2.1 தொல்காப்பியரின் பொருளதிகாரம்

பொருளதிகாரம் ஒன்பது இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை,

  1. அகத்திணையியல்
  2. புறத்திணையியல்
  3. களவியல்
  4. கற்பியல்
  5. பொருளியல்
  6. மெய்ப்பாட்டியல்
  7. உவமவியல்
  8. செய்யுளியல்
  9. மரபியல்

என்று ஒன்பது இயல்களாகும். இவற்றுள் அகத்திணையியல் களவியல், கற்பியல் ஆகியவை அகத்திணை பற்றிய செய்திகளைக் கூறுகின்றன. பொருளியல் என்பது அகத்திணை பற்றிய செய்திகள் சிலவற்றையும், புறத்திணைக்குரிய செய்திகள் சிலவற்றையும் கூறுகின்றது.

மெய்ப்பாட்டியல் எட்டுவகை மெய்ப்பாடுகளைக் கூறுகின்றது. மெய்ப்பாடு என்பது உடம்பில் தோன்றும் உணர்வுகளாகும். உள்ளத்தில் தோன்றிய உணர்வுகள், அவ்வுள்ளத்தில் இருந்து எவ்வாறாவது வெளிப்பட்டு விடும். அதுவே மெய்ப்பாடாகும்.

உவமையியல் இரண்டு பொருள்களுக்கிடையே காணும் ஒப்புமைத் தன்மைகளைக் கூறுகின்றது.

செய்யுளியல் செய்யுள் இலக்கணத்தையும், மரபியல் தமிழில் பழைய காலந்தொட்டு இருந்து வரும் சொற்பொருள் மரபு பற்றியும், முறைமைகள் பற்றியும் கூறுகின்றன.

2.1.1 தொல்காப்பியர் கூறும் திணைப்பாகுபாடு

திணைகளை அகம், புறம் என்று பிரித்த தொல்காப்பியர், அகத்திணையை ஏழு பிரிவுகளாகப் பிரிப்பார். அவை

  1. குறிஞ்சி
  2. முல்லை
  3. மருதம்
  4. நெய்தல்
  5. பாலை
  6. கைக்கிளை
  7. பெருந்திணை

எனப் பெயரிடப்பட்டன.

தொல்காப்பிய அகத்திணையியலின் முதல் நூற்பா அகத்திணையைப் பற்றிக் கூறும் போது,

கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்
முற்படக் கிளந்த எழுதிணை என்ப

என்கிறது.

திணை என்றால் ஒழுக்கம் என்று பொருள்படும். அகமாவது ஓர் ஆணும், ஒரு பெண்ணும் தமக்குள்ளே கண்டு, காதல் கொண்டு ஒன்றுபடுதல்; சில காரணங்களால் பிரிதல்; பிரிந்து தனித்திருத்தல்; அத்தனிமைக்கு இரங்குதல்; சில நேரங்களில் பிணக்குக் கொள்ளுதல் என ஐந்துவகை அன்பு உரிப்பொருளைக் கொண்டுள்ளது. இவற்றைக் கூடல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் என்பர். இவை குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் எனவும் குறிப்பிடப்படுகின்றன.

2.1.2 அன்பின் ஐந்திணை

ஒருவனும், ஒருத்தியும் தமக்குள்ளே கண்டு காதல் கொள்வது குறிஞ்சித் திணை என்று பெயர் பெறுகிறது. காதலன் பொருளீட்டுவதற்கோ, போர்க்களத்திற்கோ, கல்வி கற்பதற்கோ, தூதுவனாகவோ சென்ற நேரத்தில் பிரிந்து இருக்கும் சூழலில் காதலி காத்திருப்பது முல்லைத் திணை என்னும் பெயர் பெறுகிறது.

தலைவனுக்கும், தலைவிக்கும் இடையே பல்வேறு காரணங்களால் பிணக்குகள் வரலாம். இதனை ஊடல் என்று கூறுவர். இந்த ஊடலைக் குறிக்கும் திணை மருதத் திணை எனப்படும். கடலில் மீன் பிடிக்கச் சென்றோ, பிற காரணங்களாலோ தலைவன் பிரிந்து சென்று, திரும்பி வர இயலாத சூழலில் தலைவி அவனுக்காகக் கவலைப்பட்டு இரங்கி நிற்றலை நெய்தல் திணை என்பர். தன் ஊரிலே வறட்சியின் காரணமாக வெளியூர் சென்று பொருளீட்டி வரலாம் என்று தலைவன் பிரிந்து செல்லும் நேரத்தில் இல்லத்தில் இருக்கும் தலைவியின் நிலை குறித்து அவன் கவலைப்படுதலும், செல்லும் வழியில் தலைவனுக்கு என்ன நேருமோ என்று தலைவி இல்லத்தில் இருந்து கவலைப்படுதலும் பாலைத் திணை எனப்படும். இவையே அன்பின் ஐந்திணை என்றும் அழைக்கப்படும்.

2.1.3 கைக்கிளை, பெருந்திணை

ஆண் விரும்பி, பெண் விரும்பாமலோ அல்லது பெண் விரும்பி, ஆண் விரும்பாமலோ இருப்பின் அது கைக்கிளை. அதாவது ஒரு தலைக் காமம்.

காதலிக்கும் ஆணைவிடப் பெண் மிகவும் மூத்தவளாகவோ, பெண்ணைவிட ஆண் மிகவும் மூத்தவனாகவோ இருப்பின் அது பெருந்திணை என்று பெயர் பெறும். இது பொருந்தாக் காமம்.

கைக்கிளை, பெருந்திணை ஆகிய இரண்டும் தமிழ்ச் சான்றோர்களால் போற்றப்படாத ஒழுக்கங்களாகும். ஒருவனும் ஒருத்தியும் விரும்புகின்ற ஐந்திணைகள் மட்டுமே அன்பின் ஐந்திணை என்று போற்றப்பட்டது.