''மொழி என்பது வெறும் தகவல் பரிமாற்றக் கருவி'' என்ற
பார்வையில் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. மொழியானது மனித உடலின் ஆறாவது
புலனாகச் செயற்படுகின்றது. உயிருள்ளதோர் உடலினைச் சமுதாயத்துடன் இணைக்கும்
பொதுப் புலனாக மொழி வினையாற்றுகிறது. இதனால் மொழியின் வளர்ச்சியானது
ஒட்டு மொத்தச் சமுதாயத்துடன் நெருங்கிய தொடர்புடையது. மொழியைத் தொடர்ந்து
வளர்த்திட மனிதனால் மட்டுமே இயலும். சமூக இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புடைய
மொழியானது, காலந்தோறும் மாறிவரும் புதிய போக்குகளை ஏற்றுக்
கொள்வதாக அமைய வேண்டியது அவசியம். இத்தகைய மொழியின் வளர்ச்சிக்கு ஆதாரமாகச்
சொற்கள் விளங்குகின்றன. சொற்களின்
கூட்டிணைப்பின் வழியே கருத்தியல் பரிமாற்றத்திற்கு உதவிடும்
மொழியின் மேம்பாடு என்பது சொல்லாக்கத்தினை அடிப்படையாகக்
கொண்டது. மொழிபெயர்ப்பில் முக்கிய இடம் வகிக்கும்
சொல்லாக்கம் பற்றிய அறிமுகத்தினையும் அதன் பல்வேறு சிறப்புக் கூறுகளையும்
புரிந்துகொள்ளும் வகையில்
இந்தப் பாடப்பகுதி அமைக்கப்பட்டுள்ளது.
|