2.3 மொழிபெயர்ப்பு முறை
முதன் முதலில் மூலநூல் வாசகர்களை எப்படிப்
பாதித்திருக்குமோ அவ்விதமே மொழிபெயர்ப்பும் நம்மைப்
பாதிக்க வேண்டும் என்று மாத்யூ ஆர்னால்டு
மொழிபெயர்ப்புக்கு விளக்கமளிக்கிறார். பத்தொன்பதாம்
நூற்றாண்டின் முடிவில் பல மொழிகளிலும் உள்ள படைப்புகள்
ஆங்கில மொழிக்கு மாற்றம் செய்யப்பட்டன. அம்மொழிகள்
ஆங்கிலேயர்கள் அறியாதவையாயிருந்தன. ஹங்கேரி மொழி
ஆசிரியர் எம்.ஜோகாய் பல புதினங்களை
மொழிபெயர்த்துள்ளார். இச்சமயத்தில்தான்
ரஷ்ய மொழியில்
அமைந்த இலக்கியம் மூலநூலிலிருந்து பிரெஞ்சு மொழியின்
மூலமாக இலக்கிய உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் ஸ்கான்டினேவிய எழுத்தாளர்களின் படைப்புகள்,
செர்மன் நாட்டு மொழிபெயர்ப்பாளர்களின் கவனத்தை
ஈர்த்தன. இந்நேரத்தில் நெதர்லாண்ட்ஸ்,
செக்கோஸ்லோவாக்கியா போன்ற ஐரோப்பிய இலக்கியங்களில்
சிலவற்றை மொழிபெயர்ப்பாளர்கள் புறக்கணிக்கின்ற நிலை
ஏற்பட்டது. பல பதிப்பாளர்களின் முயற்சியால் மேற்கூறியநிலை
இப்பொழுது மாற்றம் பெற்று வருகிறது.
1791ஆம் ஆண்டு அலெக்ஸாண்டர் ஃபிரேஸர் டெய்ட்லர்
எழுதிய ''மொழிபெயர்ப்புக் கொள்கைகள்'' என்ற நூல்
இத்துறையில் குறிப்பிடத்தக்க நூலாகும். அவர் மூன்று
வகையான அடிப்படைக் கொள்கைகளை விளக்கிச்
சொல்கிறார்.
அவை வருமாறு :
• மொழிபெயர்ப்பு என்பது மூலமொழியில் உள்ள
கருத்துகளை ஒரு வரைபடம் போன்று விளக்க
வேண்டும்.
• மொழிநடை, எழுதிச் சென்றுள்ள முறை
போன்றவைகளெல்லாம் மூலமொழியில் அமைந்துள்ளது
போன்றே குறிக்கோள் (பெறு) மொழியிலும் அமைய
வேண்டும்.
• மொழிபெயர்ப்பு என்பது மூலமொழியில் உள்ள
எல்லாவகையான எளிமைகளையும் குறிக்கோள்
(பெறு) மொழி கொண்டு விளங்க வேண்டும்.
2.3.1 பிற்கால மொழிபெயர்ப்பு நிலைகள்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இலக்கிய உலகிலேயே
இணையற்ற மொழிபெயர்ப்பாளராகத் தாமஸ் கார்லைல் ஏற்றம்
பெற்றார். இந்நூற்றாண்டில் பல கவிஞர்கள் மொழிபெயர்ப்புப்
பணியிலே ஈடுபட்டனர். எடுத்துக்காட்டாக ஷெல்லி, பைரன்,
லாங்ஃபெலோ போன்றோரைக் குறிப்பிடலாம். எட்வர்ட்
பிட்ஸ்ஜெரால்ட் என்பவர் உமார் கய்யாமின் ‘ருபாயத்’தை
ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
இரண்டாவது உலகப் போருக்குப்பின் மொழிபெயர்ப்புப்
பணி மிகவும் சீரிய முறையிலேயே வளர்ந்தோங்கியது. பல
நாடுகள் இலக்கிய மொழிபெயர்ப்புக்கென்று ஆண்டுதோறும்
பரிசுகளைக் கொடுத்து உற்சாகப்படுத்தி வருகின்றன. விஞ்ஞான,
தொழில்நுட்ப மொழிபெயர்ப்புகள்
இக்காலக் கட்டத்தில்
வளர்ந்தோங்கக் காண்கிறோம். உலகத்தில் தலைசிறந்த
இலக்கியங்களை மிகவும் குறைந்த விலைக்கு ஆங்கிலேயர்கள்
வாங்கிப் பயனடையும் வகையில் பல்வேறு முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டன. இன்று மக்கள் தொடர்புச் சாதனங்களின்
பயன்பாட்டால் மொழிபெயர்ப்புத் துறை தன் ஆளுமையைப்
பறைசாற்றத் தொடங்கியுள்ளது.
