பெருந்திணையின் இரண்டாவது வகையாகக்
குறிப்பிடப்படுவது இளமை தீர் திறம் ஆகும்.இளமை நீங்கிய
நிலையில் கொள்ளும் காதல் இளமை தீர் திறம் ஆகும். இது
மூன்று வகையில் அமையலாம். தலைவி முதியவளாகத்
தலைவன் இளையவனாக இருக்கலாம் ; தலைவன்
முதியவனாகத் தலைவி இளையவளாக இருக்கலாம்;
இருவருமே இளமை தீர்ந்தவர்களாகவும் இருக்கலாம். ஒரு
குறளனும் (குள்ளன்) கூனியும் முதலில் ஊடிப் பேசிப் பின் கூடுகின்றனர். ஒருவரையொருவர் உருவத்தைக் கொண்டு
இகழ்ந்து பேசுகின்றனர். (கலித்தொகை, பாடல் -94)
நீருள் நிழல்போல் நுடங்கிய மென்சாயல்
ஈங்குஉருச் சுருங்கி
இயலுவாய் ! நின்னொடு உசாவுவேன்
(அடிகள் : 2-4)
(நுடங்கிய = அசைந்து தெரிந்த ; ஈங்கு = இங்கு;
உரு= உருவம்; உசாவுவேன் = பேசுவேன்)
”கரையில் நின்ற ஒரு பொருளின் நிழல் நீருக்குள் தெரிவது
போல் கூன் கொண்டு உருவம் சுருங்கி நடப்பவளே!
உன்னோடு நான் பேச வேண்டும்” என்று இப்பாடலில்
கூனியைப் பார்த்துக் குறளன் கூறுகிறான். அதற்கு அவள்,
காண்தகை இல்லாக் குறள்நாழிப் போழ்தினான்
ஆண்டலைக்கு ஈன்ற பறழ்மகனே ! நீ எம்மை
வேண்டுவல் என்று விலக்கினை ; நின்போல்வார்
தீண்டப் பெறுபவோ மற்று? (அடிகள் : 5-8)
(காண்தகை இல்லா = கண்ணால் பார்க்கத் தகுதி இல்லாத;
குறள் = குள்ளம்; நாழி = நேரம்;ஆண்டலை = ஒரு பறவை,
ஆந்தை; பறழ் = குஞ்சு)
”கண்ணால் பார்க்கச் சகிக்க
முடியாத குள்ளனாகப்
பிறப்பதற்குரிய நேரத்தில்,ஆந்தைப் பறவைக்கு அதன் பெட்டை
ஈன்ற குஞ்சான மகனே! நீ என்னை விரும்புவேன் என்று
மேலே போகாமல் தடுத்தாய். உன்னைப் போன்று குறளனாக
இருப்பவர் என்னைத் தீண்டப் பெறுவாரோ?”
என்று பதில் தருகிறாள். தொடர்ந்து இருவரும் மாறிமாறி
இவ்வாறு விளையாட்டாய்ப் பேசிக் கொண்டபின் காம
ஒழுக்கம் மேற்கொள்கின்றனர்.
'உருச் சுருங்கி இயலுவாய்’ என்றும் ‘கொக்குரித்தாற் போலத்
தோன்று பவளே’ என்றும் சொல்வதனால் தலைவி உருவம்
சுருங்கியமையும், உடலில் தோல் சுருங்கியமையும்
உணர்த்தப்படுகின்றன. இதனால் தலைவியின் இளமை தீர்ந்த
முதுமை சுட்டப்படுகின்றது.
‘ஆண்டலைக்கு ஈன்ற பறழ் மகனே’ என்பதால் தலைவனின்
இளமை தீர்ந்த திறம் சுட்டப்படுகின்றது. உருவப்
பொருத்தமின்மை, பருவப் பொருத்த மின்மை ஆகிய
இரண்டுமே இக்காதலைப் பெருந்திணைக் காதலாக
அடையாளம் காட்டுகின்றன.
வேறு குறைபாடுகள் இன்றித் தலைவனும் தலைவியும் வயது
முதிர்ந்தபின் காமம் கொள்வதற்கு ஒரு காரணம், இளமையில்
பொருள் தேடுதல் போன்றவற்றால் போதுமான காம நுகர்ச்சி
இல்லாமல் போவதே ஆகும். அதனையும் பெருந்திணை
என்றே கொள்வர். |