2.1 தமிழ்மொழியின் தொன்மை

தமிழ்மொழி திராவிட இனத்தின் முதல் மொழி ஆகும்.

நமக்குக் கிடைத்துள்ள இலக்கியங்களைக் கொண்டு நோக்கினால், சுமார் கி.மு.300க்கு முன்னரே நல்ல நாகரிகத்துடனும் சிறந்த பண்பாட்டுடனும், இலக்கிய வளத்துடன் விளங்கிய மொழி தமிழ்மொழி என்பது புலனாகும். அம்மொழி தோன்றிய காலத்திலிருந்து இன்றளவும் தொடர்ந்து மக்களால் பேசப்பட்டு வரும் மொழி. அது தோன்றிய காலத்தில் தோன்றியதாகக் கருதப்படும் சமஸ்கிருதம், கிரேக்கம், இலத்தீன் போன்ற மொழிகள் வழக்கில் இருந்து நீங்கின.

இத்தகைய பழமை வாய்ந்த மொழியில் பல்வேறு மொழிச்சொற்களும் இலக்கியங்களும் இணைந்திருப்பது காலத்தின் கட்டாயத் தேவை என்பதை மட்டும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

2.1.1 தமிழும் பிறமொழிகளும்

தமிழ்மொழி தொன்மைக் காலத்தில் பழந்திராவிட மொழி என்ற நிலையில் இருந்தது. அந்தப் பழந்திராவிட மொழிக் கூறுகள் பலவற்றை அப்படியே கொண்டுள்ள மொழி தமிழ் மட்டுமே. அப்பழந்திராவிடத் தமிழ்மொழியோடு சமஸ்கிருதம் தொடர்பு கொண்டதால் முதலில் பிரிந்த மொழி கன்னடம், அதனைத் தொடர்ந்து தெலுங்கும் துளுவும் அதனைத் தொடர்ந்து மலையாளம் என இன்றைய அளவில் மொழிகள் பிரிந்தன.

இவ்வாறு தமிழிலிருந்து தனித்துப் பிரிந்த மொழிகள் எல்லாம் தமக்கென இலக்கிய இலக்கணங்களை உருவாக்கிக் கொண்டன. துளு மொழிக்கு மட்டும் பிற்காலத்தில் இலக்கணம் உருவாக்கப்பட்டது.

தமிழோடு தொடக்கக் காலத்தில் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த மொழி சமஸ்கிருத மொழி ஆகும். அதிலிருந்து தமிழில் சொற்கள் பல வழக்கிற்கு வந்தன. பிற்காலத்தில் இலக்கியங்கள் மொழிபெயர்ப்பாகவும் தழுவல்களாகவும் தமிழில் இடம் பெற்றன. தமிழிலிருந்து பிரிந்த மொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலிருந்தும், இந்தியாவின் வடமாநிலங்களில் வழங்கும் குசராத்தி, இந்தி, வங்க மொழி போன்ற மொழிகளிலிருந்தும் இலக்கியங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன. அம்மொழிகளுக்குத் தமிழிலிருந்தும் இலக்கியங்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

அயல்நாட்டு மொழிகளான ஆங்கிலம், ஜெர்மன், ரஷ்ய மொழிகளிலிருந்தும் கூட இலக்கியங்கள் மொழிபெயர்க்கப்பட்டதோடு தமிழ் இலக்கியங்களும் அம்மொழிகளுக்குப் பெயர்க்கப்பட்டன.

இப்படி இலக்கிய வளங்களைக் கொண்டும் கொடுத்தும் இணைந்தே வளர்ச்சி காண வேண்டிய சூழலில் மொழிகள் உள்ளன. இதற்குப் பெரிதும் பயன்படுவது மொழிபெயர்ப்பு ஒன்றே ஆகும்.

• இருவகை எண்ணங்கள்

பல்வேறு மொழிகளைக் கொண்ட இந்தியாவில் திராவிட மொழிகளும், திராவிடமொழி அல்லாத அயல்மொழிகளும் உள்ளன. வெளிநாட்டு மொழிகளாக ஆங்கிலம் போன்றவை உள்ளன. தமிழிலிருந்து பிறமொழிக்கும், பிறமொழிகளிலிருந்து தமிழிற்கும் மொழிபெயர்க்கப்பட்ட இலக்கியங்களின் வரலாற்றை இனிக் காணலாம்.

