4.3 பிற ஐரோப்பியப் படைப்புகளின் தமிழாக்கம்
இத்தாலி மொழியிலிருந்து, இத்தாலியக் கதைகள் என்ற
கதைத் தொகுப்பையும், வாழ்க்கைப் படகு என்ற கதைத்
தொகுப்பையும் தமிழில் காணமுடிகிறது.
நார்வே நாட்டு இப்சனின் நாடகங்கள், தமிழில் பல
வடிவங்களில் நூலாக்கப்பட்டுள்ளன. தி
பில்லர்ஸ் ஆப்
சொசைட்டி (The Pillars of Society). ஆன் எனிமி ஆப்
த பீப்பிள் (An Enemy of the people) என்ற நாடகங்கள்
இரண்டையும் சமூகத்தின் தூண்கள், மக்களின் பகைவன்
என்ற பெயர்களில் கா.திரவியம் மொழிபெயர்த்துள்ளார்.
கோபுரத்தின் உச்சியிலே, தோல்வியின் சந்நிதானத்திலே
என்ற இரு நாடகங்களையும் கா.திரவியம்
மொழிபெயர்த்துள்ளார். பேய்கள் (Ghosts), காட்டு வாத்து
(The Wild Duck) என்னும் நாடகங்களை துரை.அரங்கசாமி
என்பவர் மொழிபெயர்த்துள்ளார். பொம்மையா? மனைவியா?
(The Doll’s house) என்னும் நாடகத்தை, க.நா.சுப்பிரமணியன்
தமிழாக்கம் செய்துள்ளார்.
அறிஞர் அண்ணாவின் நாடகங்களில் சில, இப்சனின்
நாடகங்கள் சிலவற்றைத் தழுவியனவாக
அமைந்துள்ளன.
மாஜினியின் சனநாயகத் தத்துவ விளக்கப் பேச்சுகள் சாமிநாத
சர்மாவால் தமிழாக்கம் பெற்றுள்ளன.
4.3.1 ஜெர்மானிய மொழி
ஜெர்மன் மொழியில் கதேயின் (Goethe) உலகப்
புகழ்பெற்ற Faust என்ற காப்பியத்தை, பாஸ்ட் என்ற
பெயரிலும், வாஸ்து என்ற
பெயரிலும் தமிழில்
மொழிபெயர்த்துள்ளனர்.
தென்மொழிகள் புத்தக டிரஸ்ட்டின் சார்பில்,
ஜெர்மானிய
இலக்கியத்தின் சிறப்புப் பகுதிகள் எனும் மொழிபெயர்ப்பு நூல்
ஒன்று, (Classical Readings form German literature என்ற
நூலின் தமிழாக்கம்) வெளியிடப்பட்டுள்ளது.
ஜெர்மானிய
மொழியில் செய்யப்பட்டுள்ளன தத்துவ ஆராய்ச்சிகளும்,
மொழியியல் ஆராய்ச்சிகளும் அவ்வப்போது ஆங்கிலம்
வழியாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
4.3.2 ரஷ்ய மொழியிலிருந்து மொழிபெயர்ப்புகள்
எண்ணப் பறவைகள், சிவப்புக் குயில்கள் ஆகிய
தலைப்புகளில் கோவேந்தன் ரஷ்ய மொழிக் கவிதைத்
தொகுப்புகளைத் தமிழில் தந்துள்ளார். தொ.மு.சி,ரகுநாதன்,
சோவியத் நாட்டுக் கதைகள் என்ற தொகுப்பையும்,
லெனின்
கவிதாஞ்சலி என்ற கவிதைகளையும் தமிழாக்கம் செய்துள்ளார்.
தமிழ்ச் சிறுகதைகளை வளப்படுத்தியதில் பெரும்பங்கு
வகிப்பவை ரஷ்ய இலக்கியங்கள் ஆகும். டால்ஸ்டாயின்
கதைகள் பல வகைத் தொகுப்புகளாகத் தமிழில்
வெளியிடப்பட்டுள்ளன. செகாவ் என்பவரின் சிறுகதைகளும்,
குறுநாவல்களும் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன. புஷ்கினுடைய
பல்வேறு கதைகள் தீபம் என்ற கதைத் தொகுப்பாக
வெளியிடப்பட்டுள்ளன. சிறுவர்களுக்கான ரஷ்ய சிறுகதைகள்
தமிழில் பல தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. டால்ஸ்டாயின்
அக்னிப் பரீட்சை என்ற புதினம், அன்னா கரீனினா,
போரும் காதலும் போன்றவை சிறப்பு மிக்க புதினங்களாகத்
தமிழில் வழங்குகின்றன.
மார்க்சிம் கார்க்கியின் Mother என்ற புதினம்,
1905இல்
அமெரிக்காவில் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டது.
ருஷிய
மொழியில் 1907ஆம் ஆண்டில்தான் வெளிவந்தது. இந்நூல்
தமிழில் அம்மா, அன்னை, தாய் என்ற
தலைப்புகளில்
வெளிவந்துள்ளது. 2005ஆம் ஆண்டு தாய் புதினத்தின்
நூற்றாண்டு விழா
கொண்டாடப்பட்டது. இப்புதினம்
கலைஞர் மு.கருணாநிதியால்
கவிதை வடிவில்
எழுதப்பட்டுள்ளது. இவான் துர்கனோவ் அவர்களின்
புதினங்கள், உணர்ச்சிப் பெருவெள்ளம், ஊமையின்
காதல், தந்தையும் மகனும் போன்ற
தலைப்புகளில்
தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன.
அலெக்சாண்டர் குப்ரின் எழுதிய யாமா தி பிட் என்ற
புதினத்தை, பலிபீடம் என்ற பெயரில், புதுமைப்பித்தன்
தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இவற்றைப் போன்ற சிறப்பு
மிக்க படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன.
டால்ஸ்டாயின் இருளின் வலிமை என்ற நாடகமும்
கோகோ என்பவரின் இன்ஸ்பெக்டர்
ஜெனரல் என்ற
நாடகமும் தமிழில் சிறப்பு மிக்கனவாகப் போற்றப்படுகின்றன.
டால்ஸ்டாயைப் பற்றி இதுவரை பலமொழிகளில்
23,000
நூல்களும், 56,000 கட்டுரைகளும் எழுதப்பட்டுள்ளன. போரும்
அமைதியும் (The War and Peace) என்ற நூலை எழுதி
முடிக்க அவருக்கு ஏழாண்டுகள் ஆயின.
முப்பத்தைந்து
முறைகள் அந்நூலைத் திருத்தி எழுதினார் என்ற செய்தி பதிவு
செய்யப்பட்டுள்ளது.
லெனினுடைய பேச்சும், எழுத்தும், அவரைப் பற்றி
எழுதப்பட்ட நூல்களும் உலகின் மிகுதியான மொழிகளில்
மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஏராளமான இந்திய
எழுத்தாளர்களின் படைப்புகள் ரஷ்யாவில்
ரஷ்ய மொழியில்
வெளிவருகின்றன.
|