5.2 கதைச்சுருக்கம்
வாணிதாசன்
இயற்றிய தமிழச்சி, கொடிமுல்லை எனும்
காப்பியங்களின் கதைச் சுருக்கத்தை இனி பார்ப்போம்.
5.2.1
தமிழச்சி - கதைச்சுருக்கம்
தமிழச்சி
என்பாள் சிற்றூரைச் சேர்ந்தவள். இளவயது
முதலே சீர்திருத்த எண்ணங்கள் கொண்டவள்.
தமிழச்சி
முதலியார் வீட்டுப் பெண்ணாக இருந்தாலும், சேரிமக்களின்
முன்னேற்றத்திற்காகப் பாடுபடும் புரட்சி உள்ளம் கொண்ட ஒரு
புதுமைப்பெண். அதனால் ஊர் மக்களின் எதிர்ப்புக்கு
ஆளாகிறாள்.
தமிழச்சியின் காதலன் பொன்னன். கிழவனுக்கு
வாழ்க்கைப்பட மறுக்கும் பக்கத்து வீட்டுப்
பெண்ணான
பாப்பாத்தியை மீட்கும் பொறுப்பினைத் தன்
காதலனான
பொன்னனிடம் ஒப்படைக்கிறாள் தமிழச்சி. அந்தத் திட்டம்
செயல்படும் போது, பொன்னனும் பாப்பாத்தியும் ‘ஓடிப்போனதாக’
ஊரில் புரளி கிளம்புகிறது. இதற்கிடையில் பட்டாளத்தில் இருந்து
திரும்பிய பாப்பாத்தியின் காதலன் குப்பன் ஊராரின் புரளிகேட்டு
ஆத்திரம் அடைகிறான். அதன் விளைவால் பொன்னன் கொலை
செய்யப்படுகிறான். அந்தக் கொலைப்பழி தமிழச்சி
மேல்
சாட்டப்படுகிறது. தமிழச்சியை எப்படியாகிலும் பழிவாங்கக்
காத்திருந்த ஊராருக்கு இந்த வாய்ப்புப் பெரும் காரணமாக
அமைந்தது. அவளுக்குத் தூக்குத் தண்டனை வழங்கிச் சிறையில்
அடைத்தனர்.
சேரிக்காளை
எனப்படும் மதுரைவீரன் என்பான் தமிழச்சி விட்டுச் சென்ற
சேரிப் பணியைத் தொடர்ந்து செய்கிறான். பாப்பாத்தி,
அவனுக்குப் பக்கத்துணையாக இருந்து உதவுகிறாள். இருவரிடையே நட்பு
அரும்புகிறது. இதனைக் கண்ட ஊரார், காழ்ப்புணர்ச்சி கொண்டு,
மதுரைவீரனின் குடிசையைக் கொளுத்திவிடுகின்றனர்.
சேரிமக்கள் மத்தியில்
கோபம் கொப்பளித்து, புரட்சி வெடிக்கிறது. ஒன்று சேர்ந்து கிளம்பிய சேரி மக்களால்
ஊராரின் கொட்டம் அடக்கப்படுகிறது. தமிழச்சி
சிறையிலிருந்து மீட்கப்படுகிறாள். நன்மக்கள் அனைவராலும்
போற்றப்படுகிறாள். பாப்பாத்தி - மதுரைவீரன்
திருமணம் சீர்திருத்தத் திருமணமாக நடந்தேறுகிறது. தமிழச்சியின்
கனவு நனவாகிறது. கதை முடிகிறது.
5.2.2
கொடிமுல்லை - கதைச் சுருக்கம்
பல்லவ
நாட்டு அரசன் மாமல்லனுக்கும் பட்டத்தரசி
செங்காந்தளுக்கும் பிறந்தவள் கொடிமுல்லை.
அக்
கொடிமுல்லையை, இலங்கை நாட்டு இளவரசனும் பல்லவ நாட்டுப்
படைத்தலைவனுமான மானவன்மனுக்கு மணம் முடிப்பது என்று
பெற்றோர் முடிவு செய்து வைத்துள்ளனர். இந்நிலையில், கலைக்
கோயிலை அமைக்க இலங்கையிலிருந்து வந்துள்ள கல்தச்சன்
அழகனுக்கும் இளவரசி கொடிமுல்லைக்கும் எதிர்பாராத வகையில்
காதல் அரும்புகிறது.
மாமல்லனின்
அரசாங்கப் புலவனும் அழகனின் நண்பனுமான
நலம்பாடி, கொடிமுல்லையின் தோழி அல்லி ஆகியோரின்
உதவியால் காதலர் இருவரும் சந்தித்துப் பேசி மகிழ்கின்றனர்.
இக்காட்சியைக் காண நேர்ந்த மானவன்மன் கண்களை ஆத்திரம் மறைக்கிறது. அதன்காரணமாக அழகனைக்
கொலைசெய்து விடுவது என்று எண்ணித் திட்டமிட்டான். ஆனால் அவன்மேற்கொண்ட முயற்சி, ‘முகமூடி’ அணிந்த ஒருவனால்
முறியடிக்கப்படுகிறது. மறுநாள், குகையினுள் செதுக்கப்பட்டிருந்த
இளவரசியின் சிலையைச் சேதப்படுத்தினான் மானவன்மன்.
இதனால் கோபம் கொண்ட அழகன் சிற்றுளியினால்
மானவன்மனைத் தாக்க, குகை கொலைக்களமாக மாறுகிறது.
அழகன் மேல் கொலைக்குற்றம் சாட்டப்படுகிறது. அரசன் முன்
நிறுத்தப்படுகிறான். அழகனைக் கழுவிலேற்றிக் கொல்வதே தீர்ப்பு
என அறிவிக்கப்படுகிறது.
கழுவிலேற்றப்படும்
நேரத்தில், மாற்றுடையில் வந்து அழகன்
தப்பித்துச் செல்ல வழிவகுத்து, நண்பனுக்காகத் தன்னுயிரைக்
கொடுக்கிறான் நலம்பாடி. தப்பிச் சென்ற அழகன், ‘கடற்கரை
மணலில் உனக்காகக் காத்துக் கொண்டிருப்பாள்’
என்று
எழுதியுள்ள கடிதத்தை நலம்பாடியின் இருப்பிடத்தில் கண்டவுடன், விரைவாகக் கடற்கரைப் பகுதிக்குச் செல்கிறான்.
அங்கே,
கொடிமுல்லை குற்றுயிராகக் கிடக்கக் கண்டு
நெஞ்சம்
குமுறுகிறான் அழகன்.
காதலனைக்
கடைசி முறையாகக் கண்ட மனநிறைவோடு கண்ணை மூடுகிறாள் கொடிமுல்லை.
காதலியின் சோக முடிவைக் கண்ட அழகன் அழுது புலம்பியவாறு அலைகடலுள்
வீழ்ந்து மறைகிறான். இவ்வாறு கதை முடிகிறது.
|