2.3.2 தமிழில் மொழிபெயர்ப்பு
மொழிபெயர்ப்புத் துறை தனக்கென ஒரு நிலையான
தனியிடத்தைத் தக்க வைத்துக் கொண்டது இருபதாம்
நூற்றாண்டில்தான் என்றால் அது மிகையன்று.
ஒரு மொழியின் வளம் என்று சொல்லும்பொழுது,
பிறமொழிகளில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ள
இலக்கியங்களையும், அதே சமயம் அம்மொழியிலிருந்து பிற
மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இலக்கியங்களையும்
பொறுத்தே அமைகிறது. இந்த வகையில் இந்திய மொழிகளில்
மொழிபெயர்ப்புப் பணி மிகுந்த
ஈடுபாட்டுடன் வளர்ந்த
நிலையினை அறிகிறோம். இந்திய மொழிகளுள் தமிழ்மொழி
இந்தத் துறையில் இமயத்தின் உச்சிக்கே சென்றுள்ளதென்றால்
அதில் ஐயமில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்
தமிழில் தோன்றிய திருக்குறள் விவிலியத்திற்கு அடுத்த
படியாகப் பல நூறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்
பெற்றுள்ள நிலையே
சான்றாகும். திருவாசகத்தையும்
புறநானூற்றில்
சில பாடல்களையும் G.U. போப்
ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்தது ஒரு
தனிச் சிறப்புதான். தமிழ்
மொழிபெயர்ப்பின் வரலாறு, வளர்ச்சி பற்றி
நாம்
சிந்திப்பதற்கு
முன்பாக, பொதுவாக மொழியின் வளர்ச்சி
வேகமும்
வரலாறும் பற்றிச் சிந்திப்பது பயன் தரும்.
• மேலைநாட்டுக் கல்வி முறையும் மொழிபெயர்ப்பும்
புராணங்கள் சிற்றிலக்கியங்கள் இவற்றைக் கவிதை வடிவில்
இயற்றுவதையே பொழுது போக்காகக் கொண்டிருந்த தமிழ்ப்
புலவர் பெருமக்களிடையே மேலைநாட்டுக் கல்விமுறை ஒரு
புதிய திருப்பத்தை உருவாக்கியது. ‘உரைநடை வளர்ச்சி’ எனும்
ஒரு புதிய பரிமாணத்தை அவர்கள் ஏற்கத் தொடங்கினர்.
எல்லாவற்றையும் செய்யுளிலேயே சொல்லிக் கொண்டு வந்த
தமிழர்கள், கருத்தைப் புலப்படுத்த மிகச் சாதாரணமான
உரைநடையைப் பயன்படுத்தத் தலைப்பட்டனர். நாவல் என்ற
புதினம், சிறுகதை என்பன இந்தியரை, குறிப்பாகத் தமிழரை
மிகவும் கவர்ந்த புதிய இலக்கிய வகைகளாக
மாறின. மேலும்
‘கட்டுரை’ என்னும் புதுவகை உரைநடை இலக்கியம் பெரு
வழக்குப் பெற்றது. இவற்றோடு தன்னுணர்ச்சிப் பாடல்கள்,
குறுங்காப்பியம், நாடகம் போன்ற இலக்கிய வகைகளும் மனித
வாழ்க்கையோடு தொடர்புடைய உணர்ச்சிகளைச் சித்திரிக்கும்
புத்திலக்கியங்களாகப் பெருவாழ்வு பெற்றன.
