1.5 சிறந்த மொழிபெயர்ப்பு

எந்த ஒரு மொழிபெயர்ப்பும் மூலத்தின் கருத்தினைத் தவறில்லாமல் பெறுமொழி வாசகனுக்குப் (படிப்பவருக்குப்) பெயர்த்துத் தருவதாக அமைய வேண்டும். மொழிபெயர்ப்பின் இப்பணியை தகவல்தரும் பணி (Informative function) என்பர்.
மூலத்தின் கருத்து மூலமொழி வாசகர் உள்ளத்தில் ஏற்படுத்திய உணர்வுகளை மொழிபெயர்ப்பும் தன் வாசகர் உள்ளத்தில் ஏற்படுத்த வேண்டும். அதற்கேற்ற புலப்பாடுகளை (Expressions) மொழிபெயர்ப்பு பெற்றிருத்தல் வேண்டும். இதனை மொழிபெயர்ப்பின் உணர்வூட்டும் பணி (Expression function) என்பர்.
வாசகரைச் செயல்படத் தூண்டுவதாகவும் மொழிபெயர்ப்பு அமைதல் வேண்டும். அதற்கான ஆற்றல் அதற்கு இருத்தல்வேண்டும். மொழிபெயர்ப்பின் இச்செயல்பாட்டைச் செயல்தூண்டும் பணி (Imperative function) என்பர். மேற்கண்ட மூன்று பணிகளும் ஒரு மொழிபெயர்ப்பில் இருந்தால் அம்மொழிபெயர்ப்பு கூடுதல் ஆற்றல் வாய்ந்ததாக - சிறந்ததாக இருக்கும்.

1.5.1 பண்பாட்டு வழக்குகள்

மூலத்தின் பண்பாட்டு வழக்குகளில் சிலவற்றை நிகரான பெறுமொழி பண்பாட்டு வழக்குகளால் பதிலீடு செய்கிறோம். ஆனால் உபநயனம், காதணி, பூப்புனிதநீராட்டு, அம்மன் விழாக்கள், திருமணச் சடங்குகள் போன்றவற்றைப் பெறுமொழியில் பெயர்க்கும்போது அவற்றை அப்படியே ஒலிபெயர்ப்புச் செய்து அடிக்குறிப்பில் சிறுவிளக்கம் தரலாம். ஏனென்றால் பெறுமொழியில் இத்தகைய சடங்குகள், விழாக்கள் இல்லாமல் இருக்கலாம். ஒரு பண்பாட்டுக்கூறு மூலத்தின் பொருட் கூறுகளில் ஒன்றாகக் கலந்து நிற்கும் போது, மொழிபெயர்ப்பில் அதை மாற்றாமல் கையாளவேண்டும். ஏனென்றால், He extended a warm welcome என்பதைக் ''குளிர்ந்த மனத்துடன் வரவேற்றான்'' என்று மொழிபெயர்க்கும்போது பொருள் மிகச்சிறப்பாக மூலத்திலிருந்து பெறுமொழிக்கு வந்து சேர்கிறது.

1.5.2 புதுமையாக்கம்

ஒரு மொழியில் நிகழும் புதுச்சொல்லாக்கத்தைக் கலைச்சொற்கள் என்கிறோம். அது அந்தந்தத் துறை சார்ந்ததாக இருக்கும். பொது அகராதியில் அதன் பொருள் வேறு. துறை சார்ந்த சிறப்பு அகராதிகளில் அச்சொற்களின் பொருள் வேறு. இத்தகைய கலைச்சொல்லாக்கம் செய்யும்போது அம்மொழியின் சொல்லாக்க அமைப்புக்கு ஏற்ப அமைதல் வேண்டும். தமிழைப் பொறுத்த வரை முன்ஒட்டாகவோ பின்ஒட்டாகவோ அமைந்து இருப்பதைக் காணலாம்.

அறிவியல் சொல்லானாலும், சாதாரண வழக்குச் சொல்லாக இருந்தாலும் அவற்றின் மூலம் என்ன என்பதை ஆராய்ந்து பின்னர் அம்மூலத்தோடு தொடர்புடையதாகப் பெறுமொழிச் சொல்லை உருவாக்கவேண்டும்.

