கலித்தொகையின் 56, 57, 58 மற்றும் 109ஆம் பாடல்கள் கைக்கிளைப் பாடல்கள் ஆகும்.56 ஆவது பாடலில் கைக்கிளை
அமைந்திருப்பதை இளம்பூரணர் உரையின் துணைகொண்டு
முன்பே பார்த்தோம்.
கபிலர் பாடிய குறிஞ்சிப் பாடலாகிய 57ஆவது பாடலில்,
கொடி போலவும், மின்னல் போலவும், அணங்கு போலவும்
தோன்றும் பெண் ஒருத்தி பந்தாடிக் கொண்டிருக்கிறாள்.
அவள் மீது கைக்கிளைக் காதல் கொண்ட தலைவன்
அவளைப் பார்த்துப் பல சொற்களையும் சொல்கின்றான்.
அதற்கு ஒரு விடையும் சொல்லாமல் தலைவி நிலம் நோக்கித்
தலை கவிழ்ந்து தன் வீட்டுக்குச் செல்கிறாள்.
”குளிர்ந்த மாலையை அணிந்தவன் பாண்டிய மன்னன்.
அவனது பொதிகை மலையில் அழகை உடைய
கொத்துக்களாய் அமைந்த வேங்கைப் பூ உண்டு. அப்பூவைப்
போன்ற தேமலை உடையவளே! முத்துமாலை அணிந்த உன்
இளம் முலைகள், இந்த இளம் பருவத்திலும் பாண்டியனின்
வலிமையும், மதமும் உடைய யானையின் கொம்புகளை விடச்
சினம் கொண்டவையாய் உள்ளன. இந்தக் கொடுமை
உன்னுடைய இந்த இளமைப் பருவத்துக்குத் தக்கதோ?”
(அடிகள் : 16-19) என்று பல சொற்களைக் காம மிகுதியால்
கூறுகிறான் தலைவன். அவள் பதில் கூறாமல், தலை கவிழ்ந்து
தன் வீட்டுக்குச் சென்று விடுகிறாள். தன் அறிவை அவளிடம்
இழந்துவிட்டு அரற்றுகிறான் தலைவன். இங்குத் தலைவியின்
இளமை பற்றிக் கூறுவதனால் ‘காமம் சாலா இளமையோள்’
என்னும் தொல்காப்பிய இலக்கணம் பாட்டில் அமைந்திருக்கக்
காணலாம். தன் சொற்களுக்கெல்லாம் அவள் மறுமொழி
தராமல் சென்று விட்டாள் என அவன் கூறுவது ‘சொல் எதிர்
பெறாஅன் சொல்லி இன்புறல்’ என்னும் கைக்கிளை
இலக்கணத்தை உணர்த்துகிறது. ‘தன் அறிவைக்கவர்ந்து
சென்று விட்டாள்’ என அவன் வருந்துவது, ‘ ஏமம் சாலா
இடும்பை’யை (மருந்து இல்லாத நோயை) அவன்
கொண்டிருப்பதை உணர்த்துகிறது. இவ்வாறு கைக்கிளைக்
காதலின் அனைத்து இலக்கணங்களுக்கும் விளக்கம் போல
இப்பாடல் அமைந்திருக்கின்றது.
கபிலரே பாடிய, கலித்தொகையின் 58-ஆவது பாடலில்
சிலம்பு ஒலிக்க, வளைக்கை வீசிக் கொண்டு நடந்து வரும்
தலைவி தன் உயிரைக் கவர்ந்து கொண்டு போவதாகவும்,
அச்செயலை அவளது இளமை காரணமாக அவள்
அறிந்திருக்கவில்லை என்றும் தலைவன் புலம்புகிறான்.
உளனாஎன் உயிரைஉண்டு உயவுநோய் கைம்மிக
இளமையான் உணராதாய்
(அடிகள் 7-8)
என அவளிடம் பேசுகிறான்.
(உளனா = சிறிதளவு உயிரோடு நான் இருக்கும்படி;
உயவுநோய் = காமநோய்; கைம்மிக = மிக அதிகமாக)
வேறு யாராலும் தீர்க்க முடியாத நோயை உண்டாக்குவது
அவள் அழகு. அதனை அவள் வீட்டார் அறிவர். அறிந்தும்
அதற்கு மேலும் அவளை அலங்காரம் செய்து, தம் செல்வச்
செருக்கினால் வெளியே புறப்பட விட்டுவிட்டார்கள்;
அவர்களே தவறுடையவர்கள் எனப் புலம்புகிறான் தலைவன்.
களைநர்இல் நோய்செய்யும் கவினறிந்து அணிந்துதம்
வளமையால் போத்தந்த நுமர்தவறு
(களைநர் = நீக்குவார்; கவின் = அழகு;
அணிந்து = அலங்காரம் செய்து; வளமை = செல்வச் செருக்கு;
போத்தந்த = வெளியே புறப்படவிட்ட; நுமர்= உன் வீட்டார்)
கைக்கிளைக் காதலின் உச்ச நிலையில்,
”என் நோய்
பொறுக்கும் எல்லையைத் தாண்டி விட்டால் மடல்ஏறி உனக்கு
ஒரு பழியை ஏற்படுத்தி விடுவேன் போல் இருக்கிறதே”
என்றும் தலைவன் புலம்புகிறான்.
இப்பாடலிலும் தலைவன் தலைவியின் மறுமொழி பெறாமல்
தானே பேசுகிறான்; அவள் காமத்திற்கு உரிய பருவம் வராத
இளமையுடையாள் என்பதைக் கூறுகிறான் ; தனக்கு
ஏற்பட்டுள்ள காமநோய் வேறு யாராலும் தீர்க்க முடியாதது
என்பதை உணர்த்துகிறான். மேலும் தன்னைத் துன்புறுத்தும்
தீங்கை அவள் மற்றும் அவளது உறவினர் பக்கமாகவும்,
தான் மடல் ஏறி உயிர் கொடுக்க இருக்கும் நன்மையைத்
தன் பக்கமாகவும் சேர்த்துச் சொல்கிறான். இவை
அனைத்தும் தொல்காப்பிய நூற்பாவில் சொல்லப்பட்ட
கைக்கிளை இலக்கணத்துக்குப் பொருந்துமாறு
அமைந்திருப்பதை நீங்கள் ஒப்பிட்டுக் கண்டு கொள்ளலாம்.
|