3.3 முப்பொருள் வெளிப்பாடு

சென்ற பாடங்களில் அறிந்ததைப் போல், இப்பாடத்தில் மருதத் திணைப் பாடல்களில் முதல், கரு, உரிப் பொருள்கள் எவ்வாறு வெளிப்படுகின்றன என்பதை அறியலாம்.

3.3.1 முதற்பொருள் வெளிப்பாடு 


வாழி ஆதன் வாழி யவினி
விளைக வயலே
(ஐங்குறுநூறு - 2 : 1-2)

(ஆதன் அவினி = சேரமன்னருள் ஒருவன்)

தோழி தலைவனிடம் கூறும் கூற்று இது. தலைவனின் நட்பு நாள்தோறும் பெருக வேண்டும் என்று கூறவரும் தோழி, ஆதன் அவினியை முதலில் வாழ்த்துகிறாள். பின்னர் ‘விளைக வயலே’ என வாழ்த்துகிறாள். இவ்வாழ்த்தில் மருதத்தின் முதற்பொருளாகிய நிலம் வெளிப்படுகின்றது. மருதநிலப் பகுதி வயல், கழனி என்று அழைக்கப்படுகின்றது. இப்பாடலில் வயல் என்ற சொல் மருத நிலப்பகுதியைக் குறிக்கிறது.

பூத்த கரும்பிற் காய்த்த நெல்லிற்
கழனி ஊரன்

(ஐங்குறுநூறு - 4 : 4-5)

(கழனி = வயல்)

பூத்துப் பயன்படாத கரும்பையும், காய்த்துப் பயன்படும் நெல்லையும் உடைய வயல்வளம் மிகுந்த ஊரினை உடையவன் என்பது இதன் பொருள்.

மருதத் திணையின் பெரும்பொழுது ஆறு பருவங்களும் என்பதால் ஆண்டின் பன்னிரு மாதங்களும் மருதத்திற்கு உரியனவாகக் கருதப்படுகின்றன. ஆதலால் பெரும்பொழுதை மருதப் பாடல்களில் தேட வேண்டியதில்லை.

பல பாடல்களில் புதுவெள்ளம் பெருகிவரும் மழைக்காலம் குறிக்கப்படுகின்றது.

நலமிகு புதுப்புனல் ஆடக் கண்டோர்
(ஐங்குறுநூறு - பாடல் 64 : அடி-2)

பெரும்புனல் வந்த இருந்துறை விரும்பி
(குறுந்தொகை - 80 : 2, ஒளவையார்)

(இரும் துறை = பெரும் நீர்த்துறை)

மருதத் திணைக்கு உரிய சிறுபொழுது வைகறை. அதிகாலை அல்லது விடியல் நேரத்தைத்தான் வைகறை என்று சொல்வர்.

ஐங்குறுநூற்றுப் பாடலொன்றில் விடியற்பொழுது குறிக்கப்படுவதைக் காணலாம்.

பரத்தை தலைவியைப் புறம் கூறினாள். ஆனால் தலைவிதான் தன்னைப் புறம் கூறியதாக அவள் பிறர்க்குக் கூறினாள். அதனைக் கேட்ட தலைவி, தான் அடங்கியது போல் பரத்தை அடக்கத்தைக் கொள்ளவில்லை என்று தலைவனிடம் கூறுகிறாள் ‘இருள் சரியாகப் புலராத வைகறை (அதிகாலை)ப் பொழுதில் ஆம்பல், தாமரை போலத் தோற்றம் தரும் ஊரையுடைய தலைவனே’ என அவனை அழைக்கிறாள்.

கன்னி விடியல் கணைக்கால் ஆம்பல்
தாமரை போல மலரும் ஊர !

(ஐங்குறுநூறு - 68 : 1-2)

(கணைக்கால் = திரண்ட தண்டு; கன்னி விடியல் = மிக்க இளமையான, சரியாகப் புலராத காலைப் பொழுது)

சிறப்பற்ற ஆம்பல் தாமரை போலத் தோன்றுகிறது என்பதில் பரத்தை, தலைவியைப் போலத் தோன்றுகிறாள் என்ற உட்பொருளை உணர முடிகிறது.

வாள்போல் வைகறை வந்தன்றால் எனவே
(குறுந்தொகை - 157 : 4, அள்ளூர் நன்முல்லையார்)

என்பதில் வைகறை, தலைவனைத் தன்னிடமிருந்து பிரிக்க வந்துவிட்டது எனத்தலைவி வருந்துவதைத் தெரிவிக்கிறது.

3.3.2 கருப்பொருள் வெளிப்பாடு

மருதத் திணைக்கு உரிய கருப்பொருள்கள் பாடல்களில் வெளிப்படும் முறையைச் சில சான்றுகள் கொண்டு அறியலாம்.

