மருதத்திணைப் பாடல்களில் அமைந்துள்ள உள்ளுறை
படித்துச் சுவைத்தற்கு
உரியது.
தாய்சாப் பிறக்கும்
புள்ளிக் கள்வனொடு
பிள்ளை தின்னும் முதலைத்து அவனூர்
எய்தினன் ஆகின்று கொல்லோ? மகிழ்நன் பொலந்தொடி தெளிர்ப்ப முயங்கியவர்
நலங்கொண்டு துறப்பது எவன்கொல் அன்னாய்
!
(ஐங்குறுநூறு
- 24)
(சாப்பிறக்கும் = சாகப் பிறக்கும்;
புள்ளிக்
கள்வன் =
புள்ளிகளையுடைய நண்டு; பிள்ளை = குஞ்சு; முதலைத்து = முதலையை உடையது; ஆகின்று
கொல்= ஆகின்றமைதானோ; பொலந்தொடி= பொன்வளையல்;
தெளிர்ப்ப
= ஒலிக்க; முயங்கியவர் = புணர்ந்தவர்;
துறப்பது
= நீங்குதல்)
பரத்தை ஒழுக்கத்திலும் கூட, தலைவன் ஒரு பரத்தையை
விட்டு வேறொரு
பரத்தையிடம் கூடி இன்புற்றான். அதனை
அறிந்தாள் தோழி. வாயிலாக வந்தவர் கேட்கும்படி
தலைவியிடம் கூறுவதாக வரும் பாடல் இது.
“தலைவியே ! மகிழ்நனுடைய ஊர் தாய் சாவப் பிறக்கும்
புள்ளி
பொருந்திய நண்டுகளை உடையது; தன் குட்டியையே
உண்ணும் முதலையையும் உடையது. சேரியில்
உள்ளவர்
கூறுவதனால்தான் இங்கு வந்தானோ? அங்ஙனம் வந்தவன்
பொன் வளையல்களை அணிந்த மகளிரின் அழகை
அனுபவித்தும், அவர் நலம் கெடும்படி துறப்பது ஏன்?
சொல்” - என்கிறாள்.
இப்பாடலில் அமைந்துள்ள உள்ளுறையை இனி அறியலாம்.
தாய் சாகப் பிறக்கும் நண்டை உடைய ஊரினன் என்பது,
கலந்த மகளிரின் நலத்தைக் கெடுக்கும் அன்பு இல்லாதவன்
என்ற உள்ளுறையைத் தருகிறது. பிள்ளை தின்னும் முதலையை
உடைய ஊரினன் என்பது இனித் தழுவ இருக்கும் மகளிர்
நலத்தை அனுபவித்துப் பிரியும் அருள் இல்லாதவன் என்ற
உள்ளுறையைத் தருகின்றது.
ஆலங்குடி வங்கனாரின் அகநானூற்றுப் பாடலொன்று (106)
சுட்டும்
உள்ளுறையைக் காண்போம்.
முதுமையால் பறக்க முடியாத சிரல் பறவை, மீனுக்கு
அருகில் இலையில்
அமர்ந்துள்ளது. மீனை அதனால் கவர
முடியவில்லை. பிற சிரல் பறவைகள் மீனைக் கவர்வதைப்
பொறுக்க முடியவில்லை - இச்செய்தி பாடலில் காணப்படுகிறது.
முதுமையால் எழுச்சி குன்றித் தன் இல்லத்தில்
இருக்கின்றாள்
தலைவி. தலைவன் அருகில் இருந்தும் அவனை
வளைத்துக் கொள்ள முடியவில்லை. இளம் பருவமுடைய
பெண்டிர் அவனைத் தழுவுவதையும் பொறுத்துக் கொள்ள
முடியவில்லை என்று பரத்தைகுறிப்பாக எள்ளுவதை
உள்ளுறையாக இப்பாடல்
செய்தி
உணர்த்துகிறது.
இவ்வாறு இன்னும் பல பாடல்களில் உள்ளுறை
அமைகின்றது. |