2.1 மொழிபெயர்ப்பின் தோற்றம்
எல்லா மொழிகளும் முதன்முதலில் பேச்சு வழக்கில்
இருந்துதான் எழுத்துலகிற்குக் கொண்டு வரப்பட்டன. பல
ஆண்டுகளாகச் சப்பானியரிடம் பேச்சு வழக்கு மொழியே
காணப்பட்டது. கிறிஸ்துவின் பிறப்புக்குப் பின்னர் முதல்
நூற்றாண்டில்தான் அவர்கள் சீன எழுத்து வடிவத்தை ஏற்றுக்
கொண்டு எழுதத் தொடங்கினர் என்பதை அறிகிறோம்.
மேற்கத்திய நாகரிகத்தின் சின்னமாக விளங்கிய கிரேக்க
நாட்டில் மொழிபெயர்ப்புக்கென அமைப்புகள் தோன்றின.
முதன்முதலில் கிரேக்க மொழியிலிருந்து இலத்தீன் மொழிக்கு
ஹோமருடைய ஒடிசியை லிவியஸ் அன்டோனிக்ஸ்
என்பவர்
மொழிபெயர்த்தார். இலத்தீன் எழுத்தாளர்களான
காட்டலஸ்,
சிசரோ என்பவர்கள் கிரேக்க மொழியிலிருந்து இலத்தீனுக்குப்
பல நூல்களை மொழிபெயர்த்தனர். ரோமப் பேரரசு
தோன்றியவுடன் ஏராளமான நூல்கள் இலத்தீனிலிருந்து கிரேக்க
மொழிக்குப் பெயர்த்தெழுதப் பெற்றன. கிறித்து ஆண்டின்
ஆரம்பக் காலத்தில், அதாவது எட்டாவது, ஒன்பதாவது
நூற்றாண்டுகளிலேயே அரேபியக் கல்வி வளர்ச்சியினால்
கிரேக்க மொழியிலிருந்து ஏராளமான மொழிபெயர்ப்புகள்
தோன்றின. இது இன்னொரு அமைப்பாகும்.
பெரும்பான்மையான அரேபிய அறிவியலின் வளர்ச்சிக்கு
அடிப்படையாக இருந்தது கிரேக்க அறிவாகும். அவ்வறிவினை
அரேபிய மொழிக்குக் கொணர்ந்தது சிரியன் நாட்டு அறிஞர்கள்
என்பது அறியலாம். அவர்கள் பாக்தாத் நகரத்தை
அடைந்து, அங்கு, கிரேக்க அறிஞர்களான அரிஸ்டாட்டில்,
பிளேட்டோ, கேலன், ஹிப்போகிரட்டஸ் போன்ற நல்லறிஞர்
படைப்புகளை அரேபிய மொழியிலே பெயர்த்தனர்.
அவர்களுடைய செயல்பாடுகள் காரணமாகப் பாக்தாத் நகரம்
மொழிபெயர்ப்புப் பணியின் சிறந்த மையமாக விளங்கியது.
2.1.1 மொழிபெயர்ப்பு - பொருள் வரையறை
''ஒரு மொழியிலுள்ள ஒன்றை வேறொரு மொழிக்கு
மாற்றுவது'' என்று ரேண்டாம் ஹவுஸ் அகராதி
பொருளுரைக்கிறது. ''மீள உருவாதல், மீள மாற்றுதல்,
உருமாற்றல், மீள அமைத்தல்'' என்று பல பொருள்படப் பல
அகராதிகள் கூறுகின்றன.
கி.மு.5ஆம் நூற்றாண்டில் நெகிமா எனும் யூதத் தலைவர்
அரபு மொழி பேசுகின்ற யூதர்களுக்காக ஈப்ரு மொழியிலிருந்து
கிறித்தவத் திருநூலின் பழைய ஏற்பாட்டை அரபு மொழியில்
மொழிபெயர்த்தார். கி.மு.250 இல் முதல் மொழிபெயர்ப்பு
நிகழ்ந்தது என்று சில அறிஞர்கள் கூறினர். அதனை மறுத்து,
கி.பி. 210ஆம் ஆண்டில் ஹமுராபி அரசர் அரசவை அதிகார
அறிவிப்பு முறைகளை மக்களின் பேச்சு மொழியில் மொழி
பெயர்க்கச் செய்தார்; ஆகவே அதுவே உலகின் முதல்
மொழிபெயர்ப்பு என்று சில அறிஞர்கள் கூறியுள்ளனர்.
இவ்வாறு சண்முக வேலாயுதம் தமது ‘மொழிபெயர்ப்பியல்’
என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
மொழிபெயர்ப்பின் தத்துவத்தைப் பிளினி
வலியுறுத்தியுள்ளார். பொருளுக்குப் பொருள் என்பதான
மொழிபெயர்ப்பு முறையை விடச் ''சொல்லுக்குச் சொல்'' மொழிபெயர்ப்பு முறைக்கே அவர் ஆதரவு அளித்தார்.
விவிலிய நூல் அறிஞரான ஜெரோம் என்பவரைப் புதிய
ஏற்பாட்டினை எபிரெய மொழியிலிருந்து இலக்கிய
நடையில்லாமல் எல்லோருக்கும் தெரிந்த இலத்தீனில்
மொழிபெயர்க்குமாறு போப் டமாசஸ் பணித்தார்.
ஜெரோமினுடைய அணுகுமுறை ''சொல்லுக்குச் சொல்'' முறையை விடுத்துப் ''பொருளுக்குப் பொருள்'' என்னும்
முறையிலேயே அமைந்திருந்தது.
எட்டாம் நூற்றாண்டில் மூர்
இனத்தவர் ஸ்பெயின்
நாட்டின் மீது படையெடுத்ததன் விளைவாக அரேபிய மொழிப்
புத்தகங்களை இலத்தீன் மொழியில் பெயர்க்கும் வேகம்
பெருகியது.
பன்னிரண்டாம் நூற்றாண்டில் டோலடோ என்னுமிடத்தில்
ஜெரோட் ஆப் கிரோமனா என்பவர் மொழிபெயர்ப்புப்
பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். அவர்தான்
''மொழிபெயர்ப்பாளர்களின் மூதாதையராக''க் கருதப்பட்டார்.
அதோடு அவ்வாறே போற்றப்பட்டும் வருகிறார். அவர்
பல்வேறு அறிவியல் படைப்புக்களைக் கிரேக்க,
அரபிமொழிகளிலிருந்து இலத்தீன் மொழிக்கு மொழிமாற்றம்
செய்தார்.
ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக் காலம் மொழிபெயர்ப்பு
அறிஞர்களின் முக்கிய நகரமாக டோலடோ விளங்கிற்று.
அவ் அறிஞர் பெருமக்களுள் ஆங்கிலத் தத்துவஞானி அடிலாட்
ஒருவர். யூகிளிட்ஸ் என்பவர் அரபி மொழியில் எழுதிய ''எலிமண்ட்சு'' என்ற நூலை இவர் இலத்தீனில் மொழி
பெயர்த்தார். இதுவே இவரது படைப்புகளுள்
தலைசிறந்ததாகக்
கருதப்படுகிறது.
|