• மொழிபெயர்த்தவை

எவற்றை மொழிபெயர்க்க வேண்டும், எவற்றை மொழிபெயர்க்கக் கூடாது என்று முடிவு செய்வதற்கான வரன்முறை எதுவும் இலக்கிய மொழிபெயர்ப்புக்கு இல்லை. ஒருமொழியில் தோன்றிய சிறந்த இலக்கியம் அம்மொழி பேசும் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, காலம் காலமாக வழக்கில் இருந்தால், அந்த இலக்கியம் சிறந்த இலக்கியமாகக் கருதப்படுகிறது. அதே இலக்கியத்தை இருமொழி அறிந்த அறிஞன் ஒருவன், மற்றமொழி பேசும் மக்களுக்கும் பயன்படும் என்ற நோக்கிலோ அல்லது அந்த இலக்கியம் எழுந்த மொழியின் சமூகப் பண்பாட்டு நிலைகளை மற்ற மொழியினரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கிலோ மொழிபெயர்ப்பது இயல்பாக நடக்க வேண்டிய ஒன்று. இத்தகைய இயல்பான நிகழ்ச்சிதான் மொழிபெயர்ப்புக்கான தூண்டு கருவிகளில் ஒன்றாக அமைகிறது.

2.1.2 பழங்கால மொழிபெயர்ப்புகள்

மொழிபெயர்க்கின்ற எண்ணம் தமிழைப் பொருத்த வரையில் காலத்தில் முற்பட்டது எனலாம். மொழிபெயர்ப்பு எண்ணம் பற்றிய செய்தியினை ''மா பாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்'' பாண்டியர்கள் தமிழ் மொழியைக் காத்தனர் என்ற தகவலைச் சின்னமனூர்ச் செப்பேடு சுட்டுகிறது. அந்த மொழிபெயர்ப்பு நமக்குக் கிடைக்கவில்லை.

பண்டைய காலத்திலேயே நன்கு வளர்ச்சி அடைந்த இந்திய மொழிகளுள் தமிழ்மொழி தொன்மையானது மட்டுமன்றி, தொடர்ந்து வளர்ந்து வருவதுமாக உள்ளது. அறிவியல் தொழில்நுட்பம் வளராத காலத்திலேயே தமிழர்கள் இந்தியாவின் பிற பகுதிகளிலும் உலகின் ஏனைய பகுதிகளிலும் வணிகத் தொடர்பும் பண்பாட்டுத் தொடர்பும் கொண்டு இருந்தனர். இதனால் பிறமொழியாளர்களுடன் தொடர்பு கொண்டு தம் கருத்தைப் புரிய வைக்க வேண்டியவர்கள் ஆகிவிட்டனர். தமிழ்நாட்டின் சிறப்புமிகு வணிகத் தலமாகக் காவிரிப் பூம்பட்டினம் விளங்கியது. அதன் கடைத்தெருக்களில், ''பதினெண்பாடை மாக்களும்'' அதாவது பதினெட்டு மொழி பேசும் மக்களும் சுற்றித் திரிந்தார்கள் எனப் பட்டினப்பாலை என்ற சங்க இலக்கியமும் மணிமேகலை என்ற காப்பியமும் குறிப்பிடுகின்றன.

அவர்களுடன் சீனர், அரேபியர், யவனர் எனப்படும் கிரேக்க ரோமானியர் என்போரும் தமிழ்நாட்டிற்கு வாணிகத்திற்காக வந்து தங்கியுள்ளனர் எனப் பழங்காலத் தகவல்களைத் தரும் தொல்லியல் ஆய்வு குறிப்பிடுகிறது.

இத்தகைய சூழலில் அண்டை அயல்நாட்டவருடன் தொடர்பு கொண்டு தங்கள் கருத்தை எடுத்துரைக்க அம்மொழி தெரிந்தவர்கள் சிலராவது இங்கே இருந்திருக்க வேண்டும் அல்லது அவர்களில் சிலராவது தமிழ் மொழியைக் கற்றிருக்க வேண்டும்.

கி.மு.215 அளவில் காஞ்சியிலிருந்து சென்ற தூதுக் குழு ஒன்று, சீனப் பேரரசைச் சந்தித்ததாகச் சீனாவின் காலவழிச் செய்திக்கோவை குறிப்பிடுகிறது.

இன்றைய திருப்பதி மலைக்கு வடமேற்குப் பகுதியில் தெலுங்கானா என்ற நிலப்பரப்பைக் கடந்து விட்டாலே மொழிபெயர் தேயம் தொடங்கி விடுகிறது என்று சங்ககாலப் புலவர் மாமூலனார் குறிப்பிட்டுள்ளார். இங்கு ''மொழிபெயர் தேயம்'' என்பது தமிழ் தவிர ஏனைய மொழிகளான தெலுங்கு மொழி, கன்னட மொழி பேசும் பகுதி என்று பொருள்.

பனிபடு சோலை வேங்கடத்து உம்பர்
மொழிபெயர்தேயத்தர் ஆயினும் நல்குவர்

என்ற 211ஆவது அகநானூற்றுப் பாடல் அடியின் அடிப்படையில் மொழிபெயர்ப்பு என்ற சொல் கூட உருவாகி இருக்கலாம்.

