1.1 காப்பியம் காப்பியம் என்பது ஓர் இலக்கிய வகை. வாய்மொழி இலக்கியம், தன்னுணர்ச்சிப் பாடல்கள், கதைபொதி பாடல்கள் என்று விரிந்து கொண்டே வந்த இலக்கிய வளர்ச்சி காப்பியத்தில் முழுமை எய்தியது எனலாம். காப்பியம், ஆங்கிலத்தில் EPIC எனப்படுகிறது. இச்சொல் EPOS என்ற கிரேக்கச் சொல்லின் அடிப்படையில் உருவானது. இதற்குச் சொல் அல்லது பாடல் என்பது பொருள். காவியம் என்னும் வட சொல்லின் தமிழ் வடிவமே காப்பியம் எனக் கொள்வதுண்டு. காவியம் என்பது கவியினால் செய்யப்பட்டது எனப் பொருள் தரும். காப்பியம் என்பதைக் காப்பு + இயம் என்றும் பிரித்துப் பொருள் காணலாம். இப்பெயர் தொடக்கத்தில் இலக்கண நூல்களைச் சுட்டுவதற்காகவே அமைந்து, இடைக் காலத்தில் வடமொழித் தொடர்பால் ஒருவகை இலக்கிய வடிவத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது என்பர். காப்பியத்தைத் தொடர்நிலைச் செய்யுள் எனவும் குறிப்பர். காவியம், காப்பியம் என்னும் இவ்விரு சொற்களும் சில தமிழ்க் காப்பியப் பெயர்களில் அமைந்திருப்பதைக் காணலாம். சான்றுகள்: யசோதர காவியம், நாககுமார காவியம், இயேசு காவியம், இராவண காவியம், ..... கண்ணகி புரட்சிக் காப்பியம், கற்புக் காப்பியம் எம்மொழியிலும், தொடக்கத்தில் காப்பிய இலக்கியம் தோன்றுவதற்கான அடிப்படைகளும், வளர்ச்சிப் படிநிலைகளும் அமைந்திருக்கும். திடீரென ஒரு பேரிலக்கியப் படைப்பு ஒரு மொழியில் முகிழ்த்து எழுதல் என்பது இயலாத ஒன்று. முதலில் தனிப் பாடல்களாகவும், செய்யுள் தொகுப்புகளாகவும் இருந்த தொல் பழங்கால (Primitive) இலக்கியப் படைப்பு மெல்ல மெல்ல வளர்ச்சி பெற்றது; கதையைத் தொகுத்துக் கூறும் பாடல்கள் பிறந்தன. கற்பனை வளம் விரிவடைந்தது. இவ்வாறுதான் காப்பியப் படைப்புகள் உருவாயின. தனிமனிதனின் வீரதீரச் செயல், அவன் பிறப்பு, வளர்ப்பு, அவன் சார்ந்த மரபு முதலான வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள், விழாக்களிலும் வழிபாடுகளிலும் பாடுபொருளாயின. அவனது புகழ் ஓர் உன்னத நிலைக்கு உயர்த்தப்பட்டது. அவன் ஒரு குறிக்கோள் மனிதனாக உயர்த்தப்பட்டான். மேலும் அவன் தெய்வீக நிலையை எய்தினான். அவனைப் போற்றிப் புகழ்ந்த நிலை, படிப்படியாக அவன் வாழ்க்கை வரலாறு பற்றிய கதையாக உருவாகித் தனிச்சிறப்பும் உயர்வும் பெற்றது. பின்னர் இசையோடு கூடிய கூற்று வகைக் கதைப்பாடல்கள் உருவாகத் தலைப்பட்டன. புலவர்கள் இவ்வரலாற்றுப் பழங்கதைப் பாடல்களைத் தொகுத்து, அவற்றை ஒரு முறைப்படுத்தித் தம் கவித்துவச் சிறப்பால் உயிரோட்டமுள்ள ஓர் ஒப்பற்ற படைப்பாகக் காப்பியத்தை ஆக்கித் தந்தனர். காப்பிய இலக்கணங்களாகச் சொல்லப்பட்டவற்றைப் பின்பற்றிய காப்பியக் கவிஞர்கள் பலரும், சில இயல்புகளை ஒரே மாதிரியாகத் திரும்பத் திரும்ப அமைத்தனர். அவை காப்பிய மரபுகள் ஆயின. எடுத்துக்காட்டாக மலை, கடல், நாடு, வளநகர், பருவம் என்னும் வருணனைகளைத் தனித்தனியே நாட்டுப் படலம், நகர்ப் படலம் எனப் பகுத்து விரிவாகப் பாடினர். இவை காப்பியக் கதைப் போக்கிற்குப் பெரிதும் துணை செய்யாத நிலையிலும் இம் மரபுகள் காப்பிய அமைப்பில் வேரூன்றி விட்டன. காப்பியத்தைத் தொடங்கும் போது வாழ்த்து, வணக்கம், வருபொருள் கூறுவதும் மரபாக உறுதிப்பட்டது. காப்பியத்தின் முதல் சொல் பெருமைக்குரிய சொல்லாக அமைய வேண்டும் என்பது கூட மரபு ஆனது. எடுத்துக்காட்டாக, கம்பராமாயணம் உலகம் யாவையும் எனத் தொடங்குகிறது. பெரியபுராணம் உலகெலாம் உணர்ந்து எனத் தொடங்குகிறது. காப்பியத்தினுள் தலையாய அறக் கருத்துகளைப் பாவிகமாக (உட்பொதிவாக) வைப்பது அல்லது வெளிப்படையாகச் சொல்வது மரபு ஆயிற்று. இயற்கையிறந்த நிகழ்வுகளும் (Supernatural), எதிர்வரும் நிகழ்வுகளை உணர்த்துவதான கனவு, நிமித்தம், வான்மொழி (அசரீரி) ஆகியவையும் காப்பியங்களில் இடம்பெறுவது மரபாயிற்று. காப்பியங்களில் கதைநிகழ்ச்சி, இடையில் தொடங்கப் பெறுவதும், பல கலைகள் குறிக்கப்படுவதும், இசைப்பாடல், கட்டுரை ஆகியவை இடம் பெறுதலும் மரபாகக் காணப்படுகின்றன. |