எபிரேய மொழியில் உள்ள விவிலியம் 18ஆம்
நூற்றாண்டில் முதன்முதலில் 1774இல் ஜெ.பி. பெப்ரீஷியஸால்
தமிழில் மொழியாக்கம் செய்யப் பெற்றது. தொடர்ந்து
திரு.விஸ்வநாத பிள்ளை என்பவர் ஷேக்ஸ்பியரின்
‘மெர்ச்சென்ட் ஆப் வெனிஸ்’ என்ற நூலை ‘வெனிஸ்
வர்த்தகன்’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார். இந்தக்
காலக்கட்டத்தில் தான் மராத்தி மூலத்திலிருந்து பஞ்ச தந்திரக்
கதைகள் வீரமார்த்தாண்ட தேவரால் அருமையான கவிதை
வடிவில் மொழிபெயர்க்கப் பெற்றது.
• இஸ்லாமிய மொழிபெயர்ப்புகள்
தமிழ்நாட்டு இஸ்லாமியப் புலவர்கள் பலர் பாரசீக
மொழியில் உள்ள கதைகள், உரையாடல்கள், சிற்றிலக்கியங்கள்
போன்றவற்றைச் சிறப்பாகத் தமிழில் மொழிபெயர்த்தனர்.
இவற்றுள் ‘துத்திநாமா’ என்னும் ‘கிளிக்கதை’ சிறந்த ஒன்றாகக்
கருதப்படுகிறது. அராபிய மொழி நூலான திருக்குரானை
இதுவரை ஏழு அறிஞர்கள் தமிழில் மொழிபெயர்த்துள்ளனர்.
அராபிய மொழியில் வழங்கும் கதைப் பாடல்கள், காவியங்கள்,
தத்துவ விளக்க நூல்கள் ஆகிய பல தமிழில் தரப்பட்டுள்ளன.
அரபுக் கதைகளில் குறிப்பாக ‘ஆயிரத்து ஒரு இரவுகள்’
போன்ற கதைகள் சிறந்த முறையில் தமிழாக்கம் செய்யப்
பெற்றன. ‘அராபிய ஞானப் புதையல்’ என்னும் பெயரில்
குணங்குடி மஸ்தான் சாகிபு அராபிய தத்துவப் பாடல்களை
மொழிபெயர்த்துத் தந்துள்ளார். அலாவுதீனும் அற்புத
விளக்கும், தாவீது கோலியாத் கதைகள் போன்ற
கதைகளும் அராபிய மொழியிலிருந்து தமிழாக்கம் பெற்றன.
இக்பால் கவி அமுதம், இக்பாலின்
ஞானோதயம்
என்னும் பெயர்களில் இக்பால் கவிதைகள் தமிழில்
தோற்றமெடுத்தன. மேலும் கலீல் கிப்ரான், ஜலாலுதின் ரூமி
போன்றோர் படைப்புகளும் தமிழ் மொழிபெயர்ப்பு வாயிலாகத்
தமிழ் மக்கள் மனத்தில் பதிந்தன. அராபிய மருத்துவச்
செய்திகள், குறிப்பாகக் கண் மருத்துவம் பற்றிய செய்திகள்
தமிழுக்கு வந்த வரப்பிரசாதங்களாகும்.
