6.5 காப்பியச் சிறப்பு

மாங்கனியில் பல சிறப்பு வாய்ந்த உவமைகள் கையாளப்பட்டுள்ளன. பழந்தமிழ் இலக்கியங்களின் தாக்கமும் காணப்படுகின்றது. தமிழ்மொழியின் சிறப்புக் கூறுகளும் கூறப்பட்டுள்ளன. இவை காப்பியத்தின் சிறப்பினை எடுத்துரைக்கின்றன.

6.5.1 உவமைகள்

உவமை எனப்படுவது கவிஞன் தான் கூறக் கருதிய பொருளைத் தக்க ஒப்புமை கொண்டு உணரச் செய்யக் கையாளும் உத்தியாகும். உயர்ந்த எண்ணங்களைக் கொண்டவன் உயர்ந்தவனாகின்றான் என்பதைப்போல உயர்ந்த உவமைகள் சிறந்த படைப்புகளுக்குக் காரணமாகிறது.

மாங்கனி காவியம் முழுவதிலும் 108 உவமைகளைக் கையாண்டுள்ளார். ஒரு பொருளின் தன்மையைப் பறைசாற்றவும், ஆடவர், பெண்டிரின் அழகினைப் பற்றி விளக்கிடவும், கதை மாந்தர் சிலரின் இன்ப, துன்பங்களை வெளிப்படுத்தவும், இயற்கை எழிலை வெளிக் கொணரவும் என உவமைகள் மாங்கனியில் மிளிர்கின்றன.

காற்றுக்கு முருங்கை மரம் ஆடல்போலும்
கடலுக்குள் இயற்கைமடி அசைத்தல் போலும்
நாற்றுக்குள் இளங்காற்று நடித்தல் போலும்
நல்லோர்தம் அவைக்கண்ணே நடனமிட்டாள்

என மாங்கனியின் நடனச் சிறப்பினை உவமைகள் மூலம் விளக்குகிறார் கவியரசு கண்ணதாசன்.

விரலுக்குச் செங்காந்தளும், அவளது வடிவ அழகிற்குப் பொன்கட்டிச் சிலையும், சிரிப்புக்கு முல்லைப்பூவும் உவமையாக, பெண்கள் நடந்து செல்வதைப் பசுக்கூட்டங்கள் நடப்பது போல, என உவமைகளை நிரப்பி மாங்கனியைப் படைத்திருக்கிறார் கவிஞர்.

ஆடவரைப் பற்றிக் குறிப்பிடும் போது,

நடையினிலே ஆடவர் சிம்மம் போலும்

என்றும், உறுதிவாய்ந்த உடம்பிற்கு ‘மலை’யை உவமையாகவும், மலைமேனி வீரரெல்லாம் திரண்டு வந்து என்றும் மாங்கனியில் பயன்படுத்தியிருப்பது புலனாகிறது.

இழிவான செயல்களைச் செய்பவர்களை நாய்க்கு ஒப்பிட்டுப் பேசுவதைக் காணலாம்.

தெருவிலுனை நாய்போல் இழுக்கச் செய்வேன் என்று பெண்களை அவமானப் படுத்தும் சில வீரர்களைச் சாடுகிறார்.

போர்க்காலங்களில் நடனமாடுவதற்கும், பாட்டுப் பாடுவதற்கும் மங்கையை அழைத்துவரும் வீரனுக்குப் பறவையை உவமைப்படுத்தி, அப்படிப்பட்ட பெண்கள் வேண்டாம் என்று சொல்வது போல,

நடையிலே வாத்துப் போலும்,
நயக்குரல் காகம் போலும்

எனும் கவிதை வரிகளில் உவமைகளைப் பயன்படுத்தியிருப்பதை அறியலாம்.

அடலேறும் மாங்கனியும் ஒன்றிப் போய் காதல் மொழி பேசி மகிழ்கின்றனர். இதனை

மறுவொன்றும் இல்லாத தந்தப் பேழை
வைரத்துப் புதைந்துள்ள தன்மை போலும்

என்று உவமையின் மூலம் ஒருவரோடு ஒருவர் கொஞ்சி மகிழும் தன்மையை விளக்குகிறார் கவிஞர். மாங்கனியைப் பிரிந்து வந்த ஏக்கத்திலேயே அடலேறு தன் அறையில் உள்ள கட்டிலின்மீது விழுகிறான். இது

பாறைக்கல் பள்ளத்தில் விழுந்தாற்போலப்
படுக்கையிலே அடலேறு வீழ்ந்தான்

என்று உவமிக்கப்பட்டுள்ளது.

கொலைகாரக் கொடு மனதுடையவனான பாதகன் மலைமேனி மங்கையரை அடையச் செல்கின்ற தன்மை

புறாப்பிடிக்கப் போவான் போலவும்

என்று உவமிக்கப்படுகிறது.

