சொல்லாக்க முயற்சியில்
ஈடுபட்டிருக்கும் வல்லுநர்கள் இரு
மொழியறிவு பெற்றிருக்க வேண்டும். அதனுடன் தமிழில்
சொற்களின் மூலம், அமைப்பு, செயற்பாடு பற்றியும் அறிந்திருக்க
வேண்டியது அவசியம். மொழிப் பயன்பாட்டில் கருத்துப்
பரிமாற்றத்திற்கு அடிப்படையாக விளங்கும் சொற்கள், பல்வேறு
பரிமாணங்களைக் கொண்டவை. அவை மொழியின் வளத்திற்கு
ஆதாரமாக விளங்குகின்றன. மனிதகுல வரலாற்றில், சொற்களின்
வழியே இலக்கியம், செய்திகள், தகவல்கள் முதலியவை
பதியப்பட்டது முக்கியமான திருப்புமுனை ஆகும். சொற்களின்
வழியே கட்டமைக்கப்படும் மொழியானது நாடு, இனம் போன்ற
பேதங்கள் மூலம் அரசியலைக் கூர்மைப்படுத்துவதுடன்,
அதிகாரத்தின் வழியாக ஆட்சி நடத்துகின்றது. எல்லாவிதமான
கருத்தாடல்களும் சொற்களின் வழியேதான் கட்டமைக்கப்படுகின்றன. இத்தகைய சொற்கள், சொல்லாக்கத்தின்
அடிப்படையாக விளங்குகின்றன. இந்நிலையில் சொல்லாக்கத்தில்
ஈடுபடுவோர் சொற்கள் தோன்றக் காரணமாயுள்ள மூலங்களைக்
கண்டறிய வேண்டியுள்ளது. சொற்களைச் சேகரிப்பதற்குக் கண்டறிய
வேண்டிய மூலங்களின் பல்வேறு அம்சங்களைப் பற்றி இந்தப்
பாடப்பகுதி விளக்குகின்றது.
|