கலித்தொகையில் 62ஆவது பாடலும் பெருந்திணையைச்
சார்ந்ததாகும். ஒத்த உருவு முதலியவை இல்லாத தலைவன்
தலைவி இருவரும் மிக்க காமத்தால் மாறுபட உரையாடிக்
கூடக் கருதுகின்றனர்.
”தன்னுடன் புணரும் குறிப்பு இல்லாத என்னைப் புணர்ச்சி
விருப்புடன் கையால் வலியப் பிடிக்கும் இவன் நாணம்
இல்லாதவன்” என்று தலைவி கூறுகிறாள்.
”உன் மேனியைத் தழுவுவதற்கு இனிதாய் உள்ளது. அதனால்
தழுவினேன்” என்று பதில் தருகிறான் தலைவன்.
”தனக்கு இனிதாய் இருக்கிறது என்று எண்ணிப் பிறர்க்கு
இனியது அல்லாததை வலியச் செய்வது இன்பத்தை
அளிக்குமோ?” என்று தலைவி வினா எழுப்புகிறாள்.
“தண்ணீர் விரும்புவர்க்கு இனியது என்று அருந்துவது
அல்லாமல் அந்த நீர்க்கு இனியதாய் இருக்கும் என்று எண்ணி
அருந்துவாரோ!” என்று விடை தருகிறான் தலைவன்.
வேட்டார்க்கு இனிதாயின் அல்லது நீர்க்கினிதென்று
உண்பவோ நீருண் பவர்
(அடிகள் : 10-11)
(வேட்டார்= தாகம் கொண்டார்; உண்பவோ= உண்பார்களோ)
காமத் துன்பத்தில் ஆழ்த்தும் பெண்களை வன்மையாகச்
சேர்வதும் ஒருவகை மணம் என நூலோர் கூறுகின்றனர்
என்றும் கூறுகின்றான். இவைகளைக் கேட்ட தலைவி
புணர்ச்சிக்கு உடன்படுகிறாள். இது மிக்க காமத்து மிடல்
என்னும் பெருந்திணை ஒழுக்கம். |