மாங்கனியின் நடன அழகில் மயங்கி மனத்தைப் பறிகொடுத்து நிற்கிறான் அடலேறு. இந்நிலை,

அப்பொழுதே பிறந்தவன் போல் விழித்தான்

என்று உவமிக்கப்பட்டுள்ளது. இதுபோல, காப்பியம் முழுமையிலும் கற்பிற்கு, கலைக்கு, அழகுக்கு என உவமைகளின் அணிவகுப்பு நடத்தி மானுடச் சாதியின் மகத்துவத்தைக் காப்பிய நிலையில் அமைத்துள்ளார் கவியரசு கண்ணதாசன்.

6.5.2 இலக்கியத் தாக்கம்

பண்டைத் தமிழர்களின் வாழ்வியல் செய்திகளைப் பற்றி அறிந்து கொள்ளத் துணையாக இருப்பவை காப்பியங்களும் சங்கப் பாடல்களுமாகும். குறிப்பாக, அகப்பொருள் நூல்களான நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு ஆகிய நூல்கள் குறிப்பிட்டுச் சொல்லும் காதல் பற்றிய செய்திகளைக் கவிஞர் தம்முடைய கவிதை வரிகளில் பல இடங்களில் எடுத்தாண்டிருப்பதை அறிய முடிகிறது. அதுபோலவே காப்பியங்களின் தாக்கமும் மாங்கனியில் இடம்பெற்றிருப்பதை அறியலாம்.

  • சிலம்பும் மேகலையும்
  • சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இணைந்த வடிவமாக மாங்கனியை அமைத்துள்ளார் கவிஞர் சிலப்பதிகாரத்தில் வரும் மாதவியைப் போலவே இளமை, அழகு, நாண், பொற்பு பெற்ற தலைவியாகவும், ஆடல், பாடல் அழகு சிறந்த கலைமடந்தையாகவும் மாங்கனி காணப்படுகிறாள்.

    மணிமேகலையின் துறவறத்தைக் காட்ட நினைத்த கவிஞர் கண்ணதாசன். பொன்னரசியைப் படைத்து மகிழ்வுறுகிறார். மனிதவாழ்வு பிறப்பில் தொடங்கி உலக இன்பங்களில் உழன்று, இறப்பில் முடியும் பெரும்பயணமாகி விடுகிறது. சிலர் விரும்பியதைப் பெறுகின்றனர். சிலர் விரும்பியது நிறைவேறாது மாய்ந்து விடுகின்றனர். சிலருக்குத் தோல்வியான வாழ்வு அமைந்தாலும் அதைத் தம் அருங்குணத்தால் வெற்றியாக்குகின்றனர். மாங்கனியில் வரும் பொன்னரசியின் வாழ்வு அவ்வாறு அமைந்த வாழ்வாகின்றது.

    காதலில் வளர்ந்து, கற்பினில் சிறந்து, பிரிவினில் தளர்ந்து பொறுமையில் நிறைகிறாள். காதலிலே தோல்வியைத் தழுவினாலும் கற்பினில் வழுவாது; இல்லற வாழ்வை இழந்தாலும் துறவற வாழ்வில் தன்னைப் புனிதப் படுத்திக் கொண்டவளாகப் பொன்னரசி காணப்படுகிறாள்.

    மூவேந்தரின் நாடுகளை இணைத்துப் பேசிய சிலப்பதிகாரம் போல மாங்கனியிலும் பேசப்பட்டுள்ளது.

    நாம்மூவர் ஆனாலும் ஒருமனத்தார்
    நாட்டின் வேறானாலும் ஓர் இனத்தார்
    தேன்பாய்ந்த செந்தமிழே சேர் குணத்தார்
    திசையினில் உலகிற்குத் தென் புலத்தார்

    என்று சேரமன்னனின் மூலம் கவிஞர் தமிழ் நாட்டின் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறார்.

    மணிமேகலை புத்தமதத்தைப் போற்றிடும் காப்பியம். மாங்கனி காவியத்திலும் புத்த மதத்திற்குச் சிறப்பிடம் அளிக்கப்பட்டுள்ளது. காவிய முடிவில் பொன்னரசி புத்த மதத்தைத் தழுவியவளாக அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

  • குறுந்தொகை
  • அதுபோலவே குறுந்தொகைப் பாடல் ஒன்றினையும் காதலர்களின் பிணைப்பைப் பற்றிச் சொல்வதற்குக் கவிஞர் கண்ணதாசன் எடுத்தாண்டுள்ளார்.

