1.2 முல்லைத் திணையின் முப்பொருள்

சங்க இலக்கியம்-1 என்ற பாடத் தொகுதியில் அக-புறத்திணைகளின் முழுமையான விளக்கங்களை அறிந்திருப்பீர்கள். இங்கு முல்லைத் திணைக்கு உரிய முதல், கரு, உரிப் பொருள்களைச் சுருக்கமாகக் காணலாம்.

1.2.1 முதற்பொருள்

முதற்பொருள் எனச் சொல்லப்படுவது நிலமும்,பொழுதும் என்பதை அறிவீர்கள். அக நிகழ்வுகள், பேச்சுகள் நிகழும் இடங்களையும், காலத்தையும் குறிப்பது முதற்பொருள்.பொழுது (காலம்) பெரும்பொழுது, சிறுபொழுது என இருவகைப்படும். முல்லைத் திணையின் நிலம், காடும் காடு சார்ந்த இடமும் ஆகும். முல்லைக்கு உரிய பெரும்பொழுது கார்காலம் (மழைக்காலம்) ஆகும். சிறுபொழுது மாலை ஆகும்.

1.2.2 கருப்பொருள்

தெய்வம், உயர்ந்தோர், அல்லாதோர், பறவை, விலங்கு, ஊர், நீர், பூ, மரம், உணவு, பறை, யாழ், பண், தொழில் போன்றவை கருப்பொருள் ஆகும்.

முல்லைத் திணைக்குரிய தெய்வம்-திருமால்; மக்களுள் உயர்ந்தோர் - குறும்பொறை நாடன், கிழத்தி; உயர்ந்தோர் அல்லாதோர் - ஆயர், இடையர், ஆய்ச்சியர், இடைச்சியர்; பறவை - கானக்கோழி; விலங்கு - முயல், மான்; ஊர் - பாடி, சேரி; நீர் - காட்டாறு; பூ - முல்லை, தோன்றி; மரம் - கொன்றை, குருந்து, காயா; உணவு - வரகு, சாமை; பறை - ஏறுகோட்பறை; யாழ் - முல்லையாழ்; பண் - சாதாரிப் பண்; தொழில் - சாமை, வரகு விதைத்தல், ஆநிரை மேய்த்தல் போன்றவை.

1.2.3 உரிப்பொருள்

முல்லைத் திணைக்கு உரிய உரிப்பொருள் இருத்தலும், இருத்தல் நிமித்தமும் ஆகும். நிமித்தம் என்பதற்குத் தொடர்பானவை என்று பொருள் கொள்ளலாம். போர் அல்லது பொருள் ஈட்டும் வினை முடிக்கச் சென்ற தலைவன் திரும்பி வரும் வரை தலைவி பிரிவைத் தாங்கிக் கொண்டு இருப்பாள். இதனையே இருத்தல் அல்லது ஆற்றியிருத்தல் என்பர். இருத்தல் அல்லது இருத்தல் தொடர்பான செய்திகள் முல்லைத் திணையில் இடம் பெறும்.