4.1 இக்கால மொழிபெயர்ப்புகள்
ஏறத்தாழ எல்லாத் துறைகளிலும்
மொழிபெயர்ப்புகள் செழித்து வளர்ந்துள்ளன. குறிப்பாகத் தமிழ்மொழி
இலக்கிய மொழிபெயர்ப்பு என்ற வகையில், தற்காலத்தில் பெருமளவு மொழிபெயர்ப்புகளைக்
கொண்டுள்ளது. உலக நாடுகளில் உள்ள அனைத்து மொழிகளிலிருந்தும்
தமிழுக்கு இலக்கிய மொழிபெயர்ப்பு ஆகியுள்ளது.
சாகித்ய அகாடமி, தேசிய புத்தக
நிறுவனம் போன்ற மைய அரசு நிறுவனங்கள் வாயிலாக மொழிபெயர்க்கப்பட்டு
வெளியான நூல்கள், சில தனியார் பதிப்பகங்களின் வெளியீடுகள் எனப் பல்கிப்
பெருகிய இலக்கியங்கள் பெரும்பாலும் தமிழ்மொழி வளர் இலக்கியத் தொடர்ச்சிக்குக்
காரணமாக இருப்பதோடு புதிய இலக்கிய வடிவம், வகைகள் உருவாவதற்குக்
காரணமாகவும் இருந்துள்ளன; இருக்கின்றன.
இத்தகைய சூழ்நிலையில் இந்தியா
போன்ற பல்வேறு மொழிகள் பேசக்கூடிய மாநிலங்கள் அமைந்த நாடுகளில் ஒவ்வொரு
மொழியிலும் சமூகப் பண்பாட்டு வெளிப்பாடுகளாய் அமைந்த இலக்கியங்கள்
பல தோன்றி மக்களால் படிக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு தோன்றும்
இலக்கியங்கள் அந்தந்த மாநிலத்திலேயே நின்றுவிடாமல்,
அந்தந்த மொழிபேசும் மக்கள் மட்டுமே கற்றுப் பயன்படுவதாக நின்றுவிடாமல்
பல்வேறு மொழிகளுக்கு மொழிபெயர்ப்புகள் வாயிலாகச் சென்று அப்பயனை
விளைவிக்க வேண்டும். எனவே, இந்திய நாட்டின் மாநில மொழிகளுக்கிடையேயான
இலக்கிய மொழிபெயர்ப்புகள் என்றும், அண்டை அயல்நாடுகளிலிருந்து வந்த
இலக்கிய மொழிபெயர்ப்புகள் என்றும் அடையாளம் காட்ட வேண்டியது உள்ளது.
4.1.1 தமிழகத்தில் மொழிபெயர்ப்புச்
சூழல்
இந்தியாவில் மேலைநாட்டுக்
கல்வியின் தாக்கத்தால் 18ஆம் நூற்றாண்டில் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டது.
புதிய கல்வி முறையால், உலகக் கண்ணோட்டம் விரிந்து அகன்ற பார்வையை
இந்தியர்களில் சிலர் பெற்றனர். ஐரோப்பியரின் வருகையால் நிலப் பிரபுத்துவ
அரசுகள் அழிந்தன. அவர்களின் வணிகப் பொருளாதார அமைப்புகள் இந்தியாவின்
அரசியல், சமூகம், பண்பாடு ஆகிய துறைகளில் பெரிய மாற்றங்களை உருவாக்கின.
ஐரோப்பியக் கல்வியின் தாக்கத்தினால்
புதிய இலக்கிய வகைகள், இந்திய மொழிகளுக்கு
அறிமுகமாயின. இலக்கியங்களை அணுகுவதற்குரிய
நடுநிலையான திறனாய்வு நெறிமுறைகளும் அரும்பின.
புதிய செய்திகளையும் கருத்துகளையும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற
ஆவல் ஓரளவிற்கு, அப்போது கற்றவர்களிடம் பெருகியது. இந்த அறிவுப்
பசியைத் தணித்துக் கொள்வதற்காகச் சில அறிஞர்கள் பிறமொழி நூல்களைக்
கற்று இந்திய மொழிகளில் ஆக்கம் செய்ய முயன்றனர்.
