ஆற்றில் பெருகி வரும் புது வெள்ளம் கண்டு மகிழ்ந்து
நீராடி
மகிழும்
வழக்கம் மருத நிலத்து மக்களிடம் உண்டு.
தோழியும் தலைவியும் இணைந்து புதுப்புனலில்
நீராடியதைக்
கலித்தொகைத் தலைவி இவ்வாறு கூறுகிறாள் :
புனைஇழை நோக்கியும், புனல்ஆடப் புறம்சூழ்ந்தும்
(கலித்தொகை
- 76 : 1)
(இழை = அணி; புறம்
= வெளியில்)
“நன்கு செய்யப்பட்ட என் அணிகளைத் திருத்தினான்
தலைவன். நாம் நீரில் ஆடும்போது நமக்கு ஒரு துன்பம்
வாராமல் வெளியில் காவல் காத்தான் அவன்”
- என்பது
இப்பாடல் வரியின் பொருள்.
முன் ஒருநாள் தலைவியுடன் புதுப்புனல் ஆடிய தலைவன்,
“இனி நான் பரத்தைமை ஒழுக்கத்தை மேற்கொள்ள மாட்டேன்”
என்று உறுதி கூறினான். அவன் இன்று பரத்தையரோடு
புனல் ஆடுகிறான் என்பதைத் தலைவி கேள்விப்படுகிறாள்.
அவனுக்கு நெருக்கமானோர்
கேட்கும்படி அவள் தோழியிடம்
இவ்வாறு கூறுகிறாள் :
“தோழியே ! கேள். வளைந்து முதிர்ந்த மருத மரங்கள்
நிறைந்து இருக்கின்ற இடம் பெருந்துறை. அத்துறையில்
நீராடும்போது, உடன் நீராடுவோர் அறியும்படி, ‘இனிப்
பரத்தைமையை விரும்பேன்’ என்று சூள் (உறுதி, சபதம்)
உரைத்தான் தலைவன். அதை
மறவாமல் கடைப்பிடித்தல்
தனக்குக் கடமை அன்று என அவன் கூறுவானோ?”
(ஐங்குறுநூறு- 31)
தலைவன் தலைவியோடும் புனல் ஆடுகிறான்; பரத்தையிடம்
செல்லும்போது பரத்தையோடும் புனல் ஆடுகிறான் என்ற
உண்மையை இங்குக் காண்கிறோம்.
மகிழ்நன்
மருதுஉயர்ந்து ஓங்கிய
விரிபூம் பெருந்துறைப்
பெண்டிரொடு
ஆடும் என்ப
(ஐங்குறுநூறு
- 33 : 1-3)
இப்பாடலில் தலைவன் பரத்தையரோடு புதுப்புனல்
ஆடுவது குறிக்கப்படுகிறது.
மகிழ்நன், மருத மரங்கள் நீண்டு உயர்ந்து பூக்கள்
விரிந்து கிடக்கும் நீர்த்துறையில் “பரத்தையரோடு நீராடுகின்றான்
எனச் சொல்வர்”
என்பது இதன் பொருள்.
|