ஐந்தாம் பத்தைப் பாடியவர் பரணர் இமயவரம்பன்
நெடுஞ்சேரலாதனுக்கும் சோழன் மகள் மணக்கிள்ளிக்கும்
மகனாகப் பிறந்தவன் செங்குட்டுவன்.
சுடர்வீ வேங்கை,
தசும்பு துளங்கு
இருக்கை, ஏறா ஏணி, நோய்தபு
நோன்தொடை, ஊன்துவை அடிசில்,
கரைவாய்ப் பருதி,
நன்னுதல் விறலியர்,
பேரெழில் வாழ்க்கை, செங்கை மறவர்,
வெருவரு புனல்தார்
என்ற தலைப்பில் அமைந்த
ஐந்தாம் பத்து சேரன் செங்குட்டுவன் வரலாற்றை அறியத் துணை
புரியும்.
இவன் தன்னைப் பகைத்தவர்
அழியவும், நட்புடையவர்
ஆக்கம் பெறவும் துணை புரிவான். பகைவர் வலிமை கெட
வஞ்சியாமல் எதிர் நின்று போர் செய்பவன்.
இவனது ஆட்சி எல்லையாக
வடக்கே இமயமும்,
தெற்கே குமரியும் இருந்தன. இவன் போர் செய்வதையே
தொழிலாக உடையவன். இதனை,
போரடு
தானைப் பொலந்தார் குட்டுவ (பாடல்-3)
(தானை = சேனை)
எனப் பரணர் பாடியதில் இருந்து அறியலாம்.
வறுமையால் தன்னை நாடி வந்த வறியவர்கள் உண்பவற்றை
மறைக்காது உண்ணச் செய்தான். அவர்களோடு அமர்ந்து தானும்
உண்டான். பாணர், கூத்தர் முதலியோர் மகிழப் பொன்னணிகள் தந்தான்.
விறலியருக்குப் பெண் யானையையும், வீரர்களுக்கு
ஆண் யானைகளையும், பாணர்களுக்குக் குதிரையினையும்
பரிசாகக் கொடுத்தான். இதனை
பாடு
விறலியர் பல்பிடி பெறுக!
துய்வீ வாகை, நுண்கொடி உழிஞை
வென்றி மேவல், உருகெழு சிறப்பின்
கொண்டி மள்ளர் கொல்களிறு பெறுக!
மன்றம் படர்ந்து, மறுகுசிறைப் புக்கு
கண்டி நுண்கோல் கொண்டுகளம் வாழ்த்தும்
அகவலன் பெறுக மாவே!
(பாடல்-3)
(உருகெழு = அச்சம் தரும்;
மள்ளர் = வீரர்; அகவலன் = பகைவன்)
என்று பாடுகின்றார்.
செங்குட்டுவன் பகைவரும் வியந்து பாராட்டும்
கெடாத கல்வி
அறிவும், ஒழுக்கமும் உடையவன் என்பதை,
இகல்வினை
மேவலை ஆகலின் பகைவரும்
தாங்காது புகழ்ந்த தூங்குகொளை முழவின்
தொலையாக் கற்ப
(பாடல்-3)
(தாங்காது = வியப்புத் தாளாது;
தூங்குகொளை = தூங்கலோசை
கொண்ட; தொலையாக் கற்ப = கெடாத அறிவுடையவனே)
என்ற அடிகள் விளக்குகின்றன.
பல போர்களைச் செய்து பெற்ற பொருள்கள் அரியவை
என்று எண்ணாமல், தனக்காகப் பாதுகாக்காமல், மறந்தும்
கனவில்கூடப் பிறர் உதவியை வேண்டாமல் வாழ்ந்தவன்
செங்குட்டுவன். இதனை,
நிலம்புடைப்பு
அன்னஆர்ப்பொடு விசும்பு துடையூ
வான்தோய் வெல்கொடி தேர்மிசை நுடங்கப்
பெரிய ஆயினும் அமர்கடந்து பெற்ற
அரிய என்னாது ஓம்பாது வீசி
கலம்செலச் சுரத்தல் அல்லது கனவினும்
களைகஎன அறியாக் கசடுஇல் நெஞ்சத்து
ஆடுநடை அண்ணல்
(பாடல்-4)
(புடைப்பு = இடிப்பது; விசும்பு
துடையூ = வானத்தைத் தடவி;
கலம்செலச் சுரத்தல் = அணிகலன் வழங்குதல்; கசடு
= குற்றம்;
ஆடுநடை = பெருமித நடை)
என்ற பாடல் அடிகளால் பரணர்
செங்குட்டுவனை
வாழ்த்துவதிலிருந்து அறியலாம்.
செங்குட்டுவன் தனது நண்பன் அறுகை என்பானின்
பகைவன்
மோகூர் மன்னன் மீது படையெடுத்து வெற்றி பெற்றான்.
நண்பனின் பழிச் சொல்லைப் போக்கினான்.
தன் வெற்றிக்குத் துணையான வீரர்களுக்குச்
சோறு வேறு,
தனக்கு வேறு சோறு எனப் பிரித்துக் காணப்படாத வண்ணம் உணவளித்தான்.
பகைவரை அழித்த உன்போன்ற
வேந்தரும் இல்லை,
உனக்கு ஒப்பாரும் இல்லை என்று பரணர் செங்குட்டுவனைப் புகழ்கின்றார்.
நண்பர்க்கும், மகளிர்க்கும்
வணங்கிய மென்மையினையும்,
பகைவர்க்கு வணங்காத ஆண்மையினையும் உடையவன்
செங்குட்டுவன் என்பதை,
கைவல்
இளையர் நேர்கை நிரப்ப
வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை (பாடல்-8)
என்ற அடிகள் விவரிக்கின்றன. இது போன்ற அரிய
செய்திகளை
இப்பத்தின் வழி அறியலாம். |