6.0 பாட முன்னுரை இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர்களுள் பாரதி -பாரதிதாசனுக்குப் பிறகு, உண்மையிலேயே கவியரசராகத் திகழ்ந்து, ஒப்பாரும் மிக்காருமற்றவராக வாழ்ந்தவர் கண்ணதாசன். கவியரசு கண்ணதாசனிடம் இளமையிலேயே கவிதை பாடும் ஆற்றல் இருந்தது. கற்பனை உரமும், காணும் இடத்திலேயே கவிதைபுனையும் ஆற்றலும் இருந்தமையால் அவருடைய கவிதைகள் சாகாவரமுடையன ஆயின. இவர்தம் அரசியல் வாழ்வின் தொடக்கத்தில் சிறையில் பிறந்த காவியம்தான் மாங்கனி. இது 1954-இல் வெளிவந்தது. காவியத்தின் கதைக் கருவிற்கு வரலாற்றுச் சான்றினை ஆதாரமாகக் கொண்டு எழுதியுள்ளார். பழைய தமிழைப் புதுத்தமிழில் பாடியிருப்பது போல இது அமைந்துள்ளது. பழங்கதைகளைத் தற்காலச் சூழலுக்கு ஏற்ப, கற்பனைத் திறத்துடன் படைக்கப்பட்டுள்ளது. கவிஞரின் இலக்கியப் புலமையை வெளியிடுவதுபோல இக்காவியம் அமைந்துள்ளது. சிலப்பதிகாரம், மணிமேகலையின் இணைந்த வடிவமாகவும் காணப்படுகிறது. “செந்தமிழின் நவமணிகளை அள்ளித் தெளித்துத் தங்கத் தமிழ்ப் பாவில் இழைந்தோடவிட்ட அழகிய நாடகக் காப்பியம்” என்று பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரை இதனைப் பாராட்டியிருக்கிறார். மாங்கனி தமிழ்வாழ்த்தில் ஆரம்பித்து, வஞ்சியல் விழாவில் ஆர்ப்பரித்து - புத்தர் வழியில் பொன்னரசி என்று முடித்து, 40 தலைப்புகளில் இக்கவிதைக் காவியத்தை நிறைவு செய்துள்ளார், கவிஞர். பண்டைய இலக்கியங்களில் பாத்திரப் படைப்புகளைக் காப்பியக் கவிஞரே அறிமுகப்படுத்தும் மரபு இருந்து வந்துள்ளது. அதுபோலவே, மாங்கனியிலும் கவிஞர் பாத்திரப் படைப்புகள் அனைத்தையும் தாமே அறிமுகம் செய்கிறார். நாடு, நகர் போன்ற அறிமுகக் காட்சிகளையும் படைத்துள்ளார். காப்பியத் தலைவி மாங்கனி ஆரவாரத்தில் தொடங்கி காதல் சுவையில் நிறைந்து, பிரிவின் ஏக்கத்தில் உழன்று, அமைதியில் முடிவதைக் காணமுடிகின்றது. ஏறக்குறைய காவியத் தலைவன் அடலேறுவும் இதே நிலையில் தான் படைக்கப்பட்டுள்ளான். காதல் சம்பவங்கள் கற்பனை என்றாலும், வாழ்வில் கைகூடாத காதல் நிலையினை, இருவரையும் மரணத்தில் ஒன்று சேர்த்து, காவியத்தை முடித்துள்ளார். |