புலவர்கள்
தாம் விரும்பும் தெய்வத்தையோ, அரசனையோ, தலைவனையோ, வள்ளலையோ, சான்றோரையோ குழந்தையாகப்
பாவித்துப் பாடுவது பிள்ளைத் தமிழ் எனப்படும். இது குழந்தையின் மூன்றாம் மாதம்
முதல் 21ஆம் மாதம் வரை ஒரு பருவத்திற்கு இரண்டு திங்கள் என வகுத்துக் கொண்டு பத்துப் பருவங்களில் வைத்துப் பாடப்படுவதாகும். இதில் ஒரு பருவத்திற்குப்
பத்துப் பாடல்கள் வீதம் 100 பாடல்கள் பாடப்படும். இவ்விலக்கியம் ஆண்பாற் பிள்ளைத்
தமிழ், பெண்பாற் பிள்ளைத் தமிழ் என இரண்டு வகைப்படும். வெண்பாப் பாட்டியல்
(செய்யுளியல் 7ஆவது பாடலின்) மூலம் காப்பு, தால், செங்கீரை, சப்பாணி, முத்தம்,
வாரானை, அம்புலி, சிறுபறை, சிற்றில், சிறுதேர் எனப் பத்துப் பருவங்களை உடையது
பிள்ளைத் தமிழ் என்பதை அறிய முடிகிறது. இதில் முதல் ஏழு பருவங்கள் ஆண்பாற்
பிள்ளைத் தமிழுக்கும், பெண்பாற் பிள்ளைத் தமிழுக்கும் பொதுவாகும். கடைசி மூன்று
பருவங்களான சிறுபறை, சிற்றில், சிறுதேர் ஆகியன ஆண்பாற் பிள்ளைத் தமிழுக்குரியன.
இம்மூன்று பருவங்களுக்குப் பதிலாகக் கழங்கு, அம்மானை, ஊசல் என்ற மூன்று பருவங்களைப்
பெண்பாற் பிள்ளைத் தமிழுக்குச் சேர்த்துக் கூறுவது மரபு.
|