5.7 தமிழுணர்வு

கவிஞனுக்குத் தன்னுடைய மொழிதான் முதற்காதலி. தமிழ்மொழியின் ஒலி நயத்திலும் இசையிலும் ஆழ்ந்துவிடும் கவிஞன், அதனை மீண்டும் மீண்டும் செவி குளிரக் கேட்க விரும்புகிறான்.

காதலர்களின் களவின்பம் தமிழின்பம் இரண்டையும் அழகாக ஒப்பிட்டுக் காட்டுகிறார் வாணிதாசன்.

தலைகாலே தெரியாது காதலர்கள்
தனித்தமிழின் இன்பத்தைத்துய்ப்பது போல
நிலையற்றுக் கிடந்தார்கள் தோட்டத்துள்ளே

என்று தனித்தமிழின் இன்பத்தைத் தமிழச்சியில் புகழ்கிறார்.

தமிழ் இன்பம் அவளுதடு என்று கொடிமுல்லையில் தமிழ்தரும் சுகத்தைக் காதலியின் இதழ்தரும் சுகத்திற்கு ஒப்புமைப்படுத்திக் காட்டுகிறார்.

கத்திக்கும் நானினிமேல் அஞ்சேன் ; வேந்தன்
காவலுக்கும் நானஞ்சேன் ; தமிழைப் போலத்
தித்திக்கும் கொடிமுல்லையாளே ! உன்னைச்
சேரவழி அழகனுக்குக் காட்டாயோ சொல்

என்று கொடிமுல்லையை நினைத்துப் பித்தனாகப் புலம்பும் அழகன் மூலமாகத் தமிழைப் புகழ்வதைக் காண முடிகிறது.

கொடிமுல்லைக் காவியத்தில் தொடக்கத்திலேயே அரசனை வாழ்த்த வந்த புலவரின் வாய்மொழியாகச் செந்தமிழ்போல் வாழ்க என்று வாழ்த்துவது கவிஞனின் மொழிப்பற்றினை அறிய உதவும் சான்றுகளில் ஒன்று. அதேபோல்,

புலவோய் ! நல்ல
அடைத்தேனைத் தமிழ்ப் பாட்டில் பிழிக

என்று தேனைவிடச் செந்தமிழ் சிறந்தது என்பதை விளக்குகிறார்.
 
உளம்வாட்டும் கொடுந்துயரை மாற்றுகின்ற
ஓசைநிறை பாட்டெங்கள் தமிழ்ப்பாட் டேயாம்

என்று தமிழிசையின் பெருமையினைப் பற்றிக் கவிஞர் கொண்டிருந்த வேட்கையின் மூலம் அறியமுடிகிறது. இவ்வாறு கொடிமுல்லையிலும் தமிழச்சியிலும் தமிழ் மொழியின் மேன்மையினைப் பற்றி எடுத்துச் சொல்லியிருக்கிறார் கவிஞர்.