5.1 கம்பராமாயணம்

தமிழ் இலக்கியத்தில் மிகச் சிறப்பாகப் போற்றப்படும் காப்பிய நூல்களுள் ஒன்று இராமாயணம். இந்நூலின் ஆசிரியர் கம்பர்.

சமயக் காப்பியங்களுள் இது வைணவ சமயத்தைச் சார்ந்தது. இந்தக் காப்பியம் தோன்றிய காலம் இரண்டாம் குலோத்துங்க சோழன் ஆண்ட, கி.பி. 12-ஆம் நூற்றாண்டாகும். சிலர் ஒன்பதாம் நூற்றாண்டு என்றும் கூறுவர். சோழ நாட்டில் திருவழுந்தூரில் உவச்சர் மரபில் தோன்றிய கம்பரை ஆதரித்தவர் திருவெண்ணெய் நல்லூரில் வாழ்ந்த சடையப்ப வள்ளல் ஆவார்.

வான்மீகி முனிவர் வடமொழியில் இராமாயணத்தை இயற்றினார். அதனை, தமிழ்ப் பண்பாட்டிற்கு ஏற்ப ஈடும் இணையும் இல்லாமல் கம்பர் தமிழில் தந்த காவியமே இராமாயணமாகும். கம்பர், தம் நூலுக்கு இராமாவதாரம் என்று பெயரிட்டார்.

காப்பிய அமைப்பு

இக்காப்பியம் பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என்னும் ஆறு காண்டங்களைக் கொண்டது. இந்த ஆறு காண்டங்களின் சிறு பிரிவுகளாக 113 படலங்கள் உள்ளன. மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை 10,500 ஆகும்.

(காண்டம் - பெரும்பிரிவு; படலம் - சிறுபிரிவு.)

பெயர்க் காரணம்

இக்காப்பியத்தின் கதை இராமனின் வரலாற்றைப் பற்றித் தெரிவிப்பதால் இராமாயணம் எனப்பட்டது. கம்பர் எழுதியதால் கம்ப இராமாயணம் எனப்பட்டது. இராம + அயணம் என்ற வடமொழிச் சொற்கள் இணைந்து இராமாயணம் என்றாயிற்று.

காப்பிய நோக்கம்

அடிப்படையில் அறமும், சமயமும் காப்பியத்தின் பொருளாக அமைகின்றன. மனிதர் யாவருக்கும் பயன் தரும் ஒழுக்க முறைகளையும் பண்பாட்டினையும் குறிக்கோளினையும் ஆட்சிச் சிறப்பினையும் விளக்கும் அருமையான இலக்கியமாகத் திகழும் சிறப்புடையது கம்பராமாயணமாகும்.

5.1.1 காப்பியச் சிறப்பு

இந்நூல் நடையில் நின்றுயர் நாயகனாக விளங்கும் இராமன், தெய்வநிலையில் இருந்து இறங்கி மானுட நிலையில் மனிதனாக வாழ்ந்து காட்டிய தன்மைகளையும், சிறப்புகளையும் விளக்கும் ஓர் ஒப்பற்ற நூலாகும். இந்நூலில் கம்பர் வலியுறுத்தும் நீதியும் அறனும் மக்கட் சமுதாயம் அனைத்திற்கும் பொதுவானவை ஆகும்.

காப்பியத் தலைவன்

இலக்கணப்படி, காப்பியம் தன்னேரில்லாத தலைவனைக் கொண்டிருத்தல் வேண்டும். அவ்வகையில் கம்பராமாயணத்தில் இராமனே தன்னிகரில்லாத் தலைவனாகப் போற்றப்படுகின்றான்.

வைணவக் காப்பியம்

திருமாலின் மானுட அவதாரமே இராமாவதாரமாகும். இந்நூலில் வைணவ சமயக் கருத்துகள் விரவிக் கிடக்கின்றன. மேலும் உயர்ந்த இலட்சியங்களை முன்னிறுத்தி இராமனை மனித நிலையிலிருந்து தெய்வ நிலைக்கு உயர்த்திக் காட்டும் இலக்கியமே கம்பராமாயணமாகும். பல உயர்ந்த குறிக்கோள்களைக் கொண்டு பாடப்பட்ட சமய நூலாக இந்நூல் விளங்குகிறது எனலாம்.

நீதி உணர்த்தும் காப்பியம்

கம்பராமாயணம் ஒருவனுக்கு ஒருத்தி என்னும் கற்பு நெறி நின்று வாழவேண்டும் என்ற உண்மையை ஏகபத்தினி விரதனாம் - இராமன் மூலம் தெரிவிக்கின்றது. பிறன் மனைவியை விரும்பினால் அவனும் அவனைச் சார்ந்த சுற்றமும் குலமும் அழிந்துவிடும் என்பதை இந்நூல் விளக்குகின்றது. பிறனில் விழைவோர் கிளையொடுங் கெடுப என்னும் நீதி (கிளை = சுற்றம்) இந்நூல் மூலம் உணர்த்தப்படுகிறது.

5.1.2 இலக்கியச் சிறப்பு

காப்பியத்தில் கதைப் பாத்திரங்களின் இயல்புக்கு ஏற்றவாறும் சூழலுக்கு இசைந்தவாறும் தமிழ்ப் பண்பாட்டிற்கு ஏற்றவாறும் உரிய சந்தங்களோடு (சந்தம் = ஓசை நயம்) அமைத்துக் கம்பர் பாடியிருப்பதால் கற்போர் உள்ளத்தில் நன்கு பதிந்து விடுகின்றது.

கற்பார் இராமபிரானை யல்லால் மற்றும் கற்பரோ என்னும் கருத்திற்கு ஏற்ப, கம்பராமாயணம் உயர் கருத்துகளைத் தெரிவிப்பதாக விளங்குகின்றது. மேலும் வான்மீகி இராமாயணத்தையே விஞ்சும் சுவையுடைய காப்பியமாகக் கம்பர் படைத்துள்ளார் என்று வ.வே.சு. ஐயர் போற்றியுள்ளார்.

கல்வியில் பெரியர் கம்பர் என்றும் கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும் என்றும் வழங்கும் மொழிகள் அவரது கவித்திறனைப் பறை சாற்றும். பாரதியார் தம் பாடலில் புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு என்று போற்றியுள்ளார்.

"யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவர் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே கண்டதில்லை, உண்மை வெறும் புகழ்ச்சியில்லை" என்றும் பாராட்டியுள்ளார் பாரதியார்.

கதைப் பாத்திரங்களை மனிதப் பாங்கின் அடித் தளத்திலிருந்து பேச வைத்து, உணர்ச்சியை வெள்ளம் போலப் பெருகி ஓட விட்டுப் பாத்திரங்களைப் படைத்துக் காட்டுகின்ற தன்மையால் கம்பர் உலகப் பெருங்கவிஞர்களுள் ஒருவராகத் திகழ்கின்றார். உலக மகாகவி, கவிச்சக்கரவர்த்தி என்றும் தமிழறிஞர்களால் சிறப்பிக்கப்படுகின்றார்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1. வடமொழியில் இராமாயணத்தை இயற்றியவர் யார்? [விடை]
2. கம்பராமாயணம் எந்தச் சமயத்தைச் சார்ந்தது? [விடை]
3. கம்பராமாயணம் எதை விளக்குகின்றது? [விடை]