5.5 இலக்கிய நயங்கள்


பாலைத் திணைப் பாடல்களில் அமைந்துள்ள கற்பனை, சொல்லாட்சி, உவமை, உள்ளுறை ஆகிய இலக்கிய நயங்களை இப்பகுதியில் அறியலாம்.
 

5.5.1 கற்பனை

இல்வாழ்க்கை எத்தகையது என்பதைக் கற்பனைச் சித்திரம் வரைந்து தெளிவுபடுத்துகிறார் பாலை பாடிய பெருங்கடுங்கோ.

செல்வத்தைத் தேடிப் பிரிவதை விட வறுமையிலும், இளமையும் காதலும் ஒரு சேர வாழ்வதே வாழ்க்கை என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள்.

வாழும் நாளெல்லாம் இல்லத்தே இருந்து இருவரும் தத்தம் ஒரு கை கொண்டு தழுவி, ஒரே ஆடையைக் கிழித்து இருவரும் உடுத்துக் கொள்ளும் வறுமை மிக்க வாழ்க்கையாய் இருந்தாலும், பிரியாது உள்ளம் ஒன்றி வாழ்வதே வாழ்க்கை. பொருளைத் தேடிக் கொண்டு வரலாம்; சென்று போன இளமையைத் தேடிக் கொண்டுவர முடியுமா?

உளநாள்
ஒரோஒகை தம்முள் தழீஇ, ஒரோஒகை
ஒன்றன்கூறு ஆடை உடுப்பவரே ஆயினும்
ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை அரிதுஅரோ
சென்ற இளமை தரற்கு
(கலித்தொகை -18 : 8-12)

(ஒரோஒகை = ஒரு கை; தழீஇ = தழுவி; ஒன்றினார் = இணைந்தவர்; தரற்கு = கொண்டு வருவதற்கு)

உடன்போக்காய்த் தலைவனுடன் சென்ற தன் மகளைத் தேடி வருகிறாள் செவிலி. ‘அவர்கள் இருவரையும் கண்டீர்களா? எனக் கேட்கும் அவளுக்கு அந்தணர்கள் ‘கண்டோம்’ எனப் பதில் தருகின்றனர்; தலைவி சிறந்த ஓர் ஆண்மகனைக் கணவனாக வழிபட்டு அவனுடன் சென்றது நியாயமே எனக் கூறுகின்றனர். பெற்றோர்க்கும் மகளுக்கும் உண்டான சொந்தம் எத்தகையது என்பதை அருமையான கற்பனை கொண்டு தெளிவு படுத்துகின்றனர்.

பலஉறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை
மலையுளே பிறப்பினும் மலைக்குஅவைதாம் என்செய்யும்?
நினையுங்கால் நும்மகள் நுமக்கும்ஆங்கு அனையளே;
சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை
நீருளே பிறப்பினும் நீர்க்குஅவைதாம் என்செய்யும்?
தேருங்கால் நும்மகள் நுமக்கும்ஆங்கு அனையளே;
ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை
யாழுளே பிறப்பினும் யாழ்க்குஅவைதாம் என்செய்யும்?
சூழுங்கால் நும்மகள் நுமக்கும்ஆங்கு அனையளே!
(கலித்தொகை -9 : 12-20)

(பலவுறு = பல நறுமணப் பொருள்களும் கலந்த; படுப்பவர்க்கு = அணிபவர்க்கு; சாந்தம் = சந்தனம்; முத்தம் = முத்து; நீர் = கடல்; ஏழ்புணர் இன்னிசை = ஏழு நரம்பால் எழுப்பப்படும் இன்னிசை; முரல்பவர் = மீட்டுபவர்)

குறிப்பிட்ட காலம் வரை மலைக்கும், கடலுக்கும், யாழுக்கும் (வீணைக்கும்) சொந்தமானவை சந்தனம், முத்து, இசை ஆகியன. பின்னர் அவை பூசுபவர்க்கும், அணிபவர்க்கும், மீட்டுபவர்க்கும் அல்லவா சொந்தமாகின்றன? அதுபோல் ஆராய்ந்து பார்த்தால் உன் மகள் குறிப்பிட்ட பருவம் வரைதான் உனக்கு உரியவள்; அதன்பின் அவள் காதலுக்குரிய காதலனுக்குத்தான் உரியவள் என்பதைப் பக்குவமாகச் சொல்ல இக்கற்பனை பயன்படுகிறது.

5.5.2 சொல்லாட்சி

வேற்று நாட்டுக்குச் சென்று பொருள் தேட நினைக்கிறது தலைவனின் நெஞ்சம். அந்நெஞ்சத்திற்குப் பிரிவுத் துயரைக் கூறுகிறான் அவன். அப்போது இலம், மணத்தல், தணத்தல் என்ற சொற்களைக் கொண்டு ஒரு சொல்லோவியம் தீட்டுகிறான்.

