1.7 சொல்லாக்கத்தின்
பயன்கள் |
அறிவியல் தொழில்நுட்பத்தில்
மேலோங்கியுள்ள மேலை
நாடுகளில் நடைபெறும் பல்துறை ஆய்வுகளையும், வளரும்
நாடுகளில் வாழ்ந்திடும் மக்கள் அறிந்திட, சொல்லாக்கம்
அடிப்படையானதாகும். இதனால் ஒவ்வொருவரும் தாய்மொழி
மூலம் உலகமெங்கும் நடைபெறும் அறிவியல் மாற்றங்களையும்
விளைவுகளையும் எளிதில் கண்டறிய முடியும். இந்தச் சூழலில்
எல்லா நாடுகளிலும் அறிவியலாளர்களின் எண்ணிக்கை பல்கிப்
பெருகிடும் நிலையேற்படும். தொழில்நுட்பத்தினைப் பெறுவதற்காக
இன்னொரு நாட்டினிடம் கையேந்துவதுடன், அந்நாட்டின்
அதிகாரத்தினுக்கும் கட்டுப்பட்டுச் செயற்படும் நிலை மாற்றமடையும்.
இதனால் ஒவ்வொரு நாட்டின் இறையாண்மையும் காக்கப்படும்.
சொல்லாக்க அறிவானது அத்துறையின் வளர்ச்சிக்கு
அடிப்படையாக விளங்குவதுடன், மொழியின் வளர்ச்சிக்கும்
ஆதாரமாகும். உயர்கல்வியினைத் தாய்மொழியில் பயிற்றுவிக்காத
நாடுகளில், சில நூற்றாண்டுகளில் தாய்மொழியானது வீட்டு
மொழியாகச் சுருங்கி வழக்கொழிந்து விடும் என்று யுனெஸ்கோவின்
அறிக்கை எச்சரித்துள்ளது. தமிழைப் பொறுத்தவரையில் அறிவியல்,
மருத்துவம், பொறியியல் போன்ற உயர்கல்வித் துறைகளில்
சாத்தியமற்ற நிலை உள்ளது. தமிழில் உயர்கல்விக்கான பாடநூல்கள்
இல்லை; அப்பாட நூல்களை எழுதுவதற்கான சொற்களஞ்சியமும்
இல்லை என்று சிலர் முட்டுக்கட்டை போட்டுக்கொண்டிருக்கின்றனர்.
இத்தகைய தடைகளை அகற்றி, உயர்கல்வியைத் தமிழில்
கற்பிப்பதற்கான நிலையை ஏற்படுத்திட, துறைதோறும் நடைபெற்றுக்
கொண்டிருக்கும் சொல்லாக்கங்கள் அடிப்படையாக விளங்குகின்றன.
எனவே இரண்டாயிரமாண்டு வரலாற்றுப் பழமையான தமிழ்
மொழியானது, எதிர்காலத்தில்
எதிர்கொள்ளவிருக்கும்
பிரச்சினைகளைத் தகர்த்து, காலத்துக்கேற்றவாறு சீரிளமைத்
திறத்துடன் விளங்க வேண்டுமெனில், சொல்லாக்க முயற்சிகள்
தொடர்ந்து இடைவிடாமல் நடைபெறவேண்டியது அவசியம்.
1.7.1 சொல்லாக்கத்தின் விளைவுகள்
சொல்லாக்கம் காரணமாகத் தமிழ்மொழியின் ஒலியமைப்பிலும்
சொல்லமைப்பிலும் பொருள் புலப்பாட்டிலும் மாற்றங்கள்
ஏற்பட்டுள்ளன. சொல்லாக்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள சொற்கள்,
மரபு வழிப்பட்ட தமிழ் இலக்கணத்தில் மாற்றங்களைக்
கோருகின்றன.
மொழியியலின் பிற பிரிவுகளைக் காட்டிலும்
இலக்கணத்துடன்
நெருங்கிய தொடர்புடையது சொல்லாக்கம். சொல்லாக்கம்
மரபிலக்கணத்துடன் வேறுபடும் இடங்களைக் கண்டறிந்து புதிய
இலக்கண விதிகளை வகுக்க வேண்டிய தேவை இன்று
ஏற்பட்டுள்ளது. இது மொழியியல் அடிப்படையில் சொல்லாக்கம்
ஏற்படுத்தியுள்ள முக்கிய விளைவு ஆகும்.
|