    குக்கூ வென்றது கோழியதனெதிர்
    துட்கென்றன்றுஎன் தூஉ நெஞ்சம்
    தோள் நோய் காதலர்ப்பிரிக்கும்
    வாள் போல் வைகறை வந்தன்றால் எனவே


    (குறுந்தொகை: 157)

    எனும் குறுந்தொகைப் பாடலை அடியொற்றியே,

    விடிந்தது கண்ணே என்றான் அடலேறு

    விழித்தவள் காதில் அச்சொல்
    ஒடிந்தது வீணை என்று ஒலித்தது

    என்பதாக அமைத்துள்ளார் கண்ணதாசன். இவ்வாறாகக் கவிஞர் கண்ணதாசன் தமது மாங்கனி காவியத்தில், தாம் கற்ற பழந்தமிழ் இலக்கியங்களின் பகுதியைப் பல இடங்களில் எடுத்தாண்டு, சுவைபடவும் பொருள்படவும் படைத்துள்ளார் என்பது புலனாகிறது.

    6.5.3 தமிழ்மொழியின் பெருமை

    இந்தியா விடுதலை பெற்றதும் மொழி, இனம், விடுதலையடைய வேண்டும் என்ற நோக்கில் தமிழ்க் கவிஞர்கள், தமிழர்களிடையே மொழியுணர்வைத் தோற்றுவிக்க, அதனைத் தமது கவிதைகளில் படைத்தனர்.

    செந்தமிழ்த் தேன் மொழியாள் - நிலாவெனச்
    சிரிக்கும் மலர்க்கொடியாள்

    எனத் திரைஇசைப் பாடல்களிலும் தமிழ்மொழியின் சிறப்பினைப் புகழ்ந்த கவியரசு கண்ணதாசன் தாம் படைத்த காவியங்களிலும் கொஞ்சி விளையாடும் கன்னித் தமிழைக் காணமுடிகிறது. 20 ஆம் நூற்றாண்டுக் கவிஞர்களில் முத்தமிழுக்கும் தொண்டாற்றிப் புகழ் பெற்றவர் இவர்.

    தென்சந்தப் பாப்பாடி நடனம் ஆடு,
    தேன்மொழியே, தமிழ்நாட்டார் மகிழ்வு காண!

    எனத் தேன்போன்ற தாய்மொழி பேசுபவளாக மாங்கனியை அழைத்து அறிமுகம் செய்வதைக் காணலாம்.

  • இன்பத் தமிழ்
  • மாங்கனி, இரவு நேரத்தில் இனிமையான ஒரு கீதத்தைப் பாடுகிறாள். அந்தக் கீதத்தின் இனிமையைச் சொல்ல நினைத்த கவியரசர் கண்ணதாசன்,

    என்னசுகம்! ஆகா என்ன சுகம் - மாறா
    இளமைத் தமிழ்ச் சிரிப்பில் என்னசுகம்?..
    தென்னமுதாம் தமிழ் இன்னமுதை நினைந்தால்
    என்ன சுகம் ஆகா....

    என்று தமிழ்மொழியால் பாடப்படும் பாடலின் இன்பத்தை உயர்த்திப் பேசுவதை அறியலாம்.

  • தமிழின் சிறப்பு
  • மோகூரின் மீது படையெடுத்துச் சென்று அந்நாட்டின் எல்லையில் படைகள் தங்கின. அன்று இரவில் மாங்கனியும் அடலேறுவும் தனிமையில் சந்தித்துப் பேசுகின்றனர்.

    தமிழரே! உயிரே! உள்ளந்
    தாங்கொணாக் காதலோடு
    உமதுருத் தேடி வந்தேன்

    என்று மாங்கனியைக் காணாதவனாக அடலேறு, தன்னுடைய ஏக்கத்தினை வெளிப்படுத்திய பேச்சிலும் கூடத் தமிழின் சிறப்பைப் புலப்படுத்தியிருப்பதைக் காணமுடிகிறது.

  • தமிழ்ப் பெண்கள் வீரம்
  • பாண்டிய மன்னனான பழையன் மகள் தென்னரசி. தென்னரசியை அறிமுகப்படுத்தும் கவிஞர்.

    தென்னரசி கலைச் செல்வி, தமிழர்கல்வி
    தேர்ந்தமகள்; வீரத்தில் சிறுத்தையன்னாள்!

    என்று தமிழ்ப்பெண்கள் வீரம் செறிந்தவர்கள் என்று எடுத்துக்காட்டியிருப்பது புலப்படுகின்றது.

    தாசிமகள் என்றாலும் கற்புக்காக்கும்
    தமிழ்மகள் சேரமகள்

    என்று மாங்கனி பல இடங்களில் பேசப்பட்டிருக்கிறாள்.

    தமிழ், தமிழர், தமிழ்நாடு எனும் கருத்தமைந்த வடிவங்களில் மாங்கனி காவியத்தை நமக்கெல்லாம் சொந்தமாக்கியுள்ளார் என்பதை உணரமுடிகிறது.