புலவர்களும் கலைஞர்களும் புலன்களாகிய அறிவில் அழுக்கு
இல்லாத சான்றோர்கள் ஆவர். அவர்களது வாழ்க்கை குறித்துப்
புறநானூறு பற்றிய பாடத்தில் மேலும் அறிந்து கொள்வீர்கள்.
அவர்கள் பண்புகளால் உயர்ந்தவர்களை மட்டுமே பாராட்டிப்பாடுவார்கள். தங்கள் பாட்டுக் கலைத்திறனைப் பாராட்டி அந்த
வள்ளல்கள் தரும் பரிசில் பொருள்களைப் பெற்று, அவற்றை
மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுத்து மகிழ்ந்து வாழ்வார்கள்.
அடுத்த வேளை உணவுக்கே வழி இல்லை என்றாலும் தகுதி
இல்லாதவர்களைப் பற்றிப் பொய்யாகப் புனைந்து பாட
மாட்டார்கள். பாடப் படுவதற்கு உரிய தகுதி கொண்ட
செல்வர்கள் இருக்கும் இடம் தேடி, பழுத்த மரத்தைத் தேடிச்செல்லும் பறவைகள் போலப் பல நூறு கல் தொலைவு,
காட்டையும் மலையையும் கூடத் தாண்டிச் செல்வார்கள்.
அவ்வாறு சென்று பலவகைச் செல்வங்களையும் பரிசாகப்
பெற்றுத் திரும்பும் ஒரு கலைஞன் எப்படி இருப்பான்? ஒரு
சிற்றரசனிடம் படைகளோடு சென்று அவன் செலுத்த வேண்டிய
வரியைப் (இது திறை அல்லது கப்பம் எனப்படும்)
பெற்றுக்
கொண்டு
திரும்பும் பெரிய மன்னனைப் போல் காட்சி அளிப்பான்.
பரிசில் பெற்று வருபவன், இன்னும் பெறாதவன் இருவரையும்
ஒப்பிட்டால், எல்லா வகையிலும் சமமான கலைஞர்கள்தாம்.
ஆனால் ஒரே ஒரு வகையில் இருவரும் ஒப்பிடவே முடியாத
நிலையில் வேறுபடுகிறார்கள். அது எது? ஒருவன் செல்வச்
செழுமையின் உச்சத்தில் இருக்கிறான். மற்றவனோ வறுமையின்
அடி ஆழத்தில் கிடக்கிறான்.
பரிசில் பெற்ற கலைஞன் வறுமையில் இருக்கும்
கலைஞனிடம் தானே வருகிறான். அவன் மீது பரிவோடு
பேசுகிறான். தன் கலைத் திறனைப் பாராட்டிப் பரிசு வழங்கிய
வள்ளலின் கொடைத்திறனைப் புகழ்கிறான்; அவன் தகுதிகளை
விரித்துக் கூறுகிறான். அவனிடம் சென்றால் வறுமை தீரும்
என்று நம்பிக்கை ஊட்டுகிறான். அவனிடம் செல்வதற்கு
வழியை விரிவாகக் கூறி வாழ்த்தி அனுப்புகிறான்.
எனவே, கலைஞர்களுக்கு உதவும் வள்ளல்களை வாழ்த்திப்
புகழ்பெறச் செய்யும் கலைஞர்கள், தாங்களும் வள்ளல்களாய்
இருக்கின்றனர். இதை ஆற்றுப்படை இலக்கியம் உணர்த்துகிறது.
பழந்தமிழ் இலக்கியங்களை ஆராய்ந்து இலக்கணம் வகுத்த
தொல்காப்பியர், இந்தப் பண்பாடு மிக்க செயலைப் புலவர்கள்
பாடாண் திணையின் ஒரு துறையாகப் பாடி இருப்பதைக்
காட்டுகிறார். இதுவே ஆற்றுப்படை ஆகும். ஆறு என்றால் பாதை, வழி என்று பொருள். படை என்றால் படுத்துவது - அனுப்பிவைப்பது என்று பொருள்.
கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச்
சென்று பயன்எதிரச் சொன்ன பக்கமும்
(தொல். பு.இ. 88: 3-6)
(கூத்தர் = நாடகக் கலைஞர்; பாணர் = இசைக்கலைஞர்; பொருநர் = பாடலிலும் நடித்தலிலும் வல்லவர், போர்க்களத்தைச்
சிறப்பித்துப் பாடுபவர்; விறலி = ஆடல், பாடல், நடித்தல்
கலைகளில் வல்ல பெண்; உறழ்தல் = மாறுபடுதல்; காட்சி உறழத்
தோன்றல் = செல்வ நிலையில் ஏற்றத் தாழ்வு பார்த்த உடனே
புலப்படும் வண்ணம் ஒருவர்க்கு ஒருவர் வேறுபட்ட தோற்றத்துடன்
காட்சி அளித்தல்; அறிவுறீஇ = விளக்கிச் சொல்லி; பயன்எதிர =
வளங்களை அடைய)
இனிய மாணவர்களே, இந்த ஆற்றுப்படை என்னும் துறையைப்
பற்றித் தெளிவாகப் புரிந்து கொண்டீர்கள் அல்லவா? |