே
இவர் பரிசில் தந்தவரானார் என்றகருத்துப்படப் பாடுகின்ற
வரிகளைக் கேளுங்கள்.
பாண்டியன் தனக்குமொரு பரி சென்று தந்த தமிழ்ப்
பாவேந்து முத்தமருளே
பாட்டான தமிழுக்கு நாட்டாண்மை தந்தவன்
பனி வாயின் முத்தமருளே - (48)
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அகவல், அறுசீர் விருத்தம்,
எண்சீர்விருத்தம்ஆகியவற்றைப்
பயன்படுத்துவதோடு நொண்டிச் சிந்து, கும்மி வகைகளையும் எடுத்தாண்டுள்ளார். இவர்
கையாண்ட பல்வகையான சந்தங்களால் அவை கேட்பதற்கு இனிமையாயிருப்பதால் திரு.வி.க.,
பாரதிதாசன் பாட்டு இனிக்கும் என்கிறார். பாரதிதாசனைப் போலவே பல சந்தங்களைக்
கையாண்டு பாவேந்தர் பிள்ளைத் தமிழைச் சிறப்பித்துள்ளார் புலமைப்பித்தன்.
தமிழ் மொழியைப் பெண்ணாகவும், அம்மொழியில் அமைந்த நூல்களின்
பெயர்களைப் பெயர் ஒப்புமை கொண்டு தமிழ்ப் பெண்ணின் அணிகலன்களாகவும் விளங்க,
தமிழ்ப் பெண் ஆடிய அழகைக் கண்டு மனத்தைப் பறி கொடுத்து மயில் போலக் களித்துப்
பாக்களைப் பாடிய புரட்சிக் கவிஞராம் குழந்தையே நீ செங்கீரையாடி அருள்வாயாக
என்று பாடும் அழகைப் பாருங்கள்.வடிவமை காதினில் குண்டலகேசி
வயங்கொளி கொண்டாட
வார்ந்த எழிற்கரம் ஏந்திய ஆடக
வளையாபதி ஆடத்
துடியிடை கையினில் ஒரு பிடி என்று
துவண்டு துவண்டாடும்
துறவற மேகலை ஒரு புறமாகவும்
தூய சிலம்பாடும்
அடிமலர் கண்டொரு மாமயிலானவன்
ஆடுக செங்கீரை
அஞ்சுகமாம் தமிழ் கொஞ்ச மகிழ்ந்தவன்
ஆடுக செங்கீரை
பாரதிதாசனின் கவிதையில் அமையும் சந்த அழகில் ஈடுபட்டுத்தான்
பாவலர் புதுமைப்பித்தன் மேற்கண்ட பாடல் போல் அனைத்துப் பாடல்களையும் சந்தச்
சிறப்புடன் அமைக்கின்றார்.
சப்பாணிப் பருவப் பாடல்களின் இறுதி வரிகளாகப் பின்வரும்
வரிகளை அமைத்துகுருதி துடிப்புறக் கவிதை வடிப்பவன்
கொட்டுக சப்பாணி - (37, 38, 39) என்றும்,குரை கடலெனு மெழுச்சிக் கவி
கொட்டுக சப்பாணி - (41) என்றும் பாடுகிறார்.
பாரதிதாசன் பாடல்களின் சிறப்பை இனிய சந்தத்தில் வெளிப்படுத்துவதைக்
காணலாம்.சிந்திடும் கவிமதச் சந்தக் கடாக்களிறு
சிறுதேர் உருட்டியருளே - (92) என்றும் பாடி மகிழ்கிறார் பாவலர் புலமைப்பித்தன். |