2.5 புதினம்
கவிதை இலக்கியத்தை விட
உரைநடையிலக்கியம்
மொழிபெயர்ப்பதற்கு எளிமையானது. கதை
கூறும் புதின
இலக்கியம்
சுவை மிகுதி உடையது. பிற பொது நூல்களைக்
காட்டிலும் புதினம் பெருமளவு மொழிமாற்றம் அடைந்துள்ளது.
மூலக்கதைகள் புதினங்களாக உருவான காலத்திலும் கூட
மொழிபெயர்ப்புகளும்
எழுந்துள்ளன. இது திராவிட
மொழிகளுக்குப் புதுத்துறையாகும். உலகளாவிய புகழுடைய பல
புதினங்கள் உலகெங்கும் எழுந்தமையாலும் புதுமை நாட்டத்தை
நிறைவு செய்யவும் பரவலான மொழிமாற்றத்திற்கு இடம்
ஏற்பட்டது. ஒரே கவிதை பலரால் மொழிபெயர்க்கப்பட்டது
போல ஒரே புதினத்தைப் பலர் மொழிபெயர்த்துள்ளனர்.
தமிழில் சுமார் 550 நூல்கள் புதினம் மொழிபெயர்ப்புகளாக
உள்ளன. அதில் குறிப்பாக ஆங்கிலப் புதினங்கள் தமிழிற்குப்
பெருமளவு வந்துள்ளன.
• ஆங்கிலப் புதினங்கள்
சுமார் நானூறு ஆண்டுகள் ஆங்கில மொழியோடு
தொடர்பு கொண்டிருந்த தமிழக மக்களுக்கு ஆங்கில இலக்கிய
அறிமுகம் தமிழ் இலக்கிய வரலாற்றில் குறிப்பிடத்தக்க
தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, சுமார் முப்பது
ஆங்கிலேய எழுத்தாளர்களின் படைப்புகள் தமிழில் இடம்
பெற்றுள்ளன.
• பிரெஞ்சுப் புதினங்கள்
ஆங்கிலத்தளவு பெருமளவு மொழிபெயர்க்கப்பட்ட உலக,
இந்திய, திராவிட மொழிபெயர்ப்புகள் இல்லை என்றாலும்
குறிப்பிடத்தக்க சில புதினங்கள் உள்ளன. உலக மொழிகளில்
பிரெஞ்சு, ரஷ்யன் போன்றன இந்நிலையில் குறிப்பிடத்தக்கன.
பிரெஞ்சிலிருந்து
விக்டர் ஹ்யூகோ, அலெக்ஸாண்டர்
டூமோ, அனடோல்
பிரான்ஸ், ஜூல்ஸ்
வெர்ன்
முதலியவர்களின் நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
மாப்பசான் படைப்புகள் பலவும் தமிழில் வந்துள்ளன.
• ரஷ்யப் படைப்புகள்
ரஷ்யமொழிப் படைப்புகள் பலவும் தமிழில்
மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. அவை பின்வருமாறு :
மாக்சிம் கார்க்கியின்
தாய் பலரால்
மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. அம்மா (முல்லை முத்தையா,
1956), அன்னை (ப. ராமஸ்வாமி, 1946), தாய் (ரகுநாதன்,
1952) என உருவாகியுள்ளது. அதனைத் தற்காலத்தில் தாய்க்
காவியமாக கலைஞர் மு. கருணாநிதி எழுதி வருகிறார்.
அத்துடன் தந்தையின் காதலி (ரகுநாதன், 1963), மூவர்
(சு. பாலவிநாயகம், 1962), வாழ்க்கைப் படகு (எஸ். சங்கரன்,
1952)
என்பனவும் தமிழிற்கு வந்துள்ளன.
லியோ
டால்ஸ்டாயின் அன்னா கரீனா,
போரும் அமைதியும் முதலிய புதினங்கள் தமிழில் வந்துள்ளன.
அலெக்ஸாண்டர் குப்ரின், இவான்
துர்க்கனேவ்
முதலியவர்களின் புதினங்களும் தமிழில் வந்துள்ளன.
• ஜெர்மன் படைப்புகள்
ஜெர்மன் மொழியிலிருந்தும் ஆங்கில வழியாகத் தமிழிற்கு
வந்த நூல்களும் சில உள்ளன. ஹெர்மன் ஹெஸ்ஸேயின்
சித்தார்த்தன் நல்லதொரு தமிழ் நாவலாக வந்திருக்கிறது.
ஸ்பானிஷ்
மொழியிலிருந்து வான்டெஸ்ஸின்
டான்குவிக்ஸாட்
வந்துள்ளது.
• பிற இந்திய மொழிப் படைப்புகள்
இந்திய மொழிகள் பலவும் தமிழுக்கு ஏராளமான
புதினங்களை வழங்கியுள்ளன. அவற்றுள் வங்கமொழி
முன்னிற்கிறது.
இந்தியிலிருந்தும் மொழிபெயர்ப்பில்
படைப்புகள்
வெளிவந்துள்ளன. சுதர்சன், ராகுல சாங்கிருத்யாயன்,
பிரேம்சந்த் முதலியவர்களின் பல புதினங்கள் தமிழுக்கு
வந்துள்ளன. அவ்வாறே உருது, குஜராத்தி, ஒரிய
மொழிகளிலிருந்தும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. வங்க
மொழியைப் போலவே, மராத்தியிலிருந்தும் தமிழுக்குப் பல
புதினங்கள் வந்துள்ளன. பிற திராவிட மொழிகளிலிருந்தும்
தமிழ் புதினங்களைப் பெற்றது. கன்னடம், தெலுங்கு,
மலையாள மொழிகளிலிருந்து பல புதினங்கள் தமிழில்
மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
|