1.6 மொழிபெயர்ப்பில் பொருளும் நடையும்

மூலமொழிச் செய்திக்கு மிக நெருங்கி, பெறுமொழிக்கு இயல்பான நிகரன்களைப் பெறுமொழியில் ஆக்கித் தருவது மொழிபெயர்ப்பு. இதில் முதன்மை இடம் பெறுவது பொருள்; இரண்டாம் இடம் பெறுவது நடை என்பார் நைடா.

சூழல் சார்ந்த மொழிபெயர்ப்பு, சொல்லுக்குச் சொல் மொழிபெயர்ப்பைக் காட்டிலும் பொருத்தமானது.
வாசகனுக்குப் பழக்கமான சொற்களும் தொடர்களும் மரபுவழிப்பட்ட சொற்கள், தொடர்களைக் காட்டிலும் பொருத்தமானவை.
புனைகதை, நாடகம் போன்றவற்றில் இடம்பெறும் உரையாடல்களை மொழிபெயர்க்கும்போது, இலக்கிய மொழிவழக்கைக் காட்டிலும் பேச்சுமொழி வழக்கே பொருத்தமானது.
மொழிபெயர்ப்பு நடையில் மூலமொழியின் மொழியியல் கூறுகளைக் காட்டிலும் பெறுமொழியின் மொழியியல் கூறுகளே முக்கிய இடம்பெற வேண்டும்.

கூட்டல் குறைத்தல்

மூலத்தின் கருத்தில் கூட்டவோ குறைக்கவோ செய்வது முழுமையான மொழிபெயர்ப்பு ஆகாது. ஆனால் மூலத்தின் கருத்தைப் பெறுமொழி வாசகனுக்கு உயிர்த்துடிப்புடன் புலப்படுத்துவதற்கு மூலத்தின் சொற்களில், தொடர்களில், தொடர் அமைப்புகளில், உருவக, உவமைகளில், படிமங்களில், சந்தத்தில், பெறுமொழியின் இயல்புக்கேற்ப மாற்றங்கள் செய்வது மொழிபெயர்ப்புக்கு, குறிப்பாகக் கவிதை மொழிபெயர்ப்புக்கு அனுமதிக்கப்பட்ட உரிமையாகக் கொள்ளலாம்.

மூலத்தை மிஞ்சாமை

ஒரு நிறைவான மொழிபெயர்ப்பு மூலத்தைப் பொருளில் தான் மிஞ்சக்கூடாதே தவிர, சொல்லும் விதத்தில் கடுமையான கட்டுப்பாடு விதிக்க இயலாது. அதாவது மூலக்கவிஞன் தனது கவிதைக்கான அனுபவ வரையறைகளைத் தானே தேர்வு செய்கிறான். மொழிபெயர்ப்புக் கவிஞன் அந்த அனுபவ வரையறைகளை மூலத்திலிருந்து பெற்றுக் கவிதை புனைகிறான். மொழிபெயர்ப்புக் கவிஞன் மூலத்தின் அனுபவ வரையறைகளைத்தான் மிஞ்சக் கூடாதே தவிர, அவன் கவிதை புனையும் விதத்தில் மூலத்தை மிஞ்சுவது என்பது அவனது மொழித்திறத்தையும் அந்தச் சூழலில் சுரக்கும் கவிதை ஊற்றையும் பொறுத்தது. இதில் கட்டுப்பாடு விதிக்க முடியாது.