பாலைத் திணை பிரிவைக் குறிக்கும் திணை. பிரிவு தலைவி -
தலைவன் இருவர்க்குமே வருத்தம் தருவது. அவ்வருத்தத்திற்கு
ஏற்ற பின்னணி யாகவே வறண்ட காடு, மழையின்மை, வெயில்
கொடுமை, விலங்குகளால் வரும் கொடுமை, ஆறலை
கள்வர்களால் வரும் துன்பம் ஆகியன காட்டப்படுகின்றன.
வழிப்பறி, கொள்ளை எல்லா இடத்தும், எல்லாக் காலத்தும்
உள்ளனவே. ஆயினும் பிரிவுத் துயருக்குப் பின்னணியாகக்
காட்டவே இவை பாலைத் திணைப்
பாடல்களில்
பேசப்படுகின்றன.
கொடிய காட்டு வழியில் அலைந்து அங்கு வரும் பிறரது
உடைமைகளைக் கொள்ளை அடித்து வாழ்வர் ஆறலை
கள்வர்கள்.
ஆறலை கள்வர் அல்லது கள்வரைப்
பற்றிப் பல
பாலைப் பாடல்கள் கூறுகின்றன.
ஆறலை கள்வர் வழியில் செல்பவரை வருத்துபவர்கள்;
அவர்தம் பொருளைக் கவர்பவர்கள்; அப்பொருள் கொண்டு
உண்பவர்கள்; பயிர்த் தொழில் முதலியவற்றைச் செய்து உண்ண
விரும்ப மாட்டார்கள்; மழையை விரும்ப
மாட்டார்கள்;
கொள்ளை அடித்திடக் காட்டு வழிகளை விரும்புபவர்கள்;
வில்லாகிய ஏரால் பிறர் உடலில் உழுபவர்கள்.
கான்உயர் மருங்கில் கவலை அல்லது
வானம் வேண்டா வில்ஏர் உழவர்
பெருநாள் வேட்டம் கிளைஎழ வாய்த்த
பொருகளத்து ஒழிந்த குருதி
(அகநானூறு- 193: 1-4, மதுரை மருதனிள நாகனார்)
(கான் = காடு; மருங்கில்
= பக்கத்தில்; கவலை = வழி; வானம் வேண்டா
= மழையை விரும்பாத; வேட்டம் =
வேட்டை; பொருகளம் = போரிடும் இடம்;
கிளை =
சுற்றம்)
“உயரமான காட்டில் உள்ள கிளை பிரிந்த வழிகளைத்
தவிர
மழையை விரும்பாத, வில்லாகிய ஏரால் உழும் ஆறலை
கள்வர் சுற்றத்துடன் புறப்பட்டுச் சென்றபோது கிடைத்தது
நல்ல வேட்டை. அவ்வேட்டையில் வழிச் செல்பவரோடு
போரிடுகிறார்கள். அப்போது வழிச்செல்பவரின் உடலில்
இருந்து இரத்தம் சிந்துகின்றது” என்று ஆறலை கள்வரின்
கொள்ளை அடிக்கும் வாழ்க்கை பற்றி இப்பாடல் அடிகள் கூறுகின்றன.
|