3.4 ஆட்சித்துறை, சட்டத்துறை மொழிபெயர்ப்புகள்
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்பு, தமிழ்நாட்டில் ஆட்சித்துறை, சட்டத்துறை, சட்டமன்றம், நீதித்துறை
போன்ற துறைகளில் தமிழ்வழியில் தொடர்புகள் ஏற்படுவதில்
இன்றும் கூட மொழிபெயர்ப்புப் பணி அவசியமாகிறது.
ஆட்சித்துறையிலும் சட்டத்துறைகளிலும் மொழிபெயர்ப்பு
எப்படி இருந்தது என்பதை இப்பகுதியில் அறியலாம்.
3.4.1 ஆட்சித்துறை மொழிபெயர்ப்பு
ஆட்சித்துறையில் ஆங்கிலம் புகுந்திருப்பதைத் தவிர்க்க
முடியாத நிலை இப்போது இருக்கிறது.
தமிழ் மொழியில் கோப்புகள் அமைய வேண்டும்
என்பதற்காகவே, அரசு அலுவலர்கள் தமிழில் கோப்புகளில்
கையெழுத்திட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. தமிழ்
அறியாத பிற மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் அதிகாரிகளாக
வந்தாலும் அவர்களும் தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும்
என்று ஆட்சி விதி இருக்கிறது. ஆட்சியை தமிழில் நடத்த
வாய்ப்பான துறை ஆட்சித்துறைதான்.
ஆங்கிலச்
சொற்களுக்குத் தொடக்கத்தில் பல மொழிபெயர்ப்புகளை
உருவாக்கிப் பயன்பாட்டில் விட்ட பிறகு மக்களே அவற்றைச்
சிறந்த சொல்லாக்கமாக்கி விடுவார்கள்.
3.4.2 ஆட்சித்தமிழ்ச் சொற்கள்
ஆட்சித்துறை விரிவடைந்துள்ளமையால், புதிய
சொற்களாக, வழக்கில் இல்லாதவையாக ஏராளமான சொற்கள்
தேவைப்படுகின்றன. பேச்சுவழக்கு, இலக்கியம், கல்வெட்டு,
பிறமொழி, புதுப்புனைவு ஆகிய வழிகளில் சொற்களை
உருவாக்கலாம். ஆட்சித் தமிழ்ச் சொற்களை மிகுந்த
கவனத்துடன் உருவாக்க வேண்டும். தவறான புரிதலுக்கு
வழிவகுத்து விடக்கூடாது என்பதைச் சிறப்பாகக் கவனத்தில்
கொள்ள வேண்டும். இந்த அடிப்படையில் 1976ஆம் ஆண்டு
தமிழ்நாட்டில் ஆட்சிமொழி தமிழாக இருக்க வேண்டும் என்று
சட்டம் இயற்றப்பட்ட பின்னர், பல அரபு, பாரசீகம்,
இந்துஸ்தானி, ஆங்கிலம் ஆகிய மொழிச் சொற்களுக்கு
இணையாகத் தமிழ்மொழிச் சொற்கள் உருவாக்கப்பட்டன.
3.4.3 ஆட்சித்தமிழ் வளர்ச்சியில் மொழிபெயர்ப்பு
தமிழ் வளர்ச்சி மற்றும்
பண்பாட்டுத்துறையின்
மொழிபெயர்ப்புப் பிரிவு, தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்நாடு
மாநில ஆட்சி மொழி (சட்டத்துறை)
ஆணையம், சட்டத்
(தமிழ்ப்பிரிவுத்) துறை, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்,
தமிழ்ப்பல்கலைக்கழகம், மருத்துவக் கல்வி இயக்ககம், தமிழ்நாடு
பாடநூல் நிறுவனம் முதலியன மொழிபெயர்ப்பில் கவனம்
செலுத்துகின்றன. இத்துறைகளில் பல தமிழ்மொழி
வளர்ச்சிக்காக ஏற்படுத்தப்பட்டவை. மேற்கண்ட அமைப்புகள்
மூலமாகச் சட்டத்துறை, ஆட்சித்துறை, நீதித்துறை, கல்வித்துறை
போன்ற பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு
அருந்தொண்டு ஆற்றிவருகிறது.
தமிழ்வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை மூலமாக
ஆட்சித்துறைக்கான அத்தனை ஆணைகளும், குறிப்புகளும்,
விதிகளும், துணை விதிகளும் மொழிபெயர்த்துத்
தரப்படுகின்றன.
ஆங்கில மருத்துவமுறைகளைத் தமிழில் கற்பிக்க
மருத்துவ நூல்களும், கலைச்சொற்களஞ்சியமும்
உருவாக்கப்பட்டு வருகின்றன.
3.4.4 சட்டத்துறை மொழிபெயர்ப்பு
இவை தவிர, நீதித்துறை தொடர்பான தீர்ப்புகளை
மட்டும்
தமிழில் மொழிபெயர்த்து
‘தீர்ப்புத்திரட்டு’ என்ற
இதழ்வாயிலாகவும், தொழிலாளர் தொடர்பான
தீர்ப்புகளை
‘உழைப்பவர் உலகம்’ என்ற இதழ்வாயிலாகவும்
தமிழ் பரப்பும்
பணிகளை அரசு ஏற்றுள்ளது. இவ்வாறு சட்டத்துறை, ஆட்சித்துறை, நீதித்துறைகளில் தமிழ் வளர்ச்சிக்கு
மொழிபெயர்ப்பு கைகொடுத்து
வருவதோடு, தமிழ்மொழி
இலக்கியம் சார்ந்த துறைகளிலும் அது கைகோத்து நிற்கிறது.
சட்டத்தைத் தமிழில் வரைபவர்கள்,
மொழிபெயர்ப்பு
மற்றும் சட்ட வரைவு
முறைகள் தொடர்பாகவும்,
மொழிஅமைப்பின் அடிப்படையில்
சட்டத்தைப் பொருள்
கொள்வதிலும், ஆங்கிலச் சொற்களுக்கு ஏற்ற தமிழ்ச் சொற்கள்
தேடியும் இடர்ப்பட நேர்கிறது. ஆங்கிலமொழி வளமான
சொற்களையும், மாதிரி நூல்களையும், வழக்குகள் கொண்ட
தொகுப்புகளையும் மிகுதியாகப் பெற்றுள்ளது. இன்னும் வகை
வகையான சட்ட அகராதிகளையும் கொண்டுள்ளது. ஆனால்
தமிழில் சரியான அளவில் அவசரத்திற்குப் பயன்படுத்தும்
வகையில் மாதிரி நூல்களோ, சட்டத் தமிழ்ச் சிறப்பு
அகராதிகளோ எதிர்பார்க்கும் தரத்தில் இல்லை.
|