ஆங்கிலேயர் இந்தியாவில்
தங்கள் ஆட்சியை நிலைநாட்டிய பிறகு, இந்திய மொழிகளும், ஆங்கிலமும்
அறிந்த மொழிபெயர்ப்பாளர்கள் பலர் தேவைப்பட்டனர். கிழக்கிந்திய வணிக
நிறுவனங்களுக்கு இருமொழி
வல்லுநர்களாக உதவிய இந்திய நாட்டு மக்களைத் துவிபாஷி (துபாஷி-இருமொழியாளர்)
என்னும் பெயரால் அழைத்தனர். ஒரு நூற்றாண்டிற்குள் இவர்கள் செல்வாக்குப்
பெருகி, மிகப்பெரிய அதிகாரிகளாக வாழ்வு பெற்றனர்.
இங்கிலாந்தில் இருந்து இந்தியா
வந்து ஆட்சிப் பொறுப்பையும் நீதித்துறை நிர்வாகத்தையும் ஏற்றுக்கொண்ட ஆங்கிலேயர்களுக்கு அந்தந்த வட்டார மொழிகளைப் பயிற்றுவிக்கும்
பொறுப்பினை அரசு ஏற்றது. இதன் மூலம் வட்டார மொழி
நூல்கள் ஆங்கிலத்தில்
மொழிபெயர்ப்பதற்குரிய வாய்ப்பும் உந்துதல் சக்தியும் பெற்றன. இத்தகைய
பின்னணியில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து தமிழில்
மொழிபெயர்ப்புக் கலை நன்கு வளரத் தொடங்கியது.
4.1.2 புதிய இலக்கிய வகைகள்
தல புராணங்கள், சிற்றிலக்கியங்கள்
என ஒன்றைப் பார்த்து மற்றொன்றை எழுதிக் கொண்டிருந்த தமிழ்ப் புலவர்களிடையே
மேலை நாட்டுக் கல்வி முறை, ஒரு புதிய திருப்பு மையமாக இருந்தது.
ஐரோப்பிய இலக்கிய வகைகளில் பல இந்தியர்களுக்குப் புதுமையானவையாக
இருந்தன. இதுவரை எல்லாவற்றையும் செய்யுள் நடையிலேயே சொல்லிக் கொண்டிருந்த
இந்தியப் புலவர்களுக்கு, கருத்தை எளிமையாக வெளியிடுவதற்கு ஏற்ற நடையாக
வசனம் பயன்பட்டது.
இலக்கியத் துறையில் புதினம்
என்ற நாவல், சிறுகதை முதலியன இந்தியர்களைக் கவர்ந்தன. கட்டுரை
என்னும் புதுவகை உரைநடை இலக்கியம், தன் உணர்ச்சிப் பாடல்கள் (Lyrics),
குறுங்காப்பியங்கள், நாடகங்கள், புதுக்கவிதை, ஹைக்கூ, சென்ரியூ
போன்ற இலக்கிய வகைமைகள் அறிமுகமாயின. இதன் விளைவாகத் தமிழில் பல
மொழிபெயர்ப்பு நூல்கள் தோன்றி வளர்ந்தன.
4.1.3 பாகுபாடு
இக்கால இலக்கிய மொழிபெயர்ப்புகளைப்
பின்வருமாறு பாகுபடுத்திக் கொள்ளலாம். அவை,
-
மேலைநாட்டு மொழிகளிலிருந்து தமிழ்மொழிக்கு மொழி பெயர்க்கப்பட்டவை.
-
சீன, ஜப்பானிய மொழிகளாகிய ஆசிய மொழிகளிலிருந்து தமிழ்மொழிக்கு
மொழிபெயர்க்கப்பட்டவை.
-
ஆங்கில மொழி நூல்கள்
-
வட இந்திய மொழிகளிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டவை.
-
தென்னிந்திய மொழிகளிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டவை.
மேலே சுட்டப்பட்டுள்ள பாகுபாட்டின்
அடிப்படையில் இந்தப் பாடத்தில் தற்கால
மொழிபெயர்ப்புகளைச் சுட்டிக்காட்டலாம். ஏறத்தாழ பல ஆண்டுகளாகத் தொடர்ந்து
நடந்து வரும் மொழிபெயர்ப்புப் பணியில் தற்கால மொழிபெயர்ப்புகள் இலக்கியத்
துறையில் பல்கிப் பெருகி உள்ள சூழ்நிலையைக் காணலாம். மேலும் நாள்தோறும்
நடைபெற்று வரும் மொழிபெயர்ப்புகள் நூல்களாக வந்த வண்ணம் உள்ளன. |