பாடம் - 5

P10425 வாணிதாசனின் ‘தமிழச்சி’, ‘கொடிமுல்லை’

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

தமிழச்சி, கொடிமுல்லை என்னும் இரண்டு காவியங்களிலும் பெண்கள் முதலிடம் பெறும் பாங்கினைத் தெளிவாக எடுத்துச் சொல்கிறது. தமிழச்சி என்னும் நூல் இனவுணர்வையும், கொடிமுல்லை என்னும் பெயர் கவிஞரின் இயற்கை ஈடுபாட்டையும் வெளிப்படுத்துவதை இந்தப் பாடம் குறிக்கின்றது.

ஆங்கிலேயரின் அடக்குமுறைச் சட்டத்திற்குக் கடுமையாக உட்பட்டிருந்த காலத்தில் இனஉணர்வு, மொழியுணர்வு பற்றிப் பாடியிருப்பதை எடுத்துச் சொல்கிறது.

வடவர் ஆதிக்கத்திலிருந்து திராவிடத்தை மீட்பது, இந்தியின் ஆதிக்கத்திலிருந்து தமிழைக்காப்பது போன்ற அரசியல், பொருளியல், சமூகவியல் சிந்தனைகளைப் பற்றிக் கவிஞர் குறிப்பிட்டிருப்பதை எடுத்துச் சொல்கிறது.

கற்பு என்பது வாழ்வில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமானது என்பதை எடுத்துரைக்கிறது.

கடவுள் மறுப்பு, புராணஇதிகாச எதிர்ப்பு, மூடநம்பிக்கை, சாதிக் கொடுமை, கலப்பு மணத்தை ஆதரித்தல், கைம்பெண்மணம், காதல் மணம், முதியோர் கல்வி, சேரிகளைச் சீர்திருத்துதல் போன்ற பகுத்தறிவுக் கருத்துகளைப் பற்றியும் எடுத்துரைக்கிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?


இந்தப் பாடத்தைப் படிப்பதால், கீழ்க்காணும் பயன்களைப் பெறுவீர்கள்.

  • பெண்களின் வீரம், பேச்சாற்றல், பண்புக் கூறுகளால் புதிய, இலட்சிய உலகினைப் படைக்குமாறு முயலலாம்.

  • அகவாழ்வு, புறவாழ்வு மலர, இயற்கையோடு ஒன்றி வாழும் முறைமையினை அறியலாம்.

  • தீண்டாமையை மனத்திலிருந்தும் வாழ்விலிருந்தும் அகற்ற, கலப்புமணம், காதல்மணம், விதவைமணம் முதலியவை துணைபுரியும் என்பதை அறியலாம்.

  • தமிழர்களின் அகத்திணைக் கூறுகளான காதல், கற்பு, மணம், குடும்பக் கட்டுப்பாடு முதலியன பற்றிக் கூற முடியும்.

  • காவியத்தில் பகுத்தறிவுச் சிந்தனைகளை விவரித்தல் - பொதுவுடைமைக் கோட்பாட்டுச் சிந்தனைக்கு வித்திடல் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

  • தமிழ்மொழியின் மேன்மையை எடுத்துரைத்தல், தமிழ்ப்பண்பாட்டில் ஆரியச் சடங்குகளை நீக்குதல், தமிழ்மணம் புரியும் விதம் ஆகியவை பற்றி எடுத்துரைக்க முடியும்.

  • சாதி ஒழிப்பு, சமய ஒழிப்பு, பெண்கல்வி, சொத்துரிமை பற்றி விளக்கலாம்.

பாட அமைப்பு