  • தெய்வம்
  • இந்திரன்

    இந்திர விழவில் பூவின் அன்ன
    (ஐங்குறுநூறு - 62 :1)

    (இந்திர விழவில் = இந்திரனுக்குச் செய்யப்படும் விழாவில், பூவின் அன்ன = பூவைப் போன்ற)

  • மக்கள்
  • மகிழ்நன், ஊரன், உழவர்

    எவ்வூர் நின்றன்று மகிழ்ந நின்தேரே !
    (ஐங்குறுநூறு - 62 : 4)

    (நின்றன்று = நின்றது)

    கலிமகிழ் ஊரன்
    (அகநானூறு - 146 :5, உவர்க்கண்ணூர்ப் புல்லங்கீரனார்)

    (கலி = ஆரவாரம்)

    வித்திய உழவர் நெல்லொடு பெயரும்
    (ஐங்குறுநூறு - 3 : 4)

    (வித்திய = விதைத்த)

  • பறவை
  • நாரை, நீர்க்கோழி

    கயலார் நாரை போர்வில் சேக்கும்
    (ஐங்குறுநூறு - 9 : 4)

    (கயலார் = மீனை உண்ணும்; போர்வு = நெற்போர்; சேக்கும் = தங்கும்)

    நீருறை கோழி நீலச் சேவல்
    (ஐங்குறுநூறு - 51 : 1)

    (உறை = தங்கும்)

  • விலங்கு
  • எருமை

    மருதத் திணைக்கு உரிய விலங்கான எருமையை மையமாக்கி எருமைப் பத்து என்ற தலைப்பில் ஐங்குறுநூற்றில் பத்துப்பாடல்கள் உள்ளன.

    கருங்கோட்டு எருமை (ஐங்குறுநூறு - 92 : 1)

    (கோடு = கொம்பு)

  • ஊர்
  • மூதூர்

    ஆதி அருமன் மூதூர் அன்ன
    (குறுந்தொகை - 293 : 4, கள்ளில் ஆத்திரையன்)

    (ஆதி = பழைமையான; அருமன் = அருமன் என்பவனுடைய)

  • நீர்
  • பொய்கை

    ஊர்க்கும் அணித்தே பொய்கை

    (குறுந்தொகை - 113 : 1, மாதிரத்தன்)

    (அணித்து = அருகில்)

  • பூ
  • தாமரை, ஆம்பல்

    ஆம்பல்
    தாமரைக்கு இறைஞ்சும் தண்துறை ஊரன்

    (நற்றிணை - 300 : 3-4, பரணர்)

    (இறைஞ்சும் = எதிரில் சாயும்; தண்துறை = குளிர்ச்சி பொருந்திய நீர்த்துறை)

  • மரம்
  • காஞ்சி, மருதம்

    காஞ்சி நீழல், தமர்வளம் பாடி
    (அகநானூறு - 286 : 4, ஓரம்போகியார்)

    (நீழல் = நிழல்; தமர் = தம் சுற்றத்தார்)

    மருதுஉயர்ந்து ஓங்கிய விரிபூம் பெருந்துறை
    (ஐங்குறுநூறு - 33 : 2)

    (மருது = மருதமரம்; விரி = பரந்த; பூம் = அழகான)

  • உணவு
  • நெல்

    செந்நெல் அம்செறுவிற் கதிர்கொண்டு
    (ஐங்குறுநூறு - 27 : 1)

    (அஞ்செறு = அழகிய வயல்)

    இவை போன்றே பிற கருப்பொருள்களும் மருதத் திணைப் பாடல்களில் வெளிப்படுகின்றன.

    3.3.3 உரிப்பொருள் வெளிப்பாடு

    மருதத்திணையின் உரிப்பொருள் ஊடலும், ஊடல் தொடர்பான நிகழ்வுகளும் ஆகும். பரத்தையை நாடித் தலைவன் செல்வதே தலைவி தலைவனிடம் கொள்ளும் ஊடலுக்குக் காரணமாகும்.

  • தலைவி வாயில் மறுத்தல்
  • பரத்தை உறவால் தலைவியைப் பிரிந்து சென்றான் தலைவன். மீண்டும் வந்தவன் தோழியிடம் தலைவியை அமைதிப்படுத்தச் சொல்கிறான். தன்னிடம் வாயிலாக வந்த (தூது வந்த) தோழிக்குத் தலைவி மறுப்பு உரையாகச் சொல்கிறாள்.

    நோம்என் நெஞ்சே ! நோம்என் நெஞ்சே!
    புன்புலத்து அமன்ற சிறியிலை நெருஞ்சிக்
    கட்குஇன் புதுமலர் முட்பயந் தாங்கு
    இனிய செய்தநம் காதலர்
    இன்னா செய்தல் நோம்என் நெஞ்சே !

