1.5 இலக்கியச் சுவை

படிக்கப் படிக்க இன்பம் தருவது சிறந்த இலக்கியம் ஆகும். கற்பனை, சொல்லாட்சி, உவமை ஆகியன இலக்கியத்திற்குச் சுவை ஊட்டுவன. முல்லைத் திணைப் பாடல்களில் இலக்கியச் சுவை தரும் கற்பனை, சொல்லாட்சி, உவமைகளை இனி அறியலாம்.

1.5.1 கற்பனை

கார் காலத் தொடக்கத்தை வருணிக்கும் கற்பனைச் சிறப்புமிக்கது குறுங்குடி மருதனார் பாடல் (அகநானூறு 4). முல்லைக் கொடிகளில் கூர்மையான முனையை உடைய அரும்புகள் தோன்றின ; தேற்றா மரத்திலும் கொன்றை மரத்திலும் மெல்லிய அரும்புகள் கட்டு அவிழ்ந்து விரிந்தன. இரும்பை முறுக்கி விட்டது போன்ற கரிய பெரிய கொம்பை உடைய ஆண் மான்கள் பரல் கற்களை உடைய பள்ளங்களில் துள்ளிக் குதித்தன. அகன்ற இவ்வுலகம் நீர் இன்மையால் வருந்திய வருத்தம் நீங்கும்படி, மேகம் விரைந்து எழுந்து மழைத்துளிகளை வீழ்த்திக் கார் காலத்தைத் தோற்றுவித்தது. பூத்த சோலையில் வண்டுகள் பெடையுடன் சேர்ந்து யாழ் நரம்பு போல இன்னிசை எழுப்பின.

தலைவியைக் காணப் பெரும் ஆவலுடன் திரும்புகிறான் வினை முடித்த தலைவன். புறப்படுமுன் தேர் மணியினது நாக்கு ஒலிக்காதபடி அதைக் கட்டுகிறான்.காரணம் என்ன? வண்டுகள் தம் துணையுடன் கூடி மகிழும் போது, தேர் மணி ஓசை அவைகளுக்கு அச்சத்தைக் கொடுத்துப்
பிரித்து விடக் கூடாது என்பதே நோக்கம். காதல் தொடர்பான இத்தகைய மென்மையான உணர்வைத் தலைவனின் ஒரு சிறு செயல் மூலம் காட்டிய புலவரின் கற்பனைத் திறன் பாராட்டத் தக்கது. வண்டின் காதலுக்கு இடையூறு செய்ய நினையாத தலைவன் தலைவிக்குத் துன்பம் ஏற்பட அனுமதியான். அதனால் விரைவில் வருவான் என்ற குறிப்பைத் தலைவிக்குத் தோழி உணர்த்தும் சிறப்பையும் இப்பாடலில் காண்கிறோம்.

பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த
தாதுஉண் பறவை பேதுறல் அஞ்சி
மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்

(அகநானூறு - 4 : 10-12)

(பொங்கர் = சோலை; தாது உண் பறவை = மலரின் தேனை உண்ணும் வண்டு; ஆர்த்த = ஒலிக்காதபடி கட்டிய; பேதுறல் மயங்குதல்)

இவ்வரிகள் கற்பனைச் சிறப்பு வாய்ந்த தோழியின் சொல்லாற்றலை வெளிப்படுத்துகின்றன.

1.5.2 சொல்லாட்சி

புலவன் எடுத்தாளும் சொற்களே ஒரு பாடலை என்றும் நெஞ்சில் நிலை நிறுத்துவன. கார்ப்பருவம் வந்தது; தலைவன் வரவில்லை; வருந்துகிறாள் தலைவி. தோழி, தலைவியைத் தேற்றுகிறாள். ‘இது கார்ப் பருவம் அன்று மயங்காதே’ என்கிறாள். தோழி கூறுவதைப் பாருங்கள் :

தோழியே! வினைமுடிக்கச் சென்ற தலைவன் வருவதாகச் சொன்ன பருவம் இதுதானே என்று என்னை வினவுகின்றாய்! இது அன்று! அறிவில்லாமல், பருவ காலத்தை மறந்து கடல் நீரை உண்டது மேகம். நீரை உண்டதால் சுமை தாங்க மாட்டாமல் அது மழையைப் பெய்தது. பிடவும், கொன்றையும், காந்தளும் இன்னும் பலவும் மலர்ந்து விட்டன. காரணம் அவற்றின் அறிவின்மை!

