கைக்கிளையை விளக்கும் காமம் சாலா இளமையோள்
வயின் என்று தொடங்கும் தொல்காப்பிய நூற்பாவிற்குக்
கபிலரது குறிஞ்சிக் கலிப்பாடல் ஒன்றை (பாடல் எண்: 56)
உரையாசிரியர் இளம்பூரணர் சான்று காட்டுகின்றார்.
ஊர்க்கால் நிவந்த பொதும்பருள்
எனத் தொடங்கும்
பாடல்
அது.
காமத்திற்கு அமையாத அழகிய இளம்பெண் ஒருத்தியைக்
காண்கிறான் தலைவன். ‘நிலாப் போன்ற முகத்துடன் இங்கே
வரும் இவள் யார்? கொல்லிமலையில் வல்லவனால்
செய்யப்பட்ட பாவையோ? எல்லா அழகிய பெண்களின்
உறுப்புகளையும் ஒருங்கிணைத்துப் பிரமன் செய்த
பேரழகியோ? ஆயரைக் கொல்ல அழகிய வடிவாக வந்த
கூற்றுவனோ?’ எனப் பலவாறு ஐயம் கொள்கிறான்.
கைக்கிளைக் காதலின் தொடக்க நிலையாகிய ‘காட்சி’, ‘ஐயம்’
ஆகியவை இப்பகுதியில் அமைந்திருப்பதைக் காண்கிறோம்.
பின்னர்த் தலைவன், தலைவியின் அணி, ஆடை
ஆகியவைகளைக் கொண்டு அவள் ஒரு மானிடப் பெண்ணே
என ஐயம் தீர்கிறான். இது கைக்கிளையின்
மூன்றாம்
நிலையாகிய ‘தெளிவு’ என்பதைக் குறிக்கும். இத்‘தெளிவு’
தோன்றியபின் தலைவனது கைக்கிளைக் காதல்
மேலும்
பெருகுகிறது. மருந்தில்லாத நோய்க்கு ஆளாகிறான்.
அவளோடு ‘பேசிப் பார்ப்போம்’ எனத் தனக்குள்ளேயே பேசுகிறான். இப்பேச்சில் அவள் அழகைப் புகழ்தலும்,
அவ்வழகு அவனைத் துன்புறுத்துவதால் இகழ்தலும்
அமைகின்றன.
பெருத்தநின் இளமுலை
மயிர்வார்ந்த வரிமுன்கை மடநல்லாய் நின்கண்டார்
உயிர்வாங்கும் என்பதை உணர்தியோ உணராயோ?
(அடி: 23-25)
(வார்ந்த = நேராக அமைந்த ; வரிமுன்கை = மயிர்
வரிசையை உடைய முன்கை; மடநல்லாய் = இளம்பெண்ணே!;
உணர்தியோ = உணர்கிறாயா?)
“இளமையான அழகியே! உன் மார்பு கண்டவர்களின்
உயிரை வாங்கி விடுகிறது. இதனை நீ உணர்வாயா? உணர
மாட்டாயா?” என்று அவன் கூறும்போது அவனுள் காதல்
பெருக்கெடுக்கிறது.
யாதுஒன்றும் வாய்வாளாது இறந்துஈவாய் கேள்!
(அடி :29)
(வாளாது = பேசாமல்; இறந்து ஈவாய் = கடந்து செல்கிறாய்)
“கேட்டவர்க்கு எதையும் வாய்திறந்து சொல்லாமல்
போகின்றவளே, கேள்” என்று அவன் தொடர்ந்து கூறுகிறான்.
இவை எல்லாம் சொல்எதிர் பெறாஅன் சொல்லி இன்புறல்
என்ற தொல்காப்பிய நூற்பாத் தொடரை நினைவூட்டுகின்றன.
நீயும் தவறிலை, நின்னைப் புறங்கடைப்
போதர விட்ட நுமரும் தவறு இலர்
நிறைஅழி கொல்யானை நீர்க்குவிட் டாங்குப்
‘பறைஅறைந் தல்லது செல்லற்க’ என்னா
இறையே தவறுடை யான்
(அடிகள் : 30-34)
“அழகால் பிறரைக் கவர்ந்து இழுக்கும் பெண்ணே! நீ குற்றம் உடையவள் இல்லை. உன்னை இங்குச் செல்ல விட்ட
உறவினரும் குற்றம் உடையவர் அல்லர். கொல்லும் இயல்புடைய
யானையை
நீர்நிலைக்கு அனுப்பும் போது பறைசாற்றி
மக்களுக்குத்
தெரிவிப்பது போல, நீ செல்லும் போதும் பறை
முழக்காமல்
செல்லக் கூடாது என்று உன்னைத் தடுத்து
ஆணையிடாத
அரசனே குற்றம் உடையவன்” என்கிறான் அந்த
இளைஞன்.
இப்பாடலில் கைக்கிளை இலக்கணமாகிய பாதுகாவலற்ற
(மருந்தற்ற) துன்பம் எய்தல், நன்மை தீமை இரண்டும் கூறித்
தன்னை அவளோடு இணைத்துப் பார்த்துப் புலம்புதல்,
அவளுடைய பதில் பெறாமல் அவனே புலம்பி இன்புறல்
ஆகியவை அமைந்திருப்பதைக் காணலாம்.
|