4.3 மொழிபெயர்ப்பு வகைகளின் விளக்கம் - II
இதற்கு முந்தைய பாடப்பிரிவில் மொழிபெயர்ப்பு
வகைகளைப் பற்றிப் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக
மேலும் சில வகைகளைப் பற்றி இந்தப் பிரிவில் படிக்கலாம்.
4.3.1 சுருக்கமான மொழிபெயர்ப்பு
மூலமொழியிற் காணும் செய்திகளை
மொழிபெயர்ப்பாளர்
தன் மனத்தில் ஏற்றுக் கொண்டு, சுருக்கமாகப் பெயர்ப்பு
மொழியில் தருவதே சுருக்கம் எனப்படும்.
இச்சுருக்கங்கள் செய்யுள் இலக்கியங்களில் மட்டுமின்றி
நீண்ட புதினங்கள், நாடகங்கள், வாழ்க்கை வரலாறுகள்,
அறிவியல் நூல்கள் போன்றவற்றிலும் காணப்படுவதை
அறியலாம். இவற்றால் மூல நூலை நாம் முழுமையாக
உளங்கொள்ள இயலாது. மாறாக இச் சுருக்கங்கள் மூலநூலைப்
படிக்கத் தூண்டுமேயானால் அது பயனுடையதாக அமையும்.
எடுத்துக் காட்டாகக் ‘காலம் மிகமிகக் குறுகியது’ என்ற
தலைப்பில் வை. சாம்பசிவம், ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின்
அறிவியல் எண்ணங்களை
மொழிபெயர்த்துள்ளார். அதைப்
படிக்கும் போது மூலநூலைப் படித்தாக வேண்டும் என்ற
உள்ளுணர்வு தூண்டப்படுகிறது. இது ஒரு சிறந்த
மொழிபெயர்ப்புக்கு அடிப்படை எனக் கொள்ளலாம்.
4.3.2 தழுவல்
மொழிபெயர்ப்பு நிலையின் ஆரம்பக் காலக் கட்டத்தை
நோக்கினால் இத்தகைய தழுவல் நூல்கள் தான் இடம்
பெற்றிருக்கின்றன என்று அறிகிறோம். மூலநூலின் கருத்தையும்,
கருவையும், கதைப்பின்னலையும், நிகழ்வுகள், பாத்திரங்கள்,
நிகழ்ச்சி மாற்றங்கள் ஆகியவற்றையும் ஒருமேற்சட்டமாக
வைத்து வரைகோடிட்டபின் அதைத் தனது எண்ணத்திற்கேற்ப
ஓவியன் புனைவது போல அமைப்பது மொழித்தழுவல்
ஆகும். இதற்கு முதன்மைச் சான்றாகக் கம்பராமாயணத்தைக்
கொள்ளலாம். வால்மீகியின் மேற்சட்டமும் வரைகோடும் கம்ப
ஓவியனுக்குத் தழுவல் காப்பியமாயிற்று. அதுபோலவே The
Secret way என்ற லிட்டன் பிரபுவின் (Lord Lyttan) நூல்
பேராசிரியர் சுந்தரம் பிள்ளைக்கு மனோன்மணீயமாகவும்,
The pilgrim’s progress என்ற ஜான் பணியனின்
(John Banyan) நூல் H.A.கிருஷ்ணபிள்ளைக்கு இரட்சணிய
யாத்திரிகமாகவும் தழைத்து எழுந்தன.
ஷேக்ஸ்பியருடைய பல நூல்கள் தமிழில் தழுவல்
நூல்களாக வெளிவந்தன. அவற்றுள் சலசலோசனச்
செட்டியாரின் ''சரசாங்கி'' குறிப்பிடத்தக்க ஒரு நூலாகும். இதில்
சில இடங்களில் மொழிபெயர்ப்பாக
இருந்தாலும் பல
இடங்களில் தமிழ்க்கவிதை நடைப்போக்கில்
ஷேக்ஸ்பியரை
மறந்து செட்டியாரைத்தான் காண முடிகிறது. தமிழ்ப்பாடல்
அமைப்பில் தமிழ் மண்ணின் மணம் வீசக் காணலாம்.
4.3.3 மொழியாக்கம்
பிறிதொரு மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டு
இருந்தாலும், பெறுமொழியின் மரபுத்தாக்கம் அதில்
காணப்படவேண்டும். இதனையே மொழியாக்கம்
என்கிறோம். கவிதைகளை மொழிபெயர்க்கும்போது அது
பெறுமொழிக் கவிதையாகவே தென்பட வேண்டும். சான்றாக,
காளிதாசரின் சாகுந்தலத்தை மொழியாக்கம் செய்த
மறைமலையடிகளின் சாகுந்தல நாடகத்தில் ''தமிழின்
உயிரோட்டம்'' துளிர்க்கிறது. ''மிருச்சகடிகம்'' என்ற நூலை ''மண்ணியல் சிறுதேர்'' என்று பண்டிதமணி கதிரேசன்
செட்டியார் மொழி மாற்றியுள்ளது சுவைத்தற்குரியது. ருபாயத்
என்ற பாரசீக நூலை உமர்கய்யாம் பாடல்கள் என்று
கவிமணி மொழியாக்கம் செய்துள்ள நூல் தமிழுக்குக் கிடைத்த
பெரும்பேறாகும் என்றால் மிகையாகாது. சான்றாக,
Here with a loaf of bread
Beneath the bough
A flask of wine, a book of verse and thou
Beside me singing in the wilderness
And wilderness is paradise
என்ற உமர்கய்யாம் பாடலைத் தேசிகவிநாயகம் பிள்ளை
அவர்கள்
வெய்யிற்கேற்ற நிழலுண்டு
வீசுந்தென்றல் காற்றுண்டு
கையில் கம்பன் கவியுண்டு
கலசம் நிறைய மதுவுண்டு
தெய்வகீதம் பலவுண்டு,
தெரிந்து பாடநீயுண்டு
வைய்யம் தருமிவ் வனமன்றி
வாழும் சொர்க்கம் வேறுண்டோ
என்று மொழியாக்கம் செய்துள்ளார்.
இந்தப் பாடலில், ஆங்கில மொழியில் படிப்பதைக்
காட்டிலும் ஒருதெளிவும் ஈடுபாடும் தமிழில் பெறமுடிகிறது.
|