1.5 தமிழில் சொல்லாக்கச் சிந்தனைகள்

உலகமெங்கும் புதிய கருவிகளும், புதிய கோட்பாடுகளும் தொடர்ந்து உருவாகிக் கொண்டே இருப்பதனால், அவற்றைக் குறிக்கும் சொற்களும் புதிதாய்த் தேவைப்படுகின்றன. இச்சொற்கள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன? எங்கிருந்து பிறக்கின்றன?

''தற்காலத்தில் நூலாசிரியர்கள், முக்கியமாக, விஞ்ஞான சாத்திரம் முதலியவற்றை மொழிபெயர்க்கும் முயற்சியில் ஈடுபட்டவர்கள், பத்திராதிபர்கள் முதலியோர் புதுப்புதுப் பதங்களை இயற்றுகின்றனர் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையை ஆராய்ந்து பார்ப்போமானால் அவர்கள் புதிய பதங்களைப் புத்தம் புதியனவாய் இயற்றுகின்றார்கள் என்று சொல்ல முடியாது'' என்கிறார் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை. சொற்கள் புத்தம் புதியதாகப் பிறப்பதில்லை என்று குறிப்பிடும் வையாபுரிப் பிள்ளை, இரு சொற்களின் சேர்க்கையாலோ, அல்லது சொற்கள் விகாரப்பட்டோ, வினையடிகள் தாமாக நின்று அல்லது நீட்டல் முதலிய விகாரங்கள் பெற்றுப் புதிய விகுதிகள் சேர்க்கப் பெற்றோ, சொல்லாக்கம் நடைபெறுகிறது என்கிறார். தமிழில் அமைந்துள்ள சொல்லாக்க முறைகளைப்பற்றி முழுமையாகக் கூறாவிடினும், சொல்லாக்கம் பற்றிய பொதுவான அறிமுகத்தினைப் பேராசிரியர் விவரித்துள்ளார்.


1.5.1 புதிய கல்வியும் சொல்லாக்கமும்

சொல்லாக்கம், எழுத்துமொழி தோன்றிய காலம் முதலாகவே நடைபெற்றிருக்க வாய்ப்புண்டு. எனினும் நவீன அறிவியலின் வளர்ச்சிக்கேற்ப, சொல்லாக்கம் பெரிய அளவில் தமிழில் நடைபெறத் தொடங்கியது என்று உறுதியாகக் கூறவியலும்.

மரபு வழிப்பட்ட குருகுலச் சூழலில், திண்ணைப் பள்ளிக் கூடங்களில் கல்வி கற்பிக்கப்பட்ட தமிழகத்தில், கி.பி.19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் அறிமுகப்படுத்திய கல்விமுறை பெரும் மாற்றத்தினைத் தோற்றுவித்தது. ஆங்கிலமொழியில் எழுதப்பட்டிருந்த பாடநூற்களைத் தமிழில் மொழிபெயர்ப்பது கி.பி.1832இல் தொடங்கியது. இன்று வரையிலும் தொடர்ந்து அறிவியல் நூற்கள் தமிழாக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய முயற்சிகளில் சொல்லாக்கம் பெரிதும் அடிப்படையாக விளங்குகின்றது.

  • தொடக்க காலம்

கி.பி.1832ஆம் ஆண்டு பூமி சாஸ்திரம் என்ற அறிவியல் நூல், இரேனியஸ் ஐயரால் தமிழில் வெளியிடப்பட்டது. இந்நூலில் புவியியல் தொடர்பாக ஐம்பத்தொரு கலைச்சொற்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சொல்லாக்க முயற்சியில் தமிழில் இதுவே முதன் முதல் வெளியான நூல் ஆகும்.

கி.பி.1847ஆம் ஆண்டு இலங்கை நாட்டிற்கு வந்த மருத்துவத்துறைப் பேராசிரியரான ஃபிஷ் கிரீன், முதன் முதலாகத் தமிழில் மருத்துவத்தினைப் போதிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதனால் மருத்துவத் துறையில் ஆங்கிலக் கலைச்சொற்களுக்கு நிகரான தமிழ்ச்சொற்களை உருவாக்க வேண்டிய நிலையேற்பட்டது. தமிழ்ச் சொல்லாக்கத்தில் இவர் பின்பற்றிய நெறிமுறைகள் பின் வருமாறு:

(1) தமிழிலேயே கலைச்சொற்களை உருவாக்குதல்.

(2) தமிழில் கலைச்சொல் கிடைக்கவில்லையெனில் அதற்கு நிகரான சமஸ்கிருதச் சொல்லைப் பயன்படுத்துதல்.

(3) தமிழ் அல்லது சமஸ்கிருதத்தில் சொல்லாக்கம் உருவாக்க இயலாவிடில், ஆங்கிலச்சொல்லை ஒலிபெயர்ப்பில் பயன்படுத்துதல்.