1.5.3 ஒலியும் வடிவமும்

மானிடப்பெயர்கள், இடங்களின் பெயர்கள், பொருட்களின் பெயர்கள் முதலியவற்றை ஒலிபெயர்ப்பதே சிறந்தது. தமிழில் ஒலிபெயர்ப்புச் செய்து கொள்ள வழிவகை செய்யும் வகையில் வடமொழிச் சொற்களைத் தமிழில் தரும்போது வடசொல் எழுத்துகளைத் தவிர்த்து இணையான தமிழ்ஒலி எழுத்துகளைக் கொண்டு சொல்லலாம் என்று தொல்காப்பியம் வழி வகுக்கிறது.

அறிவியல் கண்டுபிடிப்பாளர்களின் பெயர்களுடன் அமையும் அளவைப் பெயர்களையும் பிற பெயர்களையும் ஒலி பெயர்ப்பதுதான் அவர்களுக்குச் செய்யும் மரியாதை.

ஒலிபெயர்க்கப்பட்ட சொல்லை மொழிபெயர்ப்பு நூல் முழுவதும் ஒரே மாதிரியான ஒலிக்கட்டமைப்பில் கையாள வேண்டும். ஒரே சொல்லுக்கு வேறு வேறு சொற்களை நூல் முழுவதும் பயன்படுத்தினால் வாசகர் (படிப்பவர்) குழப்பம் அடையக்கூடும். ஆகவே ஒரே சொல்லை நூல் முழுவதும் பயன்படுத்தவேண்டும்.

ஒலிபெயர்ப்பில் பெறுமொழி ஒலிமரபுகளைக் காப்பது சிறப்பானது. ஆனால், பொருள் வெளிப்பாட்டில் மயக்கத்தையும் சிதைவையும் திரிபையும் தவிர்ப்பதற்காகத் தமிழ் நெடுங்கணக்கில் இல்லாத ஆங்கில ஒலிப்பு ஒலிகளுக்கு இணையாக ஸ, ஷ, ஜ, ஹ, போன்ற கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்துகின்றனர். கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்துவது பற்றித் தமிழ் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு இருந்தாலும் காலப்போக்கில் அவற்றைத் தவிர்த்துத் தமிழ் ஒலிநெறிப்படி மாற்றிக் கொள்ளலாம்.

குறியீடுகளைக் கையாளுதல்

a, b, g, m, r, w போன்ற அனைத்துலக அறிவியல் குறியீடுகளையும், >, <, =, ò, Ö, p, S, q, +, -, ´, ¸ போன்ற கணிதக் குறியீடுகளையும் எத்தகைய மாற்றமும் இல்லாமல் அப்படியே கையாளுவது மொழிபெயர்ப்பை எளிமையாக்குவதாகவும், அறிவியல்பொதுமையைக் காப்பதாகவும் அமையும்.

1.5.4 தவிர்க்கப்பட வேண்டியவை

பெறுமொழி வாசகனிடத்தில் (படிப்பவரிடத்தில்) அச்சத்தையும், வெறுப்பையும், அருவருப்பையும், தெளிவின்மையையும் தோற்றுவிக்கும் பெறுமொழி விலக்குச் சொற்களை (verbal taboos) மொழிபெயர்ப்பில் தவிர்க்க வேண்டும்.

பெறுமொழி வாசகனிடத்தில் நகைப்பூட்டும் ‘குதிரைக்குஞ்சு’ போன்ற மரபுப் பிழைகளைத் தவிர்க்க வேண்டும்.

மூலமொழி, பெறுமொழி இரண்டிலும் ஒரு சொல் வழக்கில் இருந்து அதன்பொருள் இருமொழிகளிலும் வேறுவேறாக இருந்தால், மொழிபெயர்ப்பில் மூலத்தின் பொருளுக்கு இணையான பெறுமொழிச் சொல்லைத்தான் பயன்படுத்தவேண்டும். மூலச்சொல்லோடு வடிவத்தில் மட்டும் ஒப்புமை உடைய பெறுமொழிச் சொல்லைத் தவிர்த்தல் வேண்டும்.