    (குறுந்தொகை - 202 : அள்ளூர்நன்முல்லை)

    (நோம் = நோகும் (வருந்தும்); புன்புலம் = சிறியநிலம்; அமன்ற = நெருங்கி முளைத்த; கட்குஇன் = கண்ணுக்கு இனிய; பயந்தாங்கு = தந்தது போல)

    “தோழி ! என் நெஞ்சம் மிகவும் வருந்துகிறது. சிறிய நிலத்தில் நெருங்கி முளைத்த சிறிய இலைகளை உடைய நெருஞ்சியின் புதுமலர், முதலில் பார்வைக்கு இனியதாகத் தோன்றும்; பின்னர் முட்களைத் தந்து துன்பம் விளைவிக்கும். அதுபோல் தலைவர் முன்பு நமக்கு இனியன செய்தார். இப்போது பரத்தையிடம் சென்று நமக்குத் துன்பம் விளைவிக்கிறார். அதனை நினைத்து என் நெஞ்சம் மிகவும் வருந்துகிறது.” - என்பது இப்பாடலின் பொருள் ஆகும்.

    இனிய, இன்னா என்ற முரண்பட்ட சொற்களால் தலைவன் உள்ளம் காலப் போக்கில் மாறுபட்டு விட்டதைச் சொல்கிறாள் தலைவி. இச்சொற்கள் அவளது வருத்தத்தை மட்டும் காட்டாமல் அவள் கொண்ட ஊடலைக் காட்டவும் பயன்படுகின்றன. தலைவனுக்கு வாயிலாக (தூதாக) வந்த தோழியிடம் தலைவி வாயில் மறுத்துக் கூறிய உரிப்பொருள் இப்பாடலில் அமைந்துள்ளது.
     

  • ஊடலுக்கு மற்றுமொரு காரணம்
  • பரத்தையிடம் சென்ற தலைவன் தன் வீட்டிற்குத் திரும்ப நினைக்கிறான். தலைவியின் ஊடலுக்கு அஞ்சிப் பாணனைத் தூது விடுகின்றான். தூதினால் பயனில்லை. தோழி தலைவியிடம் ‘இனி அவன் வந்தால் ஊடல் கொள்ளாதே’ எனச் சொல்கிறாள். தான் ஊடல் கொண்டதற்கான காரணத்தைத் தலைவி கூறத் தொடங்குகிறாள்.

    தண்துறை ஊரன் தண்டாப் பரத்தைமை
    புலவாய் என்றி தோழி ! புலக்குவென்...
    என்
    நளிமனை நல்விருந்து அயரும்
    கைதூ இன்மையான் எய்தா மாறே

    (நற்றிணை - 280 : 4-5; 8-10, பரணர்)

    (தண்டா = நீங்காத; புலவாய் = ஊடாதே; என்றி = என்றாய்; புலக்குவென் = ஊடுவேன்; நளிமனை = பெரிய வீடு; விருந்தயரும் = விருந்தினரைப் போற்றும்; கைதூ இன்மை = கையொழியாது வேலை செய்தல்)

    “என் பெரிய வீட்டுக்கு வரும் நல்ல விருந்தினரை வரவேற்றுப் போற்றும் விருந்தோம்பல் என்னும் மனையறம் குன்றுவதால் அவனிடம் நான் ஊடல் கொள்கிறேன். இடைவிடாது கைகள் வேலை செய்யும் விருந்தோம்பலை நான் செய்ய முடியாததால் ஊடல் கொள்கிறேன்” என்பது தலைவி கூறும் காரணம். தலைவனின் பரத்தமை ஒழுக்கமும், அதன் காரணமாகத் தலைவி விருந்தோம்ப முடியாத நிலை ஏற்படுவதும் தலைவியின் ஊடலுக்குக் காரணங்கள் ஆகின்றன.

    இவ்வாறு மருதத் திணையின் பாடல்களில் உரிப்பொருளாக ஊடல் பல்வேறு வகைகளில் சொல்லப்படுகிறது.
     

    தன்மதிப்பீடு : வினாக்கள் - I

    1)

    மருதக் கலிப் பாடல்களைப் பாடியவர் யார்?

    (விடை)

    2)

    மருதத் திணைக்கு உரிய சிறுபொழுது யாது?

    (விடை)

    3)

    மருதத் திணைக்கு உரிய தெய்வம் எது?

    (விடை)

    4)

    மருதத் திணையின் உரிப்பொருள் யாது?

    (விடை)

    5)

    கன்னிவிடியல் என்பதன் பொருள் யாது?

    (விடை)

    6)

    மருது உயர்ந்து ஓங்கிய விரிபூம் பெருந்துறை - என்ற பாடலடியில் வெளிப்படும் மருதத்திணைக்கு உரிய கருப்பொருள் யாது?

    (விடை)

    7)

    நோம் என் நெஞ்சே - என்ற பாடலைப் பாடியவர் யார்?

    (விடை)

    8)

    தலைவியின் ஊடலுக்குப் பயந்து தலைவன் முதலில் யாரைத் தூது விடுகின்றான்?

    (விடை)

    9)

    நளிமனை என்பதன் பொருள் யாது?

    (விடை)