இவ்வாறு தலைவியைத் தேற்றும் தோழி, ‘நீயும் அறிவற்றுக் கார்காலம் என மயங்காதே’ என்ற குறிப்புரையைத் தருகிறாள்.

மதியின்று
மறந்து கடல்முகந்த கமஞ்சூல் மாமழை,
பொறுத்தல் செல்லாது இறுத்த வண்பெயல்
காரென்று அயர்ந்த உள்ளமொடு தேர்வில
பிடவமும் கொன்றையும் கோடலும்
மடவ வாகலின், மலர்ந்தன பலவே.

(நற்றிணை : 99)

(மதிஇன்று = அறிவில்லாது; கமம் = நிறைந்த; மாமழை = மேகம்; இறுத்த = பெய்தொழித்தல்; அயர்ந்த = மறதி உற்ற; தேர்வில = அறியாதன; மடவ = அறிவில்லாதவை)

தலைவியைத் தேற்றக் கார்கால அறிகுறிகளாகிய மழையையும் மலர்களையும் குறைசொல்லும் தோழி, மதிஇன்று, மடவ என்ற கடும் சொற்களால் அவற்றைக் கடிந்து கொள்கிறாள். இளந்திரையனார் என்னும் புலவரின் இச்சொல்லாட்சிகள் கவிதையின் உணர்ச்சிக்குப் பொருத்தமாக அமைந்துள்ளதைக் காணலாம்.

தலைவியை, அவள் காதலிக்கும் தலைவனுக்கு அல்லாமல், வேறொருவனுக்கு மணம் பேசுகின்றனர் பெற்றோர். இது வேற்று வரைவு எனப்படும். இந்நிலையில் தலைவி தலைவனுக்குச் செய்தி தெரிவிக்கக் கூறும் கலித்தொகைப் பாடலில் சொல்லாட்சி சிறந்திருப்பதைக்
காணலாம்.

தருமணல் தாழப்பெய்து இல்பூவல் ஊட்டி
எருமைப் பெடையோடு எமர்ஈங்கு அயரும்
பெருமணம் எல்லாம் தனித்தே ஒழிய

வரிமணல் முன்துறைச் சிற்றில் புனைந்த
திருநுதல் ஆயத்தார் தம்முள் புணர்ந்த
ஒருமணம் தான்அறியும் ; ஆயின் எனைத்தும்
தெருமரல் கைவிட்டு இருக்கோ அலர்ந்த
விரிநீர் உடுக்கை உலகம் பெறினும்
அருநெறி ஆயர் மகளிர்க்கு
இருமணம் கூடுதல் இல்இயல்பு அன்றே

(கலித்தொகை- 114 : 12-21)

(பூவல் = செம்மண்; பெடை = கொம்பு; புணர்ந்த = கலந்த; தெருமரல் = கலக்கம்)

“தோழியே! மணலை உடைய துறையில் தோழியரொடு சிறி வீட்டைக் கட்டி விளையாடினேன் அல்லவா? பின்பு தோழியர் கூட்டத்தில் இருந்து நான் தனியே நீங்கினேன். தலைவன் என்னைச் சேர்ந்தான். அந்த ஒரு மணத்தை என் மனம் மட்டும் அறியும். என் உறவினர், வீட்டில் மணலைப் பரப்பிச் செம்மண் பூசுகின்றனர்; தெய்வமாய் வைத்த எருமையின் கொம்பை வழிபடுகின்றனர். உறவினர் நடத்த எண்ணும் திருமணம் (பெருமணம்) வேறு ஒருவனுக்கு என்னை மணம் முடிப்பதற்காக என்பதால், இரண்டு மணம் உண்டாகின்றது. விரிந்த கடலை ஆடையாக உடுத்திய உலகத்தைப் பெற்றாலும் ஆயர் மகளுக்கு இருமணம் கூடுதல் இயல்பு இல்லை”. இதுவே இப்பாடலின் பொருள் ஆகும்.

தலைவியின் பேச்சில் ஒருமணம், பெருமணம், இருமணம் என வரும் சொற்களின் ஆட்சி காதலின் உண்மை இயல்பை வாதிட்டு எடுத்துக் காட்டும் கருவியாகப் பயன்படுவது காணலாம்.

