3.1 மருதப் புலவர்கள்

மருதத் திணையில் பல புலவர்கள் பாடல்களைப் படைத்துள்ளனர். ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, கலித்தொகை ஆகிய அகநூல்களில் பல பாடல்கள் மருதத் திணையில் பாடப்பெற்றுள்ளன.

மருதன் இளநாகனார், ஓரம்போகியார் ஆகிய இரு புலவர்களும் மருதம் பாடுவதில் வல்லவர்கள். ஐங்குறுநூற்றில் மருதப்பாடல்களை ஓரம்போகியார் பாடியுள்ளார். கலித்தொகையில் மருதக்கலிப் பாடல்களை மருதன் இளநாகனார் பாடியுள்ளார். ஐங்குறுநூற்றில் நூறு பாடல்கள், கலித்தொகையில் முப்பத்தைந்து பாடல்கள், அகநானூற்றில் நாற்பது பாடல்கள் மருதத்திணைப் பாடல்களாகும். இப்பாடத்தில் ஐங்குறு நூற்றின் மருதப் பாடல்களோ, கருத்துகளோ குறிக்கப்படும் போது பாடியவர் ஒரே புலவர் (ஓரம்போகியார்) என்பதால், பாடிய புலவரின் பெயர் சுட்டப்படவில்லை. அதைப்போல் மருதக் கலிப்பாடல்களைப் பாடிய மருதன் இளநாகனார் பெயரும் கலித்தொகைப் பாடல்களையோ, கருத்துகளையோ அடுத்துக் குறிப்பிடப்படவில்லை.