• ஆங்கிலமும் ருசிய மொழியும்
ஆங்கில நூல்கள் பல்லாயிரக் கணக்காகத் தமிழாக்கம்
பெற்றன. சார்லஸ் டிக்கன்ஸின் A Tale of two cities
என்ற புதினத்தை இருநகரக் கதை என்ற பெயரில்
கா.அப்பாதுரையாரும் இருபெரும் நகரங்கள் என்ற பெயரில்
கே.வேலனும் மொழிபெயர்த்துள்ளனர். ஜேன் ஆஸ்டினுடைய
எம்மாவும் வால்ட்டர் ஸ்காட்டின் Ivanhoe என்ற புதினமும்
பல தமிழறிஞர்களால் தமிழாக்கம் பெற்றன. பெர்னாட்ஷாவின்
கதைகளும் தமிழ் வடிவேற்றன. பிரெஞ்சு,
ரஷ்ய மொழி
நூல்களும் தமிழில் மொழி மாற்றம் பெற்றன.
• சீனமொழி மொழிபெயர்ப்புகள்
ஆசியாவில் தலைசிறந்த பழம்பெரும் நாகரிக நாடுகளில்
சீனா ஒன்று என்ற உண்மையை யாரும் மறுக்க மாட்டார்கள்.
ஹீபோங்-கு-பிட்ச் எனப்படும் கன்பூசியசின் இளவேனிலும்
இலையுதிர் காலமும் என்ற கவிதைத் தொகுப்பிலுள்ள சில
பாடல்களை, கா.அப்பாத்துரையார்
மொழிபெயர்த்துள்ளார்.
சீனத்து மகளிர் பற்றிய கதைகளை, பனிப்படலத்துப் பாவை
என்ற சிறுகதைத் தொகுப்பாக்கினார் ந.பிச்சமூர்த்தி. குங்போதங்
என்னும் சீனர் எழுதிய நாவலைத் தழுவி, கிழக்கோடும் நதி
என்ற பெயரில் த.நா.குமாரசாமி மொழிபெயர்த்துள்ளார்.
சி.யூ.சென் என்னும் சீனப் பெண் எழுத்தாளரின் சில
படைப்புகளைப் பாரதியார் பெண் விடுதலை என்ற பெயரில்
மொழிபெயர்த்துள்ளார்.
• ஜப்பான் மொழி மொழிபெயர்ப்புகள்
சீனமொழிப் படைப்புகள் போலவே ஜப்பானியப்
படைப்புகளும், தமிழ்த் தோற்றம் கொண்டன. மணியோசை
என்ற பெயரில் புதுமைப்பித்தனால்
ஜப்பானியச் சிறுகதைகள்
தமிழ் வடிவேற்றன. யாமதாகாஷி என்ற ஜப்பானிய
நாவலாசிரியரின் உலகப் புகழ் வாய்ந்த கதைகள், நாடகங்கள்
பல துன்பக்கேணி, பகற்கனவு, முத்துமாலை என்ற
பெயர்களில் தமிழில் வந்துள்ளன. நோகுச்சி என்ற ஜப்பானியக்
கவிஞனின் குறும்பாட்டு பாரதியார் கட்டுரைகள் பலவற்றில்
தமிழ் உருவம் பெற்றன. இந்தக் குறும்பாட்டுவகை இன்றைய
ஹைக்கூ கவிதைத் தோற்றத்தின் வித்து என்றால் மிகையாகாது.
• வடமொழி மொழிபெயர்ப்புகள்
நம்நாட்டு மொழிகளில் வடமொழி இராமாயணம்,
மகாபாரதம் ஆகியவை தமிழ் வடிவேற்றன. பின்னர்,
காலமாற்றத்திற்கேற்பப் பலமொழி நூல்களும் தமிழ்
மொழிபெயர்ப்பைக் கொண்டன. பன்மொழி அறிஞர்களான
கா.ஸ்ரீ.ஸ்ரீ. தி.ஜ.ர., த.நா.குமாரசாமி, த.நா.சேநாபதி,
குமுதினி, ஆர்.சண்முகசுந்தரம் போன்ற பெருமக்கள்
மொழிபெயர்ப்புப் பணியேற்றனர்.
வங்கமொழி, மராத்தி,
கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற
மொழிகளிலிருந்து
பல இலக்கியங்கள் தமிழ்மொழியில்
மொழிபெயர்க்கப்பட்டன.
|