1.3 காப்பியப் பாகுபாடு தண்டியலங்காரம் காப்பியத்தைப் பெருங்காப்பியம், காப்பியம் என்று இரு வகைப்படுத்துகிறது என்பதை முன்னர்க் கண்டோம். பன்னிரு பாட்டியல் தலை, இடை, கடை என்று மூன்று வகையாகப் பிரித்துக் கூறுகிறது. சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி என்னும் ஐந்தினையும் ஐம்பெருங் காப்பியங்கள் என்று வழங்குவது மரபாக இருந்து வருகிறது. வடமொழியில் பஞ்சமகாகாவியம் என்று வழங்குவதைப் பின்பற்றி இவ்வாறு தமிழிலும் வழங்கும் போக்கு அமைந்தது எனலாம். ஐம்பெருங்காப்பியம் என்னும் வழக்கு, முதன்முதலில் நன்னூல் மயிலைநாதர் உரையில் காணப்படுகிறது. கந்தப்ப தேசிகர் இயற்றிய திருத்தணிகை உலாவில் இவ்வைந்து காப்பியங்களையும் ஐம்பெருங்காப்பியங்கள் என்று முதன் முதலில் தெளிவாகக் கூறியுள்ளார். சூளாமணி, நீலகேசி, யசோதர காவியம், நாககுமார காவியம், உதயணகுமார காவியம் ஆகிய ஐந்தும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்று குறிக்கப்படுகின்றன. மேலை நாட்டினர் காப்பியத்தின் தன்மைகளுக்கு ஏற்பப் பின்வருமாறு வகைப்படுத்துவர். அவை, 1) தொல்பழங்காலக் காப்பியம் (PRIMITIVE
EPIC) 1) தொடக்கக் காலக் காப்பியங்களில் வீரதீரச் செயல்களே
முக்கியத்துவமும் தலைமைச் சிறப்பும் பெற்றன. இந்த வீர உணர்வில் மிகுந்து
விளங்கிய காப்பியங்களையே தொல்பழங்காலக் காப்பியம் என்பர்.
இவ்வகைக் காப்பியங்களுக்கு எடுத்துக்காட்டு: ஹோமரின் இலியாது, ஒதீஸி. 2) ஒரு தனிப் பெருவீரனைச் சுற்றி மட்டும் அமையாமல், கதை நிகழ்வுகளுக்கு ஓர் இலட்சியக் கனவு நோக்கத்தையும் இணைத்துக் காட்டப்பட்டிருப்பது கலை அல்லது இலக்கியக் காப்பியம் என்பர். மிகப் பழைய காப்பியங்களைத் தனியே பிரித்து விட்டால், மற்றவை இவ்வகையில் அடங்கும். இவை தவிரப் புலவர்கள் பாடக் கூடிய பாடுபொருள் அடிப்படையிலும் (சுவை, வரலாறு, பக்தி முதலியன) பாகுபாடு செய்யலாம் என்பது கீழே விளக்கமாகத் தரப்பட்டுள்ளது.
|