1.6 சமயங்கொள்கையும் நிமித்தமும் சூளாமணி ஒரு சமயம் சார்ந்த காப்பியம் என்பதையும், காப்பியங்களில் பொதுவாக இடம் பெறும் நிமித்தம் பற்றிய செய்திகளையும் அறிந்து கொள்ளலாம். சூளாமணி, சமணக் காப்பியம். காப்பிய மாந்தர்கள் அருக தேவனை வணங்கும் வகையில் பல நிகழ்ச்சிகளைப் படைத்துள்ளார் ஆசிரியர். நூலினைத் தொடங்கும்போது அருக வணக்கம் கூறி ஆரம்பித்துள்ளார். (பாடல்-1) அருகப் பெருமானின் பெருமைகளைப் பற்றி வரிப்பாடல்களில் காப்பிய மாந்தர்களும் சாரணர்களும் அரசர்களும் பாடுவதுபோல அமைத்துள்ளமையைக் காப்பியம் முழுவதிலும் காணமுடிகிறது.
என அருகப் பெருமானின் புகழைப் பலபட விரித்துரைக்கிறார். நன்னிகழ்ச்சிகள் நடைபெறுமுன் அருகன் கோவிலில் விழா எடுத்ததைக் காட்டுகிறார். (107) அருகபதம் அடைவதைச் சிவகதி என்கிறார் (355) சமண சமயக் கருத்துப்படி, பிறவி காரண காரியத் தொடர்ச்சியாய், அளவின்றி வருவதால் பிறவிமாலை (198) என்று குறிப்பிடுகிறார். சாரணர்கள் ஆகாயத்தில் சஞ்சரித்து (186) அவ்வப்போது அருகன் ஆலயம் வந்து துதிப்பர்; (190, 203) அவர் உரை கேட்டு மாந்தர் பலர் அருக நெறியைப் பின்பற்றி உய்வர் என்பதும், நோன்பு நோற்றல் குறித்தும், கடவுள் பற்றியும், பிற சமயக் காழ்ப் புணர்ச்சியின்றி எடுத்துரைக்கும் பாங்கினைச் சூளாமணியில் காண்கிறோம். காப்பியங்களில் நன்னிமித்தம், தீநிமித்தம் பார்க்கும் படியாக அமைக்கப்படுவது மரபு. அவ்வகையில், சூளாமணிக் காப்பியத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. நன்னிகழ்ச்சிகள் நடைபெறுவதற்குமுன் நன்னிமித்தமும், தீ நிகழ்ச்சிகள் நிகழுமுன் தீநிமித்தங்களும் நிகழ்வதைச் சூளாமணியில் காணமுடிகிறது. தெய்வத் தன்மை வாய்ந்த மகன் பிறப்பான் என்பதைக் காட்டும் வகையில் மகளிர் உறங்கும்போது அவர்கள் வாய் வழியாக மதி புகுந்து அகம் அடைவதைச் சுயம்பிரபை வாயிலாகக் காட்டுகிறார் ஆசிரியர் (1701 - 1709) முகில் முழங்குவது நன்னிமித்தமாகக் காட்டப்பட்டுள்ளது (399) நன்மக்கள் பிறந்ததைக் காட்டும் நன்னிமித்தமாகத் திசைகள் தெளிந்ததையும், தேவ துந்துபிகள் முழங்குவதையும் இரவலர் ஆசை ஒழிந்ததையும் தீவினைகள் அழிந்ததையும் (73-ஆம் பாடலில்) காட்டுகிறார். போர் செய்யப்புகும்போது நன்னிமித்தமாக வெல்பவனின் மேனி ஒளிவிரிவதையும், அவன் மகளிர்க்கு இடத்தோள் துடிப்பதையும் வீரர் கை வாளில் பூ நின்றதையும் குறிப்பிடுகிறார் (1218) ஆசிரியர் தோலாமொழித் தேவர். இதற்கு மாறாகத் தீநிமித்தங்களையும் சூளாமணியில் காண்கிறோம். முரசினுள் பாம்பு புகுதல், குடைகளில் தேன்கூடுகட்டி அதிலிருந்து தேன்துளித்தல், காக்கை தேர்க்கொடிஞ்சியில் ஏறிக்கரைதல், திசையும் ஆகாயமும் தீப்பற்றி எரிதல், உதிரமழை பெய்தல், மகளிர் வலக்கண் துடித்தல் போன்ற தீநிமித்தங்களை விளக்கமாகக் குறிப்பிடுகிறார். இவ்வாறு கேட்போர் ஆவலைத் தூண்டும் விதமாகத் தீநிமித்தங்களையும், நன்னிமித்தங்களையும் பயன்படுத்தியிருத்தல் விளங்குகிறது. |