2.4 தமிழிற்கு வந்த மொழிபெயர்ப்புகள்

தமிழ்மொழியில் பல்வேறு இந்திய உலக மொழிகளிலிருந்து இலக்கிய வடிவங்களான செய்யுள், புதினம், சிறுகதை, நாடகம், உரைநடை எனப் பலவற்றை மொழிபெயர்த்துள்ளனர். முதலாவதாகச் செய்யுள் மொழிபெயர்ப்பைக் காணலாம்.

2.4.1 வடமொழியிலிருந்து தமிழிற்கு வந்தவை

தனிப்பாடல் முதல் காவியங்கள் வரை பலவகையான செய்யுள்களும், புதுக்கவிதைகளும், இசைப் பாடல்களும் கவிதைகள் பலவும் வந்து புகுந்தன. முன் நூற்றாண்டுகளில் தழுவலாகியனவும் தமிழில் நேரடியான, உண்மை மொழிபெயர்ப்புக்குக் களமாக அமைந்தன.

வடமொழியிலிருந்து இதிகாசங்களும், புராணங்களும், சமயச் சார்புடைய ஆக்கங்களும், வேத உபநிடதங்களும் மிகுதியாக மொழிபெயர்ப்புக்கு உட்பட்டன.

• இராமாயண மொழிபெயர்ப்புகள்

இராமாயணம் இந்தியாவில் வடமொழியில் வால்மீகியால் இயற்றப் பட்டது. அது தொடங்கி இந்திய மொழிகள் அனைத்திலும் மொழி பெயர்ப்பாகவும், தழுவலாகவும், பிற உள்ளளூர் இலக்கியங்களில் இடைக் குறிப்புகளாகவும் காண முடிகின்றது. இராமாயணம் பலரால் தமிழில் தரப்பட்டுள்ளது.

• மகாபாரதம்

இந்திய இலக்கியங்களில் புராண இலக்கியமாகத் திகழ்கின்ற மகாபாரதமும், அதில் உள்ள கிளைக் கதைகளும், குறிப்பாக பகவத் கீதையும், ஏனைய மொழிகளில் உள்ளது போன்று தமிழிலும் மொழிபெயர்ப்பாகவும், தழுவல்களாகவும் வெளிவந்துள்ளன.

• வேதங்கள்

வடமொழியில் இசையுடன் பாடப்படும் வேதங்களான ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களும் சில உபநிடதங்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

2.4.2 பிற மொழிகளிலிருந்து தமிழிற்கு வந்தவை

வடமொழிக்கு அடுத்ததாக ஆங்கிலம் செய்யுள் மொழிபெயர்ப்புக்கு இடமளித்துள்ளது. எட்வின் அர்னால்டின் பாடல் கவிமணியிடம் ஆசிய ஜோதி (1952) எனத் தழுவலாயிற்று. ஜான் மில்டனின் வழி நின்று ஆதி நந்தவனப் பிரளயம் (1868), சுவர்க்க நீக்கம் (1895), பூங்காவனப் பிரளயம் (1978), பாரதீசு உத்தியான நாசம் (1880) போன்ற நூல்கள் பல எழுந்துள்ளன. தாமஸ் கிரேயின் எலிஜி (இரங்கற்பா, 1961), டென்னிசனின் இடில்ஸ் ஆப் த கிங் (1907), லேடி ஆப் ஷாலட் (1910), டோரா போன்றனவும் பல கவிஞர்களின் பாடல் தொகுப்பும் (1954) ஆங்கிலத்திலிருந்து தமிழாகியுள்ளன.

பாரசீக மொழியிலிருந்து உமர்கய்யாமின் பாடல்கள் ஆங்கிலமொழி வழியாக, சாமி சிதம்பரனார் (1946), எஸ். கிருஷ்ணமாசாரியார் (1921), கவிமணி (1945), சுப்பிரமணிய யோகி (1942) போன்ற பலரால் வழங்கப்பட்டுள்ளன.

கிரேக்க மொழி இலியட் (1961), ஒடிசி ஆகியனவும் தமிழில் வெளிவந்துள்ளன.

ரஷ்யப் பாடல்கள், த.கோவேந்தன் (எண்ணப் பறவைகள், 1975 சிவப்புக் குயில்கள், 1975), ரகுநாதன் (சோவியத் நாட்டுக் கவிதைகள், லெனின் கவிதாஞ்சாலி, 1965), போன்றோரால் தமிழில் தரப்பட்டுள்ளன.

இந்திய மொழிகளில் ஒன்றான வங்காளத்திலிருந்து இரவீந்திரநாத் தாகூர், சரத் சந்திர சாட்டர்ஜி, பங்கிம் சந்திரர் முதலியவர்களுடைய ஆக்கங்கள் பலவற்றை மொழிபெயர்த்துத் தமிழுக்கு வளம் சேர்த்துள்ளனர்.

இந்தியிலிருந்து துளசி ராமாயணம், ஸ்ரீநிவாசாசாரியார் (1916), எஸ்.அம்புஜம்பாள் (1942), எஸ்.ஜி. சுப்பிரமணி அய்யர் (1965), தி.வேங்கட கிருஷ்ணய்யங்கார் (1967), எஸ்.ஜகந்நாராயணன் (1971-72) போன்ற பலரால் பெயர்க்கப்பட்டுள்ளது. கபீரின் படைப்புகளும், கபீர்தாசரின் அருள்வாக்கு (தி.வேங்கட கிருஷ்ணய்யங்கார் (1966), கபீர் அருள்வாக்கு (தி. சேஷாத்திரி) என்று தமிழில் வழங்கப்பட்டு உள்ளன.

பிற திராவிட மொழிகளும் தமிழோடு இலக்கியப் பரிமாற்றம் செய்து கொண்டன.

நிஜகுண யோகி கன்னடத்தில் இயற்றிய விவேக சிந்தாமணியின் வேதாந்த பரிச்சேதமும் (1892), தேவர நாம பதகளு (1964) என்ற கன்னட இறைப்பாடல் தொகுதியும் தமிழில் வழங்கப்பட்டுள்ளன.

தெலுங்கு மொழி சில சதகங்களையும், வேமனாவின் பல பாடல் மொழிபெயர்ப்புகளையும் தமிழிற்கு வழங்கியுள்ளது.

மலையாளத்திலிருந்து குமாரன் ஆசான் படைப்பும், வள்ளத்தோள் கவிதைகளும் தமிழில் அண்மைக் காலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.