பாலைத் திணைக்கு உரிய உரிப்பொருள் பிரிதலும் பிரிதல்
தொடர்பான நிகழ்வுகளும் ஆகும். பொருள் ஈட்டத் தலைவன்
பிரியக் கருதுதல், அதனைத் தோழி வாயிலாகத் தெரிவித்தல்,
தலைவி வருந்திப் பிரிவுக்கு உடன்படாமை, தோழி
தலைவனைப் பிரியாதிருக்கச் செய்தல், பின் தலைவன் பிரிதல்,
பாலை நிலக் கொடுமைகளை நினைத்துத் தலைவி அஞ்சுதல்,
தோழி தேற்றுதல், பிரிந்திருக்கும் இடத்திலிருந்து கொண்டு
தலைவன் வருந்துதல் போன்ற நிகழ்வுகளையும்
கூற்றுகளையும் பாலைத் திணைப் பாடல்களில் காணலாம்.
தலைவி தலைவனோடு பிறர் அறியாமல் உடன்போக்கில்
சென்றுவிடத் தலைவியின் பிரிவால் தாயர் வருந்துவதும்
பாலைத் திணையில் கூறப்படும். |