தலைவி, ஆயர் மகளிரோடு சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது குருந்தம் பூவால் ஆன மாலை சூடிய ஆயன் வருகிறான். அவன் தலைவியை நோக்கி,

முற்றுஇழை ஏஎர் மடநல்லாய் ! நீஆடும்
சிற்றில் புனைகோ, சிறிது ?

(இழை = அணிகலன்; ஏஎர =அழகு; மடநல்லாய் = இளம் பெண்ணே; புனைகோ = கட்டவா)

என்று கேட்கிறான்.

‘நிறைந்த அணிகலன்களை அணிந்த அழகிய இளம் பெண்ணே! நீ கட்டி விளையாடும் மணல் வீட்டை நானும் சிறிது கட்டவோ?’ என்பது பொருள்.

நீ
பெற்றேம்யாம் என்று, பிறர் செய்த இல்இருப்பாய்
கற்றது இலைமன்ற காண்

(கலித்தொகை : 111 )

என்று தலைவி பதில் சொல்கிறாள்.

“நீ மணந்து கொண்டு எனக்கு ஒர் இல்லத்தை அமைத்துக் கொடுக்க அறியாதவன். பெற்றோர் கட்டிய வீட்டில் இருக்கவே எண்ணுபவன். ஆதலால் நீ உலகில் எதையும் கற்றவன் இல்லை” என்று சொல்கிறாள் தலைவி. இப்பாடலில் சிற்றில் என்ற சொல், வாழும் இல்லத்தைக் குறிக்கும் இல் என்ற சொல் பிறக்கக் காரணமாகி விடுகிறது. ‘விளையாட்டு வினை’ ஆகிறது. திருமணத்தை நிகழ்த்தத் தலைவனைக் குறிப்பினால் தூண்டுகிறாள் தலைவி.

1.5.3 உவமை

ஒன்றை மற்றொன்றோடு ஒப்பிட்டுச் சொல்லும் உவமை நயத்தை முல்லைத் திணைப் பாடல்களில் மிகுதியாகக் காணலாம். இயற்கையோடு ஒட்டிய உவமை, தெய்வத்தோடு ஒட்டிய உவமை, வாழ்க்கையோடு ஒட்டிய உவமை எனப் பல வகைகளில் உவமைகள் முல்லைப் பாடல்களில் காணப்படுகின்றன.

  • இயற்கையோடு ஒட்டிய உவமை
  • ஏறு தழுவும் இடத்து ஓசைக்கு இடி முழக்கம் உவமை ஆகிறது. ஒரு காளையின் நிறத்திற்குப் பட்டுப்பூச்சியின் நிறம் உவமையாகிறது. மணிகளையுடைய மலைகளிலிருந்து விழும் அருவிகள் அழகின் எல்லையைத் தாண்டிய வெண்மையான கால்களை உடைய காளைக்கு உவமையாகின்றன. விண்மீன்களைக் கொண்ட அந்திக் காலத்துச் சிவந்த வானம் சிவந்த காளைக்கு உவமையாகிறது. இவ்வாறு இயற்கையோடு ஒட்டிய பற்பல உவமைகள் முல்லைக்கலியில் நிறைந்து கிடக்கின்றன.

  • தெய்வத்தோடு ஒட்டிய உவமை
  • கொல்லும் தொழிலை உடைய சிவபெருமான் சூடிய இளம்பிறை, சிவந்த காளையின் வளைந்த நீண்ட கொம்புக்கு உவமையாகிறது.

    கொலைவன் சூடிய குழவித் திங்கள்போல்
    வளையுபு மலிந்த கோடுஅணி சேயும்

    கம்சன் முதலியவர் தன்மீதுவரவிட்ட குதிரையின் வாயைப் பிளந்து அடித்தான் கண்ணன். அவனைப் போல் தன்மேல் பாய்ந்த சிவந்த காளையின் கொம்பைப் பிடித்துக் கொண்டு, அதன் வலிமையை அடக்குகிறான் ஓர் ஆயன். (கலித்தொகை, 103 - 15-16 ; 50-55)

    மாவலி வார்த்த நீர் தன் கைகளில் விழுந்த அளவில் பெரிய உருவமாக வளர்ந்தவன் திருமால். அத்திருமாலைப் போன்று மேகம் கடல்நீரைக் குடித்து உலகத்தை வளைத்து, பெரிய மழையைக் கொட்டியது. இந்த உவமையை முல்லைப்பாட்டு,

