1.4 பிற மொழிபெயர்ப்புகள்

மேற்குறிப்பிட்டவற்றைத் தவிர, இலக்கியம், சொற்பொழிவு, விளம்பரம், சமயம் ஆகியவற்றையும் மொழிபெயர்க்கும் பொழுது சில நெறிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

1.4.1 இலக்கிய மொழிபெயர்ப்பு

இலக்கியம் என்பது அது தோன்றும் சமூக, பண்பாட்டு வாழ்வியல் தளங்களைத் தன்னகத்தே கொண்டு விளங்குவது. இதனால்தான் சமூகம் தன்னைப் பார்த்துக்கொள்ளும் கண்ணாடி இலக்கியம் என்று அறிஞர்கள் கருதுவர்.

இது போன்ற இலக்கியங்களை மொழிபெயர்க்கும்போது பல நெறி முறைகளைப் பின்பற்ற வேண்டியது உள்ளது. குறிப்பாகக் கவிதை போன்றவற்றை மொழிபெயர்க்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டியது உள்ளது. இதில் சொல்லுக்குச் சொல் மொழிபெயர்க்க வேண்டியது இல்லை. கருத்தை மொழிபெயர்த்தால் அந்த இலக்கியம் சொல்லவரும் செய்தியைப் புலப்படுத்திவிடலாம். கவிதை மனவெளி உணர்வுகளைச் சுருக்கித் தகுந்த சொற்களால் உவமை, உருவகம், படிமம் என்ற அணிநயம் தோன்ற புனையப்படுவது. அதனை மொழிபெயர்க்கும் போது சில நேரம் கவித்துவம் கரைந்து போய் உரைநடைத்தன்மை வெளிப்படுகிறது.

கவிதை

மூலக் கவிஞன் தனது கவிதைக்குரிய அனுபவ வரையறைகளைத் தானே தேர்வு செய்து கொள்கிறான். மொழிபெயர்ப்பாளனோ அந்த அனுபவ வரையறைகளை மூலத்திலிருந்து பெற்றுக் கவிதை புனைகிறான். மூலக்கவிஞனுக்கு உள்ள சுதந்திரம் மொழிபெயர்ப்பாளனுக்கு இருப்பதில்லை. இந்தச் சூழலில் மொழிக்கே உரிய ஆக்கப்பண்பு துணை செய்வதோடு மொழிபெயர்க்கும் போது கூடிய மட்டும் மூலக் கவித்துவம் வெளிப்படுவதாக அமையவே முயற்சி செய்கிறான் மொழிபெயர்ப்பாளன். ஆயினும் சிலநேரம் உரைநடைத்தன்மையில் அவனது மொழிபெயர்ப்பு அமைந்து விடுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

புனைகதை

புனைகதைகளான புதினம், சிறுகதைகள் முதலியவற்றில் இடம்பெறும் உரையாடல்கள் வட்டார வழக்கில் இடம் பெற்றிருக்கும். என்னதான் பிறமொழிப் புலமை இருந்தாலும் வட்டார வழக்குகளைப் புரிந்து கொள்வதில் தடுமாற்றம் இருக்கும். அவற்றைத் தமிழில் மொழிபெயர்க்கும் போது எந்த வட்டார வழக்கில் மொழிபெயர்ப்பது என்பதில் சிக்கல் தோன்றும். கிட்டத்தட்ட பொருத்தமான மொழிபெயர்ப்பு ஆக்கிக் கொள்ளலாம்.

உறவுப் பெயர்களை மொழிபெயர்க்கும்போது கவனமாக இருக்க வேண்டிய தேவை உள்ளது. இந்நிலையை நாடகங்களிலும் காணலாம். ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

சான்றாக: ஆங்கிலத்தில் Sister-in-law, Brother-in-law. Uncle, Sister, Brother போன்ற பொதுச்சொற்களைத் தமிழில் மொழிபெயர்க்கும் போது புனைகதை, நாடகத்தின் போக்கிற்கு ஏற்பப் பொருத்தமான உறவுப் பெயர்களை அமைக்க வேண்டும்.

1.4.2 சொற்பொழிவுகள்

சொற்பொழிவுகள் பெரும்பாலும் பிரச்சார வடிவின. மொழி நடையில் உணர்வுகளைத் தட்டி எழுப்பிச் செயல்படத் தூண்டுவது அவற்றின் நோக்கமாகும். இச்சொற்பொழிவுகளின் மொழிபெயர்ப்பிலும் மூலத்துக்கு இணையான உணர்ச்சி ஊட்டும் கூறுகளும் செயல்படத் தூண்டும் ஆற்றல் மிக்க மொழிநடையும் அமைதல் வேண்டும்.

சான்றாக: சுவாமி விவேகானந்தர், அறிஞர் அண்ணா ஆகியோர் பல்வேறு சூழலில் ஆற்றிய எழுச்சிமிகு உரைகள், மாவீரன் அலெக்சாண்டரின் போர்க்கள உரை ஆகியவற்றை மொழிபெயர்க்கும் போது வறட்டு உரைநடையில் மொழிபெயர்த்தால் அந்தச் சொற்பொழிவுகளின் வீரியம் காணாமல் போகும்.

1.4.3 விளம்பரங்கள்

வாசகரின் (படிப்பவரின்) கவனத்தை ஈர்த்துத் தத்தம் சரக்குகளை அறிமுகப்படுத்தி, அவற்றைப் பயன்படுத்துமாறு அவர்களைத் தூண்டுவது விளம்பரத்தின் நோக்கமாகும். குறிப்பாக விளம்பரத்தின் தொடக்க வாசகம் வாசகனை இழுத்து நிறுத்துவதாக அமைய வேண்டும். தற்காலத்தில் பன்னாட்டு சந்தைக்களமாக உலகம் ஆகிப்போனதால் விளம்பர மொழிபெயர்ப்பில் சொல்கவர்ச்சி தேவைப்படுகிறது. இத்தகைய விளம்பரங்கள் பலவற்றைப் பத்திரிகைகளில் நீங்கள் காணக்கூடும்.

1.4.4 சமய, வரலாற்று இலக்கியங்கள்

பல்வேறு காலக்கட்டச்செய்திகள் அடங்கிய பைபிள், குர்ஆன், வேதங்கள், சங்க இலக்கியங்கள், வரலாற்றுநூல்கள் இவற்றை மொழிபெயர்க்கும் போது, நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய இடங்கள், பொருட்கள், ஆடைகள், அணிகள், தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றை மொழிபெயர்க்கும் வகையில் மொழிபெயர்ப்பாளன் அவற்றைப் பற்றி முழுமையாக அறிந்திருத்தல் அவசியம். சிலநேரம் பலநூறு ஆண்டுகளுக்கு முந்தைய புவியியல் வரலாற்றுச் சூழல்களைப் புரிந்துகொள்ள மொழிபெயர்ப்பாளனால் முடியாமல் போகும்போது மொழிபெயர்ப்பு தெளிவில்லாமல் ஆகிவிடுகிறது.