பணைத்தோள்

மணத்தலும் தணத்தலும் இலமே
பிரியின் வாழ்தல் அதனினும் இலமே
(
குறுந்தொகை-168 : 5-7,சிறைக்குடி ஆந்தையார்)

(பணை = பருத்த; மணத்தல் = பொருந்துதல்; தணத்தல் = பிரிதல்)

“என்றும் ஒன்றுபட்டு இருப்பதால் பருத்த தோள்களை உடைய தலைவியைப் பொருந்துதலும், பிரிதலும் இல்லை. இன்று அவளை விட்டுப் பிரிந்து சென்றால் பிரிவுத்துயர் என்னைக் கொன்று விடும். அதனால் உயிர் வாழ்தல் என்பது உறுதியாக இல்லை” என்பது தலைவனின் உள்ளக் கருத்தாகிறது. ஒன்றியிருக்கும் நிலையை ‘மணத்தலும் தணத்தலும் இல்லை' எனக் குறிப்பிடும் அழகிய சொல்லாட்சி போற்றத் தக்கது.

தலைவன் பிரிந்து செல்லும் வழியில் ஆறு அலை கள்வர் விடுத்த கூர்மையான அம்புகள் வழிச்செல்வோர் உடலில் தைக்கும். அதனால் துன்புறும் அவர்கள் நா உலர்ந்து வாடுவர். தண்ணீர் கிடைப்பதில்லை. அவர் விடும் கண்ணீர்தான் அவர்தம் நீர்த் தாகத்தைத் தணிக்கும். இதைக் கூறும் கலித்தொகைப் பாடலில் தண்ணீர், கண்ணீர் என்ற சொற்கள் நயம் சேர்க்கின்றன.

தண்ணீர் பெறாஅத் தடுமாற்று அருந்துயரம்
கண்ணீர் நனைக்கும் கடுமைய காடு
(கலித்தொகை 6 : 5-6)
 

5.5.3 உவமை

பிற அகத்திணைப் பாடல்களில் உள்ளது போல் பாலைத் திணைப் பாடல்களிலும் உவமைகள் அதிகம் பயன்படுத்தப் படுகின்றன. வெள்ளை ஆடை விரித்தது போன்ற வெயில் என்று வெயிலின் வெள்ளை ஒளிக்கு வெண்ணிற ஆடையை உவமை ஆக்குகிறது நற்றிணைப் பாடல்.

துகில்விரித் தன்ன வெயில்
(நற்றிணை-43 : 1, எயினந்தையார்)

இதே பாடலில் ‘நீ பிரிந்தால் பசலை நோய் தலைவியின் அழகைத் தின்னும்’ என்று தலைவனிடம் சொல்ல வரும் தோழி கையாளும் உவமை நயம் தருகின்றது.

பைங்கண் யானை வேந்துபுறத்து இறுத்தலின்
களையுநர்க் காணாது கலங்கிய உடைமதில்
ஓர்எயில் மன்னன் போல
அழிவுவந் தன்று (9-12)

யானைப் படையை உடைய பகைமன்னன் மதில் புறத்து வந்து தங்குகிறான். உடைந்த ஒரே மதிலை உடைய அரசன் தனக்கு வந்த துன்பத்தைப் போக்குபவரைக் காணாமல் கலக்கம் கொள்கிறான். அதுபோலத் தலைவியின் அழகுக்கு அழிவு வந்துவிட்டது. அதைப் போக்க யாரும் இல்லை என்பது இப்பாடல் அடிகள் தரும் பொருள் ஆகும்.

பாலை நிலத்தில் மரம் வெம்பியதைச் சொல்லும் போது ஆளப்படும் உவமை அழகுணர்ச்சியுடன் அறம் உணர்த்துகிறது.

வறியவன் இளமைபோல் வாடிய சினையவாய்ச்
சிறியவன் செல்வம்போல் சேர்ந்தார்க்கு நிழலின்றி
(கலித்தொகை-10 : 1-2)

வறுமை உடையவனுடைய இளமைபோலத் தளிர்கள் வாடிய கொம்பை உடையன அந்த மரங்கள். பிறர்க்குக் கொடுக்க மனம் இல்லாதவனின் செல்வம் தன்னைச் சேர்ந்தவர்க்குப் பயன் தராதது போல ஞாயிற்றின் கதிர்கள் சுட நிழல் தராமல் வேரோடு கெடுகின்றன அம் மரங்கள்.

இவ்வாறு பல்வேறு உவமைகள் பாலைத் திணைப் பாடல்களுக்குச் சுவை ஊட்டுகின்றன.
 

5.5.4 உள்ளுறை

ஆலம்பேரி சாத்தனாரின் அகநானூற்றுப் பாடலில் தலைவியின் ஆற்றாமையை எடுத்துச் சொல்கிறாள் தோழி தலைவனிடம்.

“கதிரவன் காய்வதால் வாடிய தேக்கு இலையைக் கோடைக் காற்று உதிர்க்கும்” என்று அவள் கூறுகிறாள். “முன்பே உன் சொல்லால் வாட்டம் அடைந்திருக்கும் தலைவி, நீ பிரிந்து போய்விட்டால் இறந்து விடுவாள்” என்பதை இது உள்ளுறையாக உணர்த்துகிறது. (அகநானூறு -143 : 2-5)

இவ்வாறு பாலைத் திணைப் பாடல்களில் அவ்வப்போது உள்ளுறை அமைந்து நயம் தருகின்றது.