    நீர்செல நிமிர்ந்த மாஅல் போலப்
    பாடிமிழ் பனிக்கடல் பருகி வலனேர்பு
    கோடுகொண்டெழுந்த கொடுஞ்செலவு எழிலி
    பெரும்பெயல் பொழிந்த

    (முல்லைப்பாட்டு : 3-6)

    (பாடு இமிழ் = ஒலி முழங்கும்; பனிக்கடல் = குளிர்ச்சியான கடல்; பருகி = குடித்து; வலனேர்பு = வலப்புறமாக எழுந்து; கொடுஞ்செலவு = விரைந்து செல்லும்; எழிலி = மேகம்; பெரும்பெயல் = மழை) என்று கூறுகிறது.
     

  • வாழ்க்கையோடு ஒட்டிய உவமை
  • ஆயர்தம் வாழ்க்கை முறைகள் உவமை ஆவதும் உண்டு. ஆயர் குலப் பெண்டிர், திரிகையில் அரிசியை இட்டுச் சுழற்றுவார்கள். சுழற்றும் போது ஏற்படும் ஒலி, விரைந்து வரும் தேரின் சக்கரம் மணலை அறுத்துக் கொண்டு வரும் ஒலிக்கு உவமையாகிறது, பெருந்தலைச் சாத்தனாரது அகநானூற்றுப் பாடலில்.

    மனையோள்
    ஐதுஉணங்கு வல்சி பெய்துமுறுக்கு உறுத்த
    திரிமரக் குரல்இசை கடுப்ப, வரிமணல்
    அலங்குகதிர்த் திகிரி ஆழி போழ
    வரும்கொல் தோழி !

    (அகநானூறு- 224 : 12-15)

    (ஐது உணங்கு = பதமாகக் காய்ந்த; வல்சி = அரிசி; முறுக்கு உறுத்த = சுழற்ற; திரிமரம் = திரிகை; கடுப்ப = போல; திகிரி = சக்கரம்; போழ = பிளந்து கொண்டு)

    மனைவி பதமாகக் காய்ந்த அரிசியை எடுத்துத் திரிகையில் இட்டுச் சுழற்றுவாள். அதன் ஒலி போல் வரி மணலில் வட்டச் சக்கரம் அறுத்துக் கொண்டு செல்லும் ஓசை தலைவனுக்கு ஒலிக்கிறது.

    1.5.4 உள்ளுறை உவமம்

    கருப்பொருள்களின் அடிப்படையில் மறைமுகமாக (குறிப்பாக) அமைக்கும் உவமம் உள்ளுறை உவமம் எனப்படும்.

    பொருளைக் கூறாமல் உவமையை மட்டும்வருணனையாகக் கூறும் தன்மையை உள்ளுறை உவமத்தில் காணலாம். தலைவியைக் காணும் ஆசையால் தேரை விரைந்து செலுத்துமாறு தேர்ப்பாகனை வேண்டுகிறான் தலைவன். வாயைக் குவித்துச் சீழ்க்கை ஒலி எழுப்புகிறான் ஓர் இடையன். சிறிய தலையை உடைய ஆட்டுக் கூட்டம் அந்த ஒலியைக் கேட்கிறது. வேற்றிடத்திற்குச் செல்லாது மயங்கி அந்தக் கூட்டம் அங்கேயே தங்கிவிடுகிறது என்று நற்றிணைப் பாடலில் (142) வரும் கருத்து உள்ளுறை ஆகிறது. வேற்றிடம் புக நினைக்கும் ஆட்டுக் கூட்டம் இடையன் விளித்ததால் இருந்த இடத்திலேயே தங்கி விடுகிறது என்னும் கூற்றில், சோர்வடைந்த தலைவனின் உள்ளம் பாகன் விரைந்து செலுத்தும் தேர் ஒலியால் சோராது தங்குகிறது என்னும் குறிப்புப் பொருள் அமைந்துள்ளது. ஆகவே இது உள்ளுறை உவமம் ஆகும்.

    ஒடுங்குநிலை மடிவிளி
    சிறுதலைத் தொழுதி ஏமார்த்து அல்கும்
    புறவினதுவே
    (நற்றிணை-142 : 6-8)

    (மடிவிளி = சீழ்க்கை ஒலி; தொழுதி = தொகுதி; ஏமார்த்து = மயங்கி; அல்கும் = தங்கும்; புறவு = காடு)