ஃபிஷ் கிரீன், 1875ஆம் ஆண்டில் எஸ்.சுவாமிநாதன், சாப்மன் ஆகியோரின் துணையுடன் மருத்துவம் தொடர்பான கலைச்சொற்களைத் தொகுத்து நான்கு தொகுதிகளாக வெளியிட்டுள்ளார். சொல்லாக்கத்தின் காரணமாக உருவாக்கப்பட்ட சொற்களைத் தொகுத்து வெளியிடுவது, தமிழில் வெளியிடுவது இதுவே முதன் முறை ஆகும். இதனால் அறிவியல் நூல்களைத் தமிழாக்கியவர்கள் பெரிதும் பயன் அடைந்தனர்.

  • நிறுவனங்களும் சொல்லாக்கமும்

பாடப் புத்தகம் எழுதுவோரும், அதைப் பயிலும் மாணவரும் பயன் அடையும் வகையில் சென்னை மாகாணக் கல்வி இயக்குநர், 1932ஆம் ஆண்டில் கலைச்சொல்லாக்கத்திற்காக அறிஞர் குழு ஒன்றினை நியமித்தார். இக் குழுவினர் உருவாக்கிய சொற்களஞ்சியம் கிடைக்கவில்லை.

1932ஆம் ஆண்டில் சென்னை மாகாண அரசு நிறுவிய குழு தயாரித்த சொற்களஞ்சியத்தில் சமஸ்கிருதச் சொற்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது.

சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் 1936இல் வெளியிட்ட கலைச்சொல் தொகுதி, சொல்லாக்க முயற்சியில் ஈடுபடுவோருக்கு முன்னோடியாக விளங்கியது.

1955ஆம் ஆண்டு இலங்கையில் வெளியிடப்பட்ட கலைச்சொற்களின் தொகுப்பில் சமஸ்கிருதச் சொற்கள் நீக்கப்பட்டிருந்தன.

1957ஆம் ஆண்டிலும் 1962ஆம் ஆண்டிலும், 1971ஆம் ஆண்டிலும் தமிழக அரசின் முயற்சி காரணமாகக் கலைச்சொல் தொகுதிகள் வெளியாயின. இத்தொகுதிகளில் இடம்பெற்ற சொல்லாக்கங்கள் தரமானவையாக விளங்கின.

1971ஆம் ஆண்டிலிருந்து தமிழக அரசினால் வெளியிடப்பட்டு வரும் ஆட்சிச் சொல்லகராதிகளும், சிறப்புச் சொற்களின் துணையகராதிகளும் சொல்லாக்கத்தினை மூலமாகக் கொண்டனவாகும்.


1.5.2 சொல்லாக்க நெறியில் தமிழின் இடம்

உலகமெங்கும் பொது வழக்காக இடம்பெறும் அறிவியல் அளவைகள், குறியீடுகள் போன்றன தவிர்த்துப் பிற சொற்களை, கூடிய மட்டும் தமிழ் மொழியின் மரபினுக்கேற்பச் சொல்லாக்குதல் வேண்டும் என்பது ஏற்புடைய கருத்து. எனினும் ஏற்கெனவே மக்களிடம் வழக்கில் வந்து பல்லாண்டுகளாக நிலைபெற்றுவிட்ட பிறமொழிப் பெயர்ச் சொற்களையும் தமிழாக்க வேண்டும் என்று தமிழறிஞர்களில் சிலர் கூறுகின்றனர். தமிழுடன் இரண்டறக் கலந்து தமிழ்மயமாகி விட்ட எந்தவொரு பிறமொழிச் சொல்லையும், அதன் வளம் கருதித் தமிழில் சேர்த்துக் கொள்வதில் தவறில்லை என்பது இன்னொரு பிரிவினரின் கருத்து. தமிழிலேயே சிந்தித்து அறிவியல் தொழில் நுட்பக்கட்டுரைகள் எழுதுமளவு வல்லுநர்கள் எண்ணிக்கை பெருகிடும்போதும், தமிழில் உயர்கல்வி சாத்தியம் என்ற நிலையிலும் சொல்லாக்கத்தில் தனித் தமிழினை எதிர்பார்க்க இயலும். அதுவரையில் சொல்லாக்கத்தில் தனித்தமிழைப் புகுத்துவது வரட்டுத்தனமாகி விடும்.

மக்களிடம் அன்றாட வழக்கில் இடம்பெற்றுவிட்ட காப்பி, சிமெண்ட், ஐஸ் போன்ற சொற்களைத் தமிழாக்குவது குழப்பத்தினையே ஏற்படுத்தும்.

எடுத்துக்காட்டு :

சிமெண்ட் - கற்காரை
காப்பி - குழம்பி

.