6.5 சேரர்களின் கொடைத் திறம்

சேர மன்னர்கள் தாம் பெற்ற இன்பம் எல்லாரும் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கோடு வாழ்ந்துள்ளனர். கொடை உள்ளம் கொண்டவர்களாகத் திகழ்ந்துள்ளனர். தம்மை நாடி வரும் வறியவரின் பசிப்பிணியைப் போக்கி உள்ளனர். புதிய ஆடை அணிகலன்களை வழங்கியுள்ளனர்.

செல்வக் கடுங்கோ வாழியாதன் என்னும் சேரமன்னன் பெரும் பொருளைப் பிறருக்குக் கொடையாகக் கொடுத்தற்கு ஒரு நாளும் வருந்த மாட்டான். மகிழ்வும் அடைய மாட்டான். கொடுக்கும் போது எல்லாம் அளவில்லாது கொடுப்பான் எனப் பதிற்றுப்பத்துக் கூறும்.

ஈத்த திரங்கான்; ஈத்தொறு மகிழான்
ஈத்தொறும் மாவள் ளியன்என நுவலும்நின்
நல்லிசை தரவந் திசினே
- (பாடல்-1, ஏழாம் பத்து)

சேரன் செங்குட்டுவன் தனக்கு ஒருவகைச் சோற்றையும் பிறருக்கு இன்னொரு வகைச் சோற்றையும் சமைத்து வழங்காதவன் என, பரணர் அழகுபடக் கூறுகின்றார்.

சோறு வேறென்னா ஊன்றுவை அடிசில்
(பாடல்-5, ஐந்தாம் பத்து)

போரில் பெற்ற பெருஞ்செல்வத்தை எளியோர்க்கு வாரி வழங்கினான் செங்குட்டுவன் என்பதை,

பெரிய வாயினும் அமர் கடந்து பெற்ற
அரிய என்னாது ஓம்பாது வீசி
- (பாடல்-4, ஐந்தாம் பத்து)

என்ற அடிகள் கூறுகின்றன.

வறுமையில் வாடுவோர்க்கு உதவுவது கடமை. இதனை உணர்ந்து அவர்களின் துன்பம் தீரும் அளவு பொருள்கள் வழங்கியவன், அன்பு காட்டியவன் இளஞ்சேரல் இரும்பொறை என்பதை,

நல்லிசை நிலைஇய நனந்தலை உலகத்து
இல்லோர் புன்கண் தீர நல்கும்
நாடல் சான்ற நயனுடை நெஞ்சின்
(பாடல்-6, ஒன்பதாம் பத்து)

என்ற அடிகள் வழி அறியலாம்.

வறட்சிக் காலத்திலும் பாணர், கூத்தர் முதலான பரிசிலரின் பசிப்பிணியைப் போக்கினான். அவர்களுக்குத் தக்க அணிகலனை வழங்கினான் செங்குட்டுவன் என்பதை மூன்றாம் பத்து விவரிக்கின்றது.

பகைவரோடு போரிட்டுக் கவர்ந்த பொருளை, பாணர் முதலிய இரவலர்கள் மகிழும்படி, வேண்டாம் என்று மனநிறைவு கொள்ளும் அளவிற்கு வழங்கினான். தளர்ந்த குடியை உயர்த்தினான். இதனைக் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் செய்தான் என்பதை,

துப்புத் துவர்போகப் பெருங்கிளை உவப்ப
ஈத்துஆன்று ஆனா இடனுடை வளனும்
துளங்குகுடி திருத்திய வளம்படு வென்றியும்
-(பாடல்-2, நான்காம் பத்து)

(துப்பு = வலிமை; ஈத்து ஆன்று ஆனா இடனுடை வளன் = ஈந்து, பெற்றவர் இனிவேண்டா என்பதால் தங்கிப்போன செல்வம்; துளங்குகுடி = தளர்ந்தகுடி)

என்று காப்பியாற்றுக் காப்பியனார் கூறுகிறார்.