6.0 பாட முன்னுரை

தமிழில் உள்ள இலக்கியங்களுள் மிகவும் பழமை வாய்ந்தவை சங்க இலக்கியங்களாகும். அச்சங்க இலக்கியங்களுள் வரலாற்றுச் செய்திகளைக் கூறும் இலக்கியங்கள் புற இலக்கியங்களே. அக இலக்கியங்களும் ஆங்காங்கே வரலாற்றுச் செய்திகளைச் சுட்டிச் சென்றாலும் புறநானூறு, பதிற்றுப்பத்து, ஆற்றுப்படை இலக்கியங்கள் போன்ற புற இலக்கியங்களே வரலாற்றுச் செய்திகளை நமக்கு முழுமையாகத் தருகின்றன.

சங்க இலக்கியங்களில் உள்ள பாடல்கள் புலவர் பலரால் பாடப் பட்டவை. இருப்பினும் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த அப்புலவர்கள் ஒருங்கிணைந்து திட்டமிட்டு, சில இலக்கியங்களை உருவாக்கியுள்ளனர் என்று கூறத்தக்க அளவில் சில இலக்கியங்கள் காணப்படுகின்றன. அத்தகைய இலக்கியங்களில் ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகியவை மிகச் சிறந்தவை. ஏனெனில் ஐந்து புலவர்கள் அன்பின் ஐந்திணைகளை எடுத்துக் கொண்டு ஆளுக்கு நூறு பாடல்களாக ஐங்குறுநூறு என்ற அகப்பாடல் தொகுதியினை எழுதினர். அதேபோல் பத்துப் பெரும் புலவர்கள் பத்துச் சேர அரசர்கள் பற்றி ஒவ்வொரு அரசனுக்கும் பத்துப் பத்துப் பாடல்களாகப் பாடிச் சிறப்புச் செய்துள்ளனர்.

ஒரு மரபில் பிறந்த பத்து மன்னர்கள் குறித்து, தொடர்ச்சியாகப் புலவர் பாடிய செய்யுட்கள் காலமுறை தவறாது இடம் பெற்றிருப்பதுவே இந்நூலின் தலைமைச் சிறப்பாகும்.

பதிற்றுப்பத்துப் பாடல்களைத் தொகுத்தோர் ஒவ்வொரு பத்துக்கும் பதிகம் ஒன்றனையும் சேர்த்துள்ளனர். பாடப்பட்ட சேர மன்னனின் மெய்க்கீர்த்தி போலப் பதிகம் அமைந்தது. பாடிய புலவர், பாடப்பட்ட மன்னன், புலவர் பெற்ற பரிசில் முதலான செய்திகளைப் பதிகம் கூறுகிறது. பதிகங்களைப் பாடியவர் பெயர் தெரியவில்லை.

ஒவ்வொரு பாட்டிற்கும் திணை கூறாமல் துறை, வண்ணம், தூக்கு, பெயர் என்று குறித்துச் சென்றுள்ளமை பதிற்றுப்பத்துக்கே உரிய தனிச் சிறப்பாகும்.