புறத்திணை பற்றிய சிறந்த பாடல்களின் தொகுப்பான புறநானூறு பற்றி விரிவாக அடுத்த பாடத்தில் படிப்பீர்கள். இதில் ஆற்றுப்படைத் துறையில் அமைந்த சிறு பாடல்கள் பல
உள்ளன.
புறநானூற்றில் தொகுக்கப்பட்டுள்ள முதல் ஆற்றுப்படைப்
பாடல் புலவர் ஆற்றுப்படையாக அமைந்துள்ளது. புலவர் பொய்கையார் ஒரு வறுமையுற்ற புலவனைச் சேரமான் கோக்கோதை மார்பனிடம் ஆற்றுப்படுத்திப் பாடி உள்ளார்.
கோதை மார்பின் கோதை யானும்
கோதையைப் புணர்ந்தோர் கோதை யானும்
மாக்கழி மலர்ந்த நெய்த லானும்
கள்நா றும்மே கானல்அம் தொண்டி
அஃதுஎம் ஊரே அவன்எம் இறைவன்.... (புற. 48: 1-5)
(கோதை = சேரமன்னனின் பெயர், பூமாலை; மாக்கழி = கருநீல
நிறம் கொண்ட கடற்கரை நீர்நிலை; கள்நாறும் = தேன்
மணக்கும்; கானல் = கடற்கரைச் சோலை; இறைவன் = மன்னன்)
இவ்வாறு சேர மன்னனையும் அவனது தலைநகர்
தொண்டியையும் அறிமுகம் செய்கிறார் புலவர். “தொண்டி
தேனின் மணம் கமழும் ஊர். அதுவே எங்கள் ஊர். அவன்தான் எங்கள் அரசன். அவனிடம் நீ சென்றால் அவன் தரும்
செல்வங்களைப் பெற்று நீ உன் வறுமையையும், அந்த வறுமை
மிக்க கடந்த காலத்தையும் மறந்துபோவாய். அவற்றை மட்டும்
அல்ல. வழிகாட்டிய என்னையும் கூட மறந்துவிடுவாய். அதனால்
கோதையிடம், “போரில் வென்று வாள் வன்மையால் நீ ஓங்கி
நிற்கும் போது தன் வாய் வன்மையால் உன் புகழை ஓங்கச்
செய்யும் புலவரைக் கண்டேன்” என்று, என்னை நினைத்துப்
பார்த்துச் சொல்” என்று பாடுகிறார் பொய்கையார்.
இப்பாடலில், தொண்டியில் தேன் மணம் கமழ்வதற்குக்
காரணம் சொல்கிறார். கோதை என்ற சொல் சேரமன்னன்
பெயரைக் குறிக்கும். பூக்களால் தொடுக்கப்பட்ட
மாலையையும் குறிக்கும். இந்தச் சொல் மீண்டும்
மீண்டும் வரும் வகையில் அழகாகச் சொற்களைத்
தொடுத்துள்ளார் புலவர்.
கோதை மார்பில் அணிந்துள்ள மாலையின் மலர்கள்;
அவனைத் தழுவிய மகளிர் கூந்தலில் சூடிய மாலையின் மலர்கள்;
கரிய நிறம் கொண்ட கடற்கரைப் பொய்கையில் மலர்ந்துள்ள
நெய்தல் மலர்கள் இவற்றில் உள்ள தேனால் தொண்டி என்ற
ஊரே தேன் மணக்கிறதாம்.
வறுமையில் வாடி வள்ளலைத் தேடி வறண்ட நிலத்தைத்
தாண்டிச் செல்கிறான், இந்தப் புலவன். இவனுக்குத் தேன்
மணத்தால் இனிமையான வரவேற்புத் தருகிறது சேரனின் ஊர்.
இனிய முகம் காட்டி விருந்தினரை ஓம்பும் வள்ளலின் இயல்பை
ஊரின் மேல் ஏற்றி, அங்கு எங்கும் இனிமை, எல்லாம் இனிமை
என்று பொய்கையார் உணர்த்துகிறார் இல்லையா?
கடற்கரையில் உள்ள ஊர் அது. அதில் புலால் நாற்றமாகிய
மீன் மணம்தான் இருக்கும். ஆனால், அதை மீறிப் பூ மணம்
ஆன தேன் மணம் எழுகிறது என்று புலவர் பாடுகிறார். இதில்
ஏதோ ஒரு குறிப்புப் பொருள் இருக்கிறது என்று
தோன்றுகிறது அல்லவா? என்ன அது? எண்ணிப் பார்ப்போமா?
சேரமான் வீரத்தில் சிறந்தவன். அதையும் விஞ்சுகின்ற
வகையில் ஈகைப் பண்பில் மிகவும் சிறந்தவன். இதையே மீன்
மணமும் அதை விஞ்சி எழுகின்ற தேன் மணமும்
குறிப்பாகச் சுட்டுகின்றன. எப்படி? இரத்தமும் சதையும்
நாறும் போர்க்களத்தில் சிறப்பது வீரம். இதைப் புலால் நாற்றமான
‘மீன் மணம்’ குறிக்கிறது. பூப்போன்ற மெல்லிய நெஞ்சத்தில்
ஊறும் தேன் போன்றது அருள். எப்போதும் புகழ் மணமும்
இனிமையும் கொண்ட இந்த ஈகைப் பண்பைத் ‘தேன் மணம்’
குறிக்கிறது.
|