2.1.3 தொல்காப்பியச் சான்று

மொழிபெயர்ப்பின் தெளிவான அறிவு பண்டைத் தமிழருக்கு இருந்திருக்கிறது என்பதற்குத் தொல்காப்பியம் சான்றாக உள்ளது. அதில் நூல்களை வகைப்படுத்தும்போது முதல் நூல், வழிநூல் எனப் பகுக்கப் பட்டுள்ளது. வழி நூலை விளக்கும் போது தொகைநூல், விரிநூல், தொகைவிரி நூல், மொழிபெயர்ப்பு நூல் என நான்கு வகையாகப் பகுத்துக் காட்டப்பட்டுள்ளது. இதற்கான நூற்பா வருமாறு :

தொகுத்தல், விரித்தல், தொகைவிரி, மொழிபெயர்த்து
அதர்ப்பட யாத்தலோடு அனை மரபினவே

                                  (தொல்நூற்பா - 1597)

எனவே தொல்காப்பியம் தோன்றியதாகக் கருதப்படும் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில், வேறு பல மொழிகளிலிருந்து மொழிபெயர்ப்புச் செய்யப்பட்ட நூல்கள் தமிழில் இருந்தன எனலாம்.

2.1.4 பழந்தமிழ் இலக்கியங்களில் மொழிபெயர்ப்பு

புறநானூறு, கலித்தொகை போன்ற சங்கத் தொகை இலக்கியங்களில் 'தருமபுத்திர' என்ற வட சொல் 'அறவன் மகன்' எனவும், 'ஸ்ரீ' என்ற சிறப்பு அடைச்சொல் 'திரு' எனவும் தமிழாக்கம் பெற்றுள்ளன.

‘லக்ஷ்மி’ என்ற வடமொழிப்பெயர் முதன் முதலாக மணிமேகலைக் காப்பியத்தில் இலக்குமி என்ற சொல்லாகத் தமிழாக்கம் பெற்றுள்ளது.

வாரணாசி என்ற காசியின் பெயரைக் கலித்தொகைப் பாடலில் வாரணவாசி என்று குறிப்பிட்டுள்ளமை பின்வரும் வரிகளால் விளங்கும்.

தெருவின்கண் காரணம் இன்றிக் கலங்குவார் கண்டுநீ
வாரணவாசிப் பதம் பெயர்த்தல், ஏதில
நீ நின்மேல் கொள்வது;

                                (கலித்தொகை - 60 : 13)

யமுனா என்ற வடஇந்திய ஆற்றினைச் சங்கத் தமிழர் ''தொழுனை யாற்றினுள் தூமணி வண்ணனை'' என்ற சிலப்பதிகாரத் தொடரின் வழி குறிப்பிட்டுள்ளதை அறியலாம்.

பரிபாடலில் நரசிம்ம அவதாரம் ''நரமடங்கல்'' என்றும் பிரகலாதன் ‘பிருங்கலாதன்’ என்றும் குறிப்பிடப்படுவதைக் காணலாம்.

சிலப்பதிகாரம் இயற்றப்பட்ட காலத்தில் வடமொழிக் கலப்பு சங்க இலக்கியத்தைக் காட்டிலும் அதிக அளவில் இருப்பதைக் காணமுடிகிறது. குறிப்பாகக் கண்ணகியும் கோவலனும் புகாரை விட்டு மதுரைக்குச் செல்லும் போது இராமனைப் பிரிந்த அயோத்தி போல என்ற குறிப்பைக் காணலாம்.

மணிமேகலையிலும் வடமொழிக் கலப்பு மிகுதியாக உள்ளது. இதில் இராமாயணக் குறிப்புக் கையாளப் பட்டுள்ளமை மூன்று காதைகளின் வழி அறிய முடிகிறது.

பல்லவர் காலத்திலும் சோழர் காலத்திலும் நிறைய வடமொழிநூல்களின் அறிமுகம் ஏற்பட்டது. இக்காலத்திலிருந்து தமிழ் இலக்கியத்தின் பல்வேறு துறைகளில் நேரடியான மொழிபெயர்ப்புகளும் தழுவல்களும், மொழியாக்கங்களும், சுருக்கமும் விரிவானதுமான நூல்களும் வெளிவந்துள்ளன.

பிற்காலத்தில் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட ஆட்சியாளர்கள், உருது மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட இசுலாமியர், ஆங்கில ஆட்சியாளர்கள், ஆங்கிலத்தை தொடர்புமொழியாகக் கொண்ட பிற ஐரோப்பிய ஆட்சியாளர்கள், வணிகர்கள் அவரவர் மொழியையும், இலக்கியங்களையும் தமிழகப் படிப்பாளிகளுக்கு அறிமுகமாக்கினர், அத்துடன் படைப்பாளிகளாகவும் திகழ்ந்து புதிய இலக்கிய வழியைச் செம்மைப் படுத்தியதுடன் புதிய இலக்கிய வடிவங்களையும் உருவாக்கினர்.