2.1 வில்லிபாரதம்

தமிழில் அதிகமான வடசொற்களைக் கலந்து வரும் நூலாக வில்லிபாரதம் காணப்படுகிறது. சுருங்கச்சொல்லல், விளங்கவைத்தல், ஓசையுடைமை, ஆழமுடைத்தாதல் முதலிய நூலழகுகள் இந்நூலில் அமைந்துள்ளன. ஆழ்வார்களுடைய சொற்களும், பொருள் கருத்துகளும் சிற்சில இடங்களில் எடுத்தாளப்பட்டுள்ளன.

கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வில்லிபுத்தூரார் இயற்றிய பெருங்காப்பியம் வில்லிபாரதம். வியாசரை முதல் நூலாசிரியராகக் கொண்ட வில்லிபுத்தூரார் தமக்குமுன் வழங்கிய சங்க இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், பாரத வெண்பா, வடமொழியிலமைந்த பாலபாரதம், மக்களிடையே வழங்கிய பாரதம், கிளைக்கதைகள், நாட்டுப் பாடல்கள், பழமொழிகள் ஆகியவற்றை மனத்தில் கொண்டு தமது நூலைப் பாடினார்.

  • நல்லாப்பிள்ளை பாரதம்
  • வில்லிபுத்தூரார் பாடிய பாரதத்திலே சுருக்கமாகக் கதையைத் தொகுத்துக் கூறும் 300, 400 பாடல்கள் தவிர, மற்றைய நாலாயிரஞ் செய்யுட்களை எடுத்துக்கொண்டு, பிற்காலத்தில் நல்லாப்பிள்ளை என்பவர், புதிதாகத் தாம் 11 ஆயிரம் பாடல்கள் பாடி, இடையிடையிற்கோத்தும் இறுதியில் சேர்த்தும் பாரதம் 18 பருவங்களையும் பூர்த்தி செய்தார்; அது நல்லாப்பிள்ளை பாரதம் என வழங்கப்படுகிறது.

    2.1.1 நூலாசிரியர்

    திருமுனைப்பாடி நாட்டில் வக்கபாகையென்னும் இராசதானியில் கல்வி, அறிவு, செல்வம், அதிகாரங்களில் குறைவின்றி ஆட்சி செலுத்தி வந்தவன் வரபதியாட் கொண்டான். கல்வி, கேள்வித்திறமைகளையும், அடக்கம், அன்பு, ஒழுக்கம் முதலிய நற்குணங்களையும் கொண்ட வில்லிபுத்தூராரின் ஆற்றலைக் கேள்வியுற்ற அம்மன்னன் அவரை அழைத்துத் தனது அவைப் புலவராக்கினான். தனது சமஸ்தானத்துக்கு, உலகம் உள்ளவரைக்கும் அழியாத பெருமை உண்டாகும்படி, வடமொழியில் வேத வியாசர் எழுதிய மகாபாரதத்தைத் தமிழில் எழுதும்படி வேண்ட, அவ்வாறே வில்லிபுத்தூரார் பாடினார்.

    வில்லிபுத்தூரார் திருமுனைப் பாடி நாட்டில் சனியூரில் வீரராகவாச்சாரியாருக்கு மகனாக அவதரித்தவர், வைணவ மதம் சார்ந்த அந்தணர் என்னும் செய்திகள் நூலின் சிறப்புப் பாயிரத்தின் மூலம் அறியமுடிகிறது. தன்னை ஆதரித்த வரபதியாட்கொண்டானை இந்நூலின் இடையிடையே புகழ்ந்து பேசியுள்ளார். இவர் மகாபாரதம் தவிர வேறு நூல் எதுவும் பாடியிருப்பதாகத் தெரியவில்லை. பிற்காலத்தவர் இவரை 'வில்லிபுத்தூராழ்வார்' என்றே குறிப்பிட்டனர்.

    இவருடைய காலம் ஏறக்குறைய 16ஆம் நூற்றாண்டு ஆகும். திருவண்ணாமலையில் வாழ்ந்த அருணகிரிநாதருடைய சம காலத்தவர் வில்லிபுத்தூரார் என்றும் கூறப்படுகிறது.

  • நூலாசிரியர் பற்றிய கதை
  • வில்லிபுத்தூரார்க்கும் இவர் தம்பியர்க்கும் தாய் பாகத்தைப் (பரம்பரைச் சொத்துரிமை) பற்றி விவாதமுண்டாக, அவ்விஷயத்தை அவர்கள் அரசனிடம் கொண்டு சென்றனர்; அரசன் இவரது கல்வித் திறத்தை முன்னரே கேள்வியுற்று அறிந்தவனாதலால், 'இவ்வளவு கற்றறிந்தவர்க்கும் உண்மையறிவு உண்டாகவில்லையே! என்று வருத்தமடைந்து அவ்வுண்மையறிவை இவர்க்கு உண்டாக்குவதற்கு ஏற்ற உபாயம் மகாபாரத நூலைப் பயிலும் படி செய்வதே’ என்று உறுதிசெய்து, ‘மகாபாரதத்தை நீர் தமிழில் பாடவேண்டும்; பாடின பின்பு தான் உங்கள் வழக்குத் தீர்க்கப்படும்’ என்று கட்டளையிட்டான்; உடனே இவர் அவ்வாறே அப்பாரதத்தைப் பாடி, அந்நூலின் நீதியின் கருத்தூன்றியவராய், பின்பு தாமே தம் பங்கை தம்பியர்க்கே கொடுத்துவிட்டார் என்றும் இவரைப் பற்றி ஒரு கதை வழங்குகிறது.

    2.1.2 காப்பிய அமைப்பு

    வட மொழி மகாபாரதத்தில் மொத்தம் 18 பருவங்கள் உள்ளன. வில்லியார், முதல் 10 பருவங்களை மட்டுமே பாடியுள்ளார்.

    (1)

    ஆதி பருவம்

    (2)

    சபா பருவம்

    (3)

    ஆரணிய பருவம்

    (4)

    விராட பருவம்

    (5)

    உத்தியோக பருவம்

    (6)

    வீட்டும பருவம்

    (7)

    துரோண பருவம்

    (8)

    கன்ன பருவம்

    (9)

    சல்லிய பருவம்

    (10)

    சௌப்திக பருவம்

    ஆகியவை. மொத்தம் - 4337 பாடல்கள். நமக்குப் பாடமாக வந்துள்ள ‘கிருட்டிணன் தூதுச் சருக்கம்’- உத்தியோக பருவத்தில் அமைந்துள்ளது.

    13 ஆண்டுகள் காட்டிலும் மறைந்தும் வாழ்ந்த பிறகு, பாண்டவர்கள் தங்களுக்கு உரிய அரசினைக் கேட்கவே, பாண்டவர் சார்பாகக் கிருட்டிணன் தூது சென்ற வரலாற்றை உணர